Jan 20 – சித்தமுண்டு!
“எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்” (மத். 8:3).
நீங்கள் சுகம் பெற வேண்டும் என்றும் ஆரோக்கியமுள்ளவர்களாய்த் திகழ வேண்டும் என்றும் கர்த்தர் சித்தமுள்ளவராயிருக்கிறார். நீங்கள் சுகமும், ஆரோக்கியமுமுடையவர்களாய் இருந்தால்தான் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், கர்த்தருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய முடியும்.
அன்று குஷ்டரோகி ஆண்டவரிடத்தில், “உமக்குச் சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்றான். யாருமே தேவன் தன்னைச் சுகமாக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார் என்பதைச் சந்தேகப்படுவதில்லை. சித்தமுடையவராய் இருக்கிறாரா என்பதைத்தான் சந்தேகிக்கிறார்கள். வேதம் சொல்லுகிறது, “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிப்பட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்… அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:4,5).
நீங்கள் ஏற்க வேண்டியதை உங்களுக்குப் பதிலாக அவர் ஏற்றார். நீங்கள் சுமக்க வேண்டியதை உங்களுக்குப் பதிலாக அவர் சுமந்தார். அவர் உங்களுக்காக ஏற்றுக்கொண்டு, சுமந்து கொண்டு விட்டதை நீங்கள் மீண்டும், மீண்டும் ஏற்றுக்கொண்டு, சுமக்க வேண்டிய அவசியமில்லை. அவர் உங்களுக்காக அபராதத் தொகையைக் கட்டி விட்ட பின்பு, நீங்கள் வீணாக இன்னொரு முறை அபராதத் தொகையைக் கட்ட வேண்டிய தேவை என்ன?
கர்த்தர் மூன்று விதமான பாடுகளை அனுபவித்தார். முதலாவது, பாவமறியாத அவர் உங்களுக்காகப் பாவமானார். ஆகவே நீங்கள் பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. இரண்டாவது, ஆரோக்கியமுள்ள அவர் உங்களுடைய வியாதியைச் சுமந்தார். ஆகவே நீங்கள் வியாதியை வீணாய் சுமக்கத் தேவையில்லை. முன்றாவது, அவர் ஐசுவரியமுள்ளவராய் இருந்தும் உங்களுக்காக தரித்திரரானார். ஆகவே தரித்திரத்தின் வேதனையை நீங்கள் சுமக்க வேண்டியதில்லை.
இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்தபோது, லண்டன் மாநகரத்தின் மீது தினந்தோறும் பயங்கரமாகக் குண்டுகள் வீசப்பட்டன. பயந்து இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்த ஒருவர் வேதத்தைத் திறந்தார். “இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதும் இல்லை தூங்குகிறதும் இல்லை” என்ற வசனத்தைப் பார்த்தார். விசுவாசம் அவருடைய உள்ளத்தில் தோன்றியது.
கர்த்தர்தான் விழித்துக் கொண்டிருக்கிறாரே. உறங்காமலும், தூங்காமலும் இருக்கிறாரே, நான் விழித்திருந்து என்ன பிரயோஜனம் என்று எண்ணி, நிம்மதியாய் தூங்கி விட்டார். இரண்டு பேரும் விழித்திருக்கத் தேவையில்லை. அதைப்போல இரண்டு பேரும் வியாதியைச் சுமக்க வேண்டிய அவசியமில்லை.
தேவபிள்ளைகளே, உங்களுடைய வியாதியையும், பெலவீனத்தையும் அவர்மேல் வைத்து விடுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார்.
நினைவிற்கு:- “அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்” (மத். 8:16).