AppamAppam - Tamil

Mar 3 – மதிலான அக்கினி!

“நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன்” (சகரி. 2:5).

கர்த்தர் உங்களைப் பாதுகாக்கும் அக்கினியானவர். உங்களைச் சுற்றிலும் மதிலாய் நிற்கக்கூடியவர். எந்தச் சத்துருவும் நெருங்கவோ, தீங்கு இழைக்கவோ முடியாதபடி உங்களைச் சூழ்ந்திருக்கும் அக்கினியானவர்.

 ஒரு சகோதரன், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஊழியத்திற்காக சென்றிருந்தபோது, அவரை அழைத்திருந்த போதகர் பிரசங்க நேரத்திற்கு முன்பாக அவரிடத்தில் ஓடிவந்து, “சகோதரனே, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார். அந்தச் சகோதரன் ‘ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்’ என்று கேட்டார்.

அதற்கு அவர், “சகோதரனே, இந்த ஆலயத்தின் பின்பகுதியில், இந்த ஊரிலுள்ள கொடிய மந்திரவாதிகள் வந்து அமர்ந்திருக்கிறார்கள். யாராவது புதிய பிரசங்கிமார் அபிஷேகம் பெறாமல் பிரசங்கம் பண்ண வந்தால், அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வாயைக் கட்டிவிடுவார்கள்” என்று சொன்னார். அதற்கு அந்த சகோதரன், “கர்த்தர் என்னை பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் நிரப்பியிருக்கிறார்; ஆகையால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்றார்.

அன்று, அவர் கல்வாரியின் நேச அக்கினியைப் பற்றி அவர்கள் மத்தியில் பேசியபோது ஏராளமான பேர் ஒப்புக் கொடுத்தார்கள். அதில் பின் பகுதியில் உட்கார்ந்திருந்த மந்திரவாதிகளும் தங்களை அர்ப்பணித்து ஒப்புக்கொடுக்க முன் வந்தார்கள். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை அக்கினி மதிலாயிருந்து பாதுகாப்பதுடன், அவர்களை அக்கினி ஜூவாலையாகவும் வழிநடத்துகிறார்.

யோசுவாவின் புத்தகம், நியாயாதிபதிகளின் புத்தகம், இராஜாக்களின் புத்தகம் ஆகியவற்றை வாசித்துப் பார்ப்பீர்களென்றால், கர்த்தர் எவ்விதமாய் தம்முடைய ஜனங்களைப் பாதுகாத்தார், எப்படி ஜனங்களுக்காக யுத்தம் செய்தார், எப்படி அக்கினி மதிலாய் சூழ்ந்திருந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொள்ளலாம்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் சிசெரா யுத்தத்திற்கு வந்தபோது, “வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின” (நியா. 5:20). அதைப் போல இஸ்ரவேலருக்கு முன்பாக கர்த்தர் கானானியரைத் துரத்தும்படி குளவிகளை அனுப்பினார். ஆயிரக்கணக்கில் குளவிகள் பறந்து வந்து யுத்த வீரர்களைப் போல நின்று கானானியரைத் துரத்தியடித்தது (யாத். 23:28).

எகிப்தியர் இஸ்ரவேலரைத் துரத்திக் கொண்டு வந்தபோது, சிவந்த சமுத்திரத்தின் கரையிலே கர்த்தர் அக்கினி ஸ்தம்பங்களை இரண்டு பேருக்கும் மத்தியிலே வைத்தார். அது எகிப்தியரின் சேனையை செயலற்றுப் போகச் செய்தது. எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாயிருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று (யாத். 14:20) என்று வேதம் சொல்லுகிறது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களைப் பாதுகாக்கிறவர். அக்கினி அபிஷேகத்தைத் தந்து உங்களை வழி நடத்துகிறவரும் அவரே.

நினைவிற்கு:- “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.