Category: Appam – Tamil

ஏப்ரல் 14 – செழிப்பான மேட்டிலே!

“என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு” (ஏசா. 5:1).

செழிப்பான மேட்டிலே, நல்ல உரமும், நல்ல மண்ணும், நல்ல நீர் பாசனமுமுண்டு. மட்டுமல்ல, செடிகள் ஓங்கி வளருவதற்கான சீதோஷண நிலைகளுமுண்டு. சரி, உங்களுடைய செழிப்பு என்ன? முதலாவது, கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிற பிரதான செழிப்பு புத்திரசுவிகாரம்தான். ஆகவே நீங்கள் அவரை அன்போடு ‘அப்பா, பிதாவே’ என்று அழைக்கிறீர்கள்.

இரண்டாவது, உங்களுக்கு இருக்கிற செழிப்பு, கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள். வேதம் முழுவதிலும் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வல்லமையான வாக்குத்தத்தங்களை உங்களுக்குத் தந்திருக்கிறார். அவை மகா மேன்மையானவை, செழிப்பானவை, அருமையானவை. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன.

மூன்றாவது, கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற செழிப்பு, அவரோடுகூட நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையாகும். முதன் முதல் ஆதாமோடு உடன்படிக்கை செய்து, சர்ப்பத்தின் தலையை நசுக்குகிற மேசியாவை வாக்களித்தார். நோவாவோடு உடன்படிக்கை செய்து இனி ஜலப்பிரளயத்தினால் உலகத்தை அழிப்பதில்லை என்றும் அதற்கு அடையாளமாக வானவில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன் என்றும் உறுதி கூறினார். இஸ்ரவேல் ஜனங்களோடும் நியாயப்பிரமாணத்தின் மூலமாய் உடன்படிக்கை செய்தார். இன்று இயேசு கிறிஸ்து உங்களோடு தம்முடைய இரத்தத்தினாலே புது உடன்படிக்கை செய்திருக்கிறார்.

நான்காவது, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற செழிப்பு தேவனை ஆராதிக்கும் ஆராதனைகள். பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களைப் பார்க்கிலும் உங்களை தமக்கென்று தெரிந்துகொண்ட ஆண்டவர், உங்களுக்கு ஆராதனை முறையையும், தேவ ஊழியர்களையும், பரலோக செய்திகளையும் தந்திருக்கிறார். ஆராதனை நேரத்தில் தேவப் பிரசன்னத்தினால், உங்களை நிரப்புகிறார். நீங்கள் ஆராதனை செய்யும்போதெல்லாம் உலகமெங்குமுள்ள பரிசுத்தவான்களோடு மட்டுமல்ல, பரலோகத்திலுள்ள கேருபீன்களோடும் சேராபீன்களோடும் எண்ணற்ற தேவதூதர்களோடும்கூட இணைக்கப்பட்டு விடுகிறீர்கள். பூமியின் ஆராதனைகள் பரலோக ஆராதனைக்கு நிழலாட்டமாயிருக்கிறது.

கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற எண்ணற்ற செழிப்புகளிலே, பாவ மன்னிப்புண்டு, இரட்சிப்புண்டு, தெய்வீக சமாதானமுண்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகமுண்டு, நித்திய ஜீவனுண்டு, ஆவியின் வரங்களுண்டு, ஆவியின் கனிகளுண்டு. சங்கீதக்காரன் சொல்லுகிறார், “செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்” (சங். 66:12). “நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” (சங். 16:6). தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் அதை செழிப்பாக்க முடியும் (சங். 65:9).

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற மேன்மையான ஆசீர்வாதங்களை எண்ணி அவரைத் துதியுங்கள்.

நினைவிற்கு:- “உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்” (உபா. 8:7).

ஏப்ரல் 13 – முட்செடியும், திராட்சச் செடியும்!

“முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?” (மத். 7:16).

கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிப்பதற்கென்றே கர்த்தர் இந்த வார்த்தைகளைச் சொல்லியுள்ளார். செடி என்ன செடியோ அந்த செடிக்குரிய கனிகள்தான் அதில் காணப்பட முடியும். இயேசு சொன்னார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத். 7:20).

நீங்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, நல்ல திராட்சச் செடியாகிய அவரோடுகூட ஒட்டப்படுகிறீர்கள். பழையவைகள் ஒழிந்து போகின்றன. எல்லாம் புதிதாகின்றன. கிறிஸ்துவோடுகூட ஒட்டப்பட்ட நீங்கள், அவரோடுகூட நிலைத்திருக்க வேண்டும். அவரிலே இணைக்கப்பட்டு அவரோடுகூட இடைவிடாமல் உறவாடிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சுபாவத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்கிறவர்களாக இருப்பீர்கள். அப்படியிருந்தால் மட்டுமே உங்களிலே ஆவிக்குரிய கனிகள் காணப்படும்.

இயேசு சொன்னார்: “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத். 7:17-20). கனிகள் மரத்தை வெளிப்படுத்துகிறதுபோல நீங்கள் எப்போதும் கிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டும்.

இயேசுகிறிஸ்து தன் வாழ்நாளெல்லாம் பிதாவை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். வேதம் சொல்லுகிறது “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்தார்” (எபி. 1:3). பிதாவுக்கேற்ற கனிகளைக் கொடுத்ததினால்தான் இயேசு கிறிஸ்துவினால், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று திட்டமும் தெளிவுமாய் கூற முடிந்தது (யோவான் 14:9). தேவபிள்ளைகளே, உங்களைக் காண்பவர்கள் உங்களிலே, கிறிஸ்துவையே காண வேண்டும்.

ஒரு முறை, தேவ ஊழியர் ஒருவர் ஒரு வீட்டுக்கு சென்றபோது அங்கே கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. கணவனைக் குறித்து மனைவி போதகரிடத்திலே, கோபமாக, ‘ஐயா இவர் ஆலயத்திலே தேவதூதன் மாதிரி இருக்கிறார். வீட்டிலோ பிசாசு போல சண்டை போடுகிறார் என்ன செய்வது?’ என்றார்கள். கணவன் சொன்னார், ‘நானாவது ஆலயத்தில் தேவதூதனைப் போல இருக்கிறேன். என் மனைவியோ ஆலயத்திலும் பிசாசுபோல இருக்கிறாள். வீட்டிலும் பிசாசு போல இருக்கிறாள். இதைவிட நான் நரகத்தில் வாழ்வது மேல்’ என்றார்.

“உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்” (யாக். 3:13) என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும், செயலும் கிறிஸ்துவை வெளிப்படுத்துபவையாகவே இருக்கட்டும். தவறியும் சாத்தானுக்கு இடங்கொடாதீர்கள்.

நினைவிற்கு:- “விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்” (சகரி. 8:12).

ஏப்ரல் 12 – சிநேகிக்கும் கர்த்தர்!

“மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்’ (உபா. 33:3).

வேதத்தின் ஒவ்வொரு பக்கமும் கூறும் நற்செய்தி என்ன? “தேவன் ஜனங்களை நேசிக்கிறார்” என்பதுதான். ‘மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார்’ என்று மோசே சொல்லுகிறார்.

மோசே, முதல் நாற்பது ஆண்டுகளை பார்வோனுடைய அரண்மனையிலே செலவழித்தார். பிறந்ததுமே நாணற்பெட்டியிலே பாதுகாக்கப்பட்டு, அற்புதமாக பார்வோனுடைய அரண்மனைக்கு தன்னைக் கொண்டு சென்றதே கர்த்தருடைய அன்பு என்பதை உணர்ந்தார். அடுத்த நாற்பது ஆண்டுகள், தன் மாமனாராகிய எத்திரோவின் வீட்டில் இருந்தது கர்த்தர் தனக்கு அன்புடன் பயிற்சி கொடுக்கவே என்பதை உணர்ந்தார். மேலும், அடுத்த நாற்பது ஆண்டுகள் கர்த்தருடைய அன்பையும், சிநேகிதத்தையும் அளவில்லாமல் உணர்ந்தார்.

கர்த்தர் தம்முடைய ஜனங்களை சிநேகித்து, பார்வோனுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததைக் கண்டு மோசே பரவசமடைந்தார். ஜனங்கள் மீது அன்பு வைத்து, தேவ தூதர்களின் உணவாகிய வானத்து மன்னாவைக் கொடுத்து போஷித்தார் என்பதையெல்லாம் அவர் சிந்தித்துப் பார்த்தார். ஆகவே தன்னுடைய நூற்று இருபதாவது வயதில் ஜனங்களை எல்லாம் தன்னன்டை கூட்டிவந்து அந்த அன்பின் செய்தியைக் கூறும்படி தீர்மானித்தார்.

அந்த செய்தி “மெய்யாகவே அவர் ஜனங்களை சிநேகிக்கிறார்” என்பதாகும். அவரே அன்பின் ஆரம்பம். அவரே அன்பின் நிறைவானவர். அன்புக்கு அல்பாவும் அவர்தான், ஒமோகாவும் அவர்தான். நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று சொன்னவர் (யாத். 3:14) அன்பில் மாறாதவராயிருக்கிறார்.

ஒருவேளை உங்களுடைய உள்ளம், ஒரு உத்தமமான சிநேகிதரை நாடக்கூடும். உங்களுடைய உள்ளம் அன்புக்காக ஏங்கக்கூடும். வாழ்க்கையிலே பலவிதமான குழப்பங்கள், பாரங்கள்,நெருக்கங்களினாலே யாரிடத்தில் போவேன், யார் எனக்கு அன்பு காண்பிப்பார்கள் என்று உள்ளம் ஏங்கலாம். இன்று இயேசு உங்களை அன்போடுகூட அழைக்கிறார். இயேசு சொன்னார், “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரே. 31:3).

நம்முடைய தேவன் அன்புள்ளவர். அவர் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது (1 யோவான் 4:8). ஆண்டவர் உங்களை அளவற்ற அன்பினால் சிநேகிக்கிறார். அந்த சிநேகம்தானே உங்களுக்காக தியாகபலியாக வார்க்கப்பட்டது. அவரது சரீரம் கல்வாரியில் கிழிக்கப்பட்டது. அந்த சிநேகம்தானே இரத்தத்தின் பெருந்துளிகளாய் கீழே விழுந்தது. அந்த சிநேகிதம்தானே அவருடைய விலாவிலிருந்து திறக்கப்பட்ட ஊற்றாய் மாறியது. ஆ! அந்த சிநேகிதத்தின் உச்சிதத்திற்காக அவரைத் துதிப்பீர்களாக!

நினைவிற்கு:- “தம்முடைய ஒரே பேறான குமாரானாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவான் 4:9).

ஏப்ரல் 11 – சிருஷ்டி கர்த்தர்!

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:1).

நம் தேவன் சிருஷ்டி கர்த்தர். மனிதனுக்காகவே அவர் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். வானம் என்று சொல்லப்படுவது, வெறும் ஆகாயம் அல்ல, அது பரலோகத்தையும், அங்குள்ள வான சேனைகள் அனைத்தையும் குறிக்கிறது. மனிதனை உண்டாக்குவதற்கு முன்பாகவே மனிதனுக்கு பணிவிடை செய்வதற்காக வானத்திலுள்ள தேவதூதர்களையெல்லாம் அவர் சிருஷ்டித்தார்.

உலகத்தில் எவ்வளவு பெரிய விஞ்ஞானியானாலும் சரி, அவனால் ஒரு புதிய அணுவை உருவாக்கவே முடியாது. ஏற்கெனவே தேவன் சிருஷ்டித்தவைகளைத் தான் அவன் புதிய பொருட்களாக மாற்றிக் கொண்டிருக்கிறான். சிருஷ்டிப்பின் வல்லமையை கர்த்தர் தேவதூதருக்கோ அல்லது மனிதனுக்கோ கொடுக்கவில்லை. ஒரு அணுவை சிருஷ்டிக்க வேண்டுமென்றால், அதற்கு எத்தனையோ கோடி டன் எரிபொருட்கள், மின்சாரம் போன்றவைகள் தேவைப்படக்கூடும். அவை அனைத்தும் கர்த்தரின் படைப்பே. எந்த விஞ்ஞானியாலும் இவற்றைப் படைக்க முடியாது. நம் கர்த்தர் அவ்வளவு பெரியவர்!

வானாதி வானங்களையும், சூரிய, சந்திரன், திரளான நட்சத்திரங்களையும் சிருஷ்டித்த அவர் எவ்வளவு வல்லமையும் மகிமையுமுள்ளவர்! காணப்படுகிறவைகளானாலும், காணப்படாதவைகளானாலும் அவை அனைத்தும் நம் கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்டவைகளே. வேதம் சொல்லுகிறது: “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார்” (ஏசா. 54:5).

வேதத்தின் முதல் வசனம், சிருஷ்டி கர்த்தரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. “ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்” என்பதே அந்த அறிமுகம். அந்த மகா மகத்துவமும், மகிமையும், வல்லமையுமுள்ள தேவன் உங்கள் அருமை தகப்பனாய் இருக்கிறது உங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அல்லவா? தேவபிள்ளைகளே, அந்த சிருஷ்டி கர்த்தரானவர் இன்றைக்கும் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் சிருஷ்டிக்க கிருபையுள்ளவராய் இருக்கிறார் என்பதை மறந்து போகாதேயுங்கள்.

வேதம் சொல்லுகிறது, “இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசா. 43:1). நம் ஆண்டவரைப் போல மகிமையும் மகத்துவமுமுள்ள தேவன் வேறு யார் உண்டு? அவரைப் போல அன்பு செலுத்தி உங்களைக் காக்கிறவர்கள் வேறு யாருண்டு?

தேவபிள்ளைகளே, சிருஷ்டிப்புகள் யாவும் கர்த்தரைத் துதிக்கின்றன. நீங்களும் துதிப்பீர்களா? “வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுள்ளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்” (வெளி. 5:13).

நினைவிற்கு:- “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17).

ஏப்ரல் 10 – சிறுமையிலும் மகிழ்ச்சி!

“தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” (சங். 90:15).

“சிறுமைப்பட்டுவிட்டோம், எங்களை மகிழ்ச்சியாக்கும்!” என்பதே ஆயிரமாயிரமான மக்களின் இருதயக் குமுறலாய் இருக்கிறது. துன்பத்திலும், துக்கத்திலும், இருளிலும் வாடுகிறவர்கள் மகிழ்ச்சியின் ஒளிக்காக ஏங்காமல் இருப்பார்களோ?

அன்று தேவ மனுஷனாகிய மோசே கர்த்தரிடத்தில் இருதயத்தை ஊற்றி ஜெபித்த ஜெபம், “எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்பதாகும். சாதாரணமாக மகிழ்ச்சியாக்கும் என்று அவர் சொல்லாமல், “நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் தக்கதாக எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்ற கேட்டு ஜெபித்தார்.

“துன்பத்தைக் கண்ட வருஷங்கள்” எல்லாம் அவருடைய மனக்கண்களுக்கு முன்பாக வருகிறது. ஏறக்குறைய 400 வருஷங்கள் அவர்கள் எகிப்திலே துன்பத்தைக் கண்டார்கள். அடிமைகளாய் வாழ்ந்தார்கள். கட்டாயமான மற்றும் கடினமான கூலிவேலை செய்தார்கள். செங்கலை அறுத்து, சுட்டு, சுமந்து வாழ்நாளெல்லாம் அவர்கள் தொந்துபோனார்கள். செங்கலை சுடுவதற்குப் போதுமான வைக்கோல்கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆளோட்டிகள் அவர்களை சவுக்குகளினால் அடித்து சிறுமைப்படுத்தினார்கள். அவர்கள் ஜீவன் அவர்களுக்கு கசப்பானதாயிருந்தது.

அவர்கள் பார்வோனுடைய அடிமைத்தனத்தைவிட்டு வெளியே வந்த பிறகும்கூட அவர்களுடைய துன்பங்கள் முழுவதுமாய் நீங்கவில்லை. வனாந்தரமாகிய பாலைவனத்தில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தார்கள். ஏதோ ஓரிரு மாதங்களல்ல, நாற்பது வருடங்கள் தொடர்ந்து நடக்க வேண்டியதாயிற்று. யாரேனும் பாலைவனத்தில் தங்க விரும்புவார்களா? அவர்கள் முன்னே பாலும் தேவனும் ஓடுகிற கானான் இருந்தது உண்மைதான். ஆனால் உடனே அதை சுதந்தரித்துக் கொள்ள முடியாதபடி ஏராளமான தடைகள் இருந்தன.

மோசே “தேவனே எங்களை மகிழ்ச்சியாக்கும்; நாங்கள் சிறுமைப்பட்ட நாட்களுக்கும், வேதனை அனுபவித்த வருஷங்களுக்கும்தக்கதாக எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்று மன்றாடினார். நீங்களும்கூட ஒருவேளை துன்பப்பட்டு, மனம் நொந்து, துக்கத்தோடு நடந்து கொண்டிருக்கலாம். பல ஆண்டுகளாக பெருங்காற்றினாலும், சுழல் காற்றினாலும் அடிக்கப்பட்டு வேதனையோடு நடந்து கொண்டிருக்கலாம். வீசுகிற புயல்காற்றையும், கொந்தளிக்கிற கடலையும் பார்த்து அதைரியப்பட்டு இருந்திருக்கலாம். இன்று மோசேயோடுகூட சேர்ந்து, “கர்த்தாவே எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்று கதறுவீர்களா?

தேவபிள்ளைகளே, கானான் மிக அருகிலே உள்ளது என்பதை விசுவாசத்தோடு பற்றிக்கொள்ளுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்களை மகிழ்ச்சியாக்குவார். உங்கள் கண்ணீர் ஆனந்தக் களிப்பாய் மாறும். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். நீங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்குத்தக்கதாக மகிழ்ச்சியான வருஷங்களைக் காண்பீர்கள்.

நினைவிற்கு:- “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11).

ஏப்ரல் 09 – சிறையிருப்பு மாறும்!

“உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்” (செப். 3:20).

சிறையிருப்பை யாரும் விரும்புவதில்லை. சிறையிருப்பு என்பது ஒரு அடிமைத்தனமாகும். அது சுதந்தரத்தையும், சுயாதீனத்தையும் இழந்த ஒரு நிலைமையாகும். அவமானத்தின் சின்னமாகும்.

பழைய ஏற்பாட்டிலே, இஸ்ரவேலருடைய வாழ்க்கையில் அவர்கள் பலமுறை சிறையிருப்பின் வழியாக செல்லவேண்டியதிருந்ததை வாசிக்கிறோம். அந்நிய தேசத்திலே அடிமைகளாய் விற்கப்பட்ட நிலைமை வந்தது. சிறையிருப்பின் நாளிலே, அவர்கள் நிந்தையையும், அவமானத்தையும், பரியாசத்தையும் அடைந்தார்கள். ஆனால் அவர்கள் மனம் திரும்பி கர்த்தரை நோக்கிப் பார்த்தபோது, கர்த்தர் அவர்களுடைய சிறையிருப்பை திருப்பினார்.

சரீரம் சிறைச்சாலையில் இருப்பதைப் பார்க்கிலும், ஆத்துமா, பாவ சிறைக்குள்ளும், சாத்தானின் சிறைக்குள்ளும் இருப்பது எத்தனை வேதனையான காரியம்! சிலர் பாவ பழக்க வழக்கங்களுக்காக சிறையில் இருக்கிறார்கள். கஞ்சா, மது போன்ற காரியங்கள் சிலரை சிறைக்குள் வைத்திருக்கிறது. இச்சைகளின் ஆவியினால் பீடிக்கப்பட்டு விபச்சாரமாகிய சிறைக்குள் சிலர் கிடந்து தவிக்கிறார்கள்.

இதைவிட கொடுமையானது, ஆவியின் சிறையிருப்பு. சிலருடைய ஆவியை சாத்தானுடைய ஆவி சிறைப்பிடித்து பைத்தியக்காரர்களாய் உலாவ வைத்திருக்கிறான். பிசாசானவன் ஒரு மனிதனின் ஆவியைக் கட்டி, அவனுடைய ஆவியின் மேல் அவன் ஆளுகை செய்து வழிநடத்தும்போது, அந்த மனிதன் தாங்கமுடியாத வேதனைகளை அனுபவிக்கிறான். விடுதலை பெற முடியாமல் தத்தளிக்கிறான். கர்த்தருடைய ஆவியானவர் உங்களை பாவம், மரணம் மற்றும் பிசாசின் ஆளுகையிலிருந்து விடுதலையாக்கி, அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள் உட்படுத்தியிருக்கிறார். சிறைப்பட்டவர்களை விடுதலையாக்குகிற சுவிசேஷத்தை கர்த்தர் உங்களுடைய கைகளில் தந்திருக்கிறார்.

நம் தேவன் சிறையிருப்பை மாற்றுகிறவர். இருளை வெளிச்சமாக பிரகாசிக்கச் செய்கிறவர். கட்டுண்டவர்களுக்கு விடுதலையைக் கூறுகிறவர். வேதம் சொல்லுகிறது, “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டு தலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்… என்னை அனுப்பினார்” (ஏசாயா 61:1-3).

தேவபிள்ளைகளே, சிறையிருப்பை திருப்பும் ஊழியத்தை கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கப் பிரியப்படுகிறார். அபிஷேகத்தினால் நீங்கள் நிறைந்திருப்பீர்களென்றால், நுகத்தடிகளை முறித்துப் போடுவீர்கள்.

நினைவிற்கு:- “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்” (யோபு 42:10).

ஏப்ரல் 08 – சிலுவையாகிய ஏணி!

“வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்” (யோவான் 1:51).

யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியில் தேவதூதர்கள்தான் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் இருந்தார்களே தவிர, எந்த மனுஷனும் அதிலே ஏறினதாகக் காணோம். “பாவம்” என்பது மனுஷனுக்கும் தேவனுக்குமிடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டது.

மனுஷரால் தேவனிடத்தில் சென்று உறவாட முடியவில்லை. மகிழ்ந்து களிகூர முடியவில்லை. “பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” (யோவான் 3:13) என்று வேதம் சொல்லுகிறது. இயேசுகிறிஸ்து பரலோகத்துக்கும், பூலோகத்துக்கும் இணைப்பு ஏற்படுத்துகின்ற விதத்தில், மனுமக்கள் பிதாவினிடத்திற்கு ஏறிச் செல்லக்கூடிய ஏணியாய் மாறினார். கல்வாரி சிலுவையே அந்த ஏணியாகும். ஆம், அவரே மண்ணுக்குரியவர்களை விண்ணுக்குரிய நட்சத்திரமாக பிரகாசிக்கச் செய்கிறவர்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையின் உயர்வாக நிற்கிற ஏணியாகிய சிலுவையை நோக்கிப் பாருங்கள். சிலுவையில் கிறிஸ்து அடைந்த காயங்களே உங்களுக்கு பரத்துக்கு ஏறும் படிகளாக விளங்குகின்றன. சிலுவையின் வழியேயல்லாமல் ஒருபோதும் நீங்கள் பரலோகத்துக்குச் செல்லவே முடியாது. இயேசு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6).

அவர் சிலுவையிலே பாடுகளை அனுபவித்த பிறகு திரளான ஜனங்கள் பரலோகத்துக்கு ஏறிச் சென்றார்கள். “இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன்” (வெளி. 19:1) என்று அப். யோவான் எழுதுகிறார். ஆம், எப்பொழுது சிலுவையிலே இயேசு ஜீவனைக் கொடுத்தாரோ, அப்பொழுதுதான் கல்வாரி தியாகத்தையும் கிறிஸ்து சிந்தின இரத்தத்தையும் பயன்படுத்திக் கொண்டு, பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற்று, பரலோகத்தில் பிரவேசிக்க ஆரம்பித்தார்கள்.

வானத்தையும், பூமியையும் இணைக்கிற ஏணியாக இன்றைக்கும் கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார். “நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ” என்று கேட்கிறார் (எரே. 23:23). ஆம், வானம் அவருக்கு சிங்காசனமாகவும், பூமி அவருக்கு பாதப்படியாகவும் இருக்கின்றன (ஏசா. 66:1). ஆயினும் அவர் உங்கள்மேல் வைத்த அன்பு எவ்வளவு அதிகமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவருடைய காருண்யம் எவ்வளவு பெரியது!

மீண்டும் ஒரு விசை அந்த ஏணியை நோக்கிப் பாருங்கள். அந்த ஏணிக்கு இரண்டு நுனிகள் உண்டு. பூமியின் மேல் இருக்கும் அந்த நுனி அவர் மனுஷகுமாரன் என்பதைக் காண்பிக்கிறது. பரலோகத்தில் இருக்கும் அடுத்த நுனி அவர் தேவ குமாரன் என்பதைக் காண்பிக்கிறது. இன்றைக்கு அவர் உங்களுக்கு முன்பாக மனுஷ குமாரனாகவும், தேவகுமாரனாகவும் நின்றுகொண்டிருக்கிறார். தேவ பிள்ளைகளே, “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” (அப். 17:27).

நினைவிற்கு:- “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18).

ஏப்ரல் 06 – சிலுவையின் உபதேசம்!

“சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ தேவபெலனாயிருக்கிறது” (1 கொரி. 1:18).

உலகத்தில் பல வகையான உபதேசங்கள் இருப்பினும், இயேசுகிறிஸ்துவின் உபதேசம் மட்டுமே, இரட்சிப்பின் உபதேசமாயிருக்கிறது. அது நமக்கு தேவ பெலனைத் தருகிறது. சரி, சிலுவையின் உபதேசத்தைப் பற்றி இங்கு தியானிப்போம்.

  1. அது அன்பின் உபதேசம்:- வேதத்தின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரையிலும் தேவனுடைய அன்பு வெளிப்பட்ட போதிலும், சிலுவைப் பாடுகள் பற்றிய பகுதிகளில் தேவ அன்பு வெள்ளம்போல பிரவாகித்து வருகிறது. அவருடைய பாடுகளும், வேதனைகளும் மகனே, மகளே, உன்னை நான் நேசிக்கிறேன் என்பதையே குறிக்கின்றன.

உலகம் அன்புக்காக ஏங்குகிறது. அந்த அன்பு கிடைக்காமல் போகும்போது உள்ளம் சோர்ந்துபோகிறது. ஆனால், இயேசுகிறிஸ்து சிலுவையிலே தம்முடைய ஜீவனைக் கொடுத்ததின் மூலமாக அவர் நம்மை முழு இருதயத்தோடும் நேசிக்கிறதை வெளிப்படுத்தினார். “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவா. 15:13) என்று தாம் சொன்னபடியே ஜீவனைக் கொடுத்து அன்புக்கு இலக்கணம் வகுத்தார்.

  1. மன்னிப்பின் உபதேசம்:- சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்த இயேசு முழு மனுக்குலத்திற்காகவும் தம்முடைய இரத்தத்தையெல்லாம் ஊற்றிக் கொடுத்தார். வேதம் சொல்லுகிறது, “அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே. 1:7, கொலோ. 1:14).
  2. தெய்வீக சுகத்தின் உபதேசம்:- சிலுவைப் பாடுகளில் இயேசு ஏற்றுக் கொண்ட தழும்புகள், உங்களுக்கு தெய்வீக சுகத்தையும், ஆரோக்கியத்தையும் வாக்குப்பண்ணுகின்றன. வேதம் சொல்லுகிறது, “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேதுரு 2:24). “தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா. 53:5).

ஆப்பிரிக்காவில் ஜார்ஜ் ஜில்லக் என்ற மிஷனரி, தெய்வீக சுகத்தைப் பற்றி பிரசங்கித்து வந்தபோது, கொடிய ‘கருப்பு பிளேக்’ என்ற நோய் பரவி, ஜனங்கள் ஆயிரக்கணக்கில் மரிக்க ஆரம்பித்தார்கள். வியாதிப்பட்டவர்களின் வாயிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தினால் அந்த தொற்றுநோய் மிக வேகமாய் பரவியது.

ஆனால் அவரோ, வாந்தியினால் வெளிவந்த விஷக் கிருமிகளுடன்கூடிய இரத்தத்தை, தன்னுடைய கைகளிலே ஊற்றிக் கொண்டார். அந்த கிருமிகள் அவர் கையில் பட்டதும் செத்து மடிகிறதை மைக்ரோஸ்கோப்பில் பார்த்தார். காரணம், அவர் தன்னை சிலுவையோடு இணைத்து இருந்ததாலேயே அவரால் இதைச் செய்ய முடிந்தது. தேவபிள்ளைகளே, உங்களுடைய நோயும், வியாதியும் எதுவாயிருந்தாலும், உங்களுக்காக தழும்பை ஏற்றுக்கொண்ட இயேசுகிறிஸ்துவின் கரம் உங்கள்மேல் படும்போது, எல்லா விஷக்கிருமிகளும் செத்து மடியும். நோய் நீங்கிப்போகும்.

நினைவிற்கு:- “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்” (எபி. 2:9).

ஏப்ரல் 05 – சிலுவையின் பகைஞர்கள்!

“ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், …அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே” (பிலி. 3:18,19).

கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்களாயிருப்பவர்கள், கிறிஸ்துவுக்கும், அவருடைய கிருபைக்கும், இரக்கத்திற்கும் பகைஞர்களாயிருக்கிறார்கள். இந்த வேத பகுதியில் கிறிஸ்துவின் பகைஞனைக் குறித்து அப். பவுல் ஐந்து காரியங்களைக் குறிப்பிடுகிறார். 1. அவர்கள் வேறு வழியாய் நடக்கிறவர்கள். 2.அழிவின் பாதையில் செல்ல முடிவு செய்தவர்கள் 3. அவர்களுடைய தேவன் வயிறு. 4. இலச்சையே அவர்களுடைய மகிமை. 5. அவர்கள் பூமிக்கடுத்தவைகளையே சிந்திக்கிறார்கள்.

நீங்கள் சிலுவைக்கு சொந்தமான கிறிஸ்துவின் அன்புக்கு சுதந்தரவாளிகளாய், அவரோடு இணைந்திருப்பீர்களானால், நிச்சயமாகவே சிலுவையின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுவீர்கள். சிலுவை உங்களுக்குக் கிடைத்த பெரிய மேன்மை அல்லவா? இயேசு சிலுவையிலே உங்களுக்காக தன்னையே அர்ப்பணித்தார் அல்லவா?

சிலுவைப் பாதை என்பது இடுக்கமானது. அதன் வழி குறுகலானது. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்தான் அந்த சிலுவைப் பாதை வழியாக பொறுமையோடு நடந்து வருவார்கள். ஆனால் சிலுவையின் பகைஞரோ, ஆடம்பரமான பாதைகளை தங்களுக்கென்று வகிக்கிறார்கள். உலகத்தின் உல்லாசங்களை அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கமுடையவர்களாய் இருக்கிறார்கள்.

சிலுவைக்குப் பகைஞன் யார்? முதல் பகைஞன் சாத்தானாகிய பிசாசுதான். அவன் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமை கொண்டதினாலே பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான். அதற்கு பழி வாங்கும்படி இயேசுவை சிலுவையில் அறைய தீர்மானித்தான். அதற்காக இயேசுவின் சீஷர்களில் ஒருவனாகிய யூதாஸுக்குள் புகுந்தான். எந்த சிலுவையினால் சாத்தான் இயேசுவை அழிக்க நினைத்தானோ, அதே சிலுவையினால் அவன் அழிக்கப்பட்டான்.

இயேசுகிறிஸ்து ஆணிகள் கடாவப்பட்ட தன்னுடைய பாதங்களினாலே சாத்தானுடைய தலையை நசுக்கினார். அவனை செயலற்றுப் போகப்பண்ணினார். யார், யார் சிலுவைக்கு பகைஞராய் இருக்கிறார்களோ, அவர்களும் அவனோடே அழிக்கப்படுவார்கள்.

சிலுவையின் பகைஞருடைய அடுத்த குணாதிசயம் இம்மைக்காகவே வாழ்வதாகும். பூமிக்குரியவைகளே தேடுவதாகும். அழிவுள்ளவைகளுக்காக அலைந்து திரிவதாகும். இயேசுகிறிஸ்து என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உலகத்தின் காரியத்தைக் குறித்து கவலைப்படாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறார் (மத். 6:31).

தேவபிள்ளைகளே, எப்போதும் சிலுவையோடுகூட இணைந்து கொள்ளுங்கள். அதுதான் உங்களை நித்தியத்திற்கு உயர்த்தும். அதுதான் நித்திய வாழ்வுக்கு வழி நடத்தும். சிலுவையேயல்லாமல் பாவ மன்னிப்பில்லை, இரட்சிப்பில்லை, மீட்பில்லை, விடுதலையில்லை.

நினைவிற்கு:- “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” (பிலி. 3:20).

ஏப்ரல் 04 – உயிர்த்தெழுந்தார்!

“மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” (வெளி. 1:18).

இன்று உலகமெங்கும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலை சந்தோஷத்துடன் நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். மற்ற எல்லா மார்க்கங்களுக்கும், கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு இயேசுகிறிஸ்துவின் உயிர்தெழுதலில்தான் இருக்கிறது. மற்ற மதங்களின் ஸ்தாபகர்கள் மரித்து, மண்ணோடு மண்ணா மாறினார்கள். ஆனால் கிறிஸ்து மரணத்தினால் கட்டப்படக்கூடாதவராயிருந்தார் (அப். 2:24). தேவன் அவருடைய மரண உபாதைகளின் கட்டை அவிழ்த்து அவரை எழுப்பினார். இயேசு உயிர்த்தெழுந்தார்.

ரோம அரசாங்கம் அவரை கல்லறையிலே அடக்கி வைக்க முயன்றது. போர்வீரர்கள் கல்லறையை மூடி சீல் வைத்து பாதுகாத்தார்கள். ஆனால் வாக்குப்பண்ணினபடி மூன்றாம் நாளிலே இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார். ஆகவேதான், நீங்கள் மகிழ்ந்து சந்தோஷத்தோடு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” என்று சொல்லுகிறீர்கள் அல்லவா?

நீங்கள் செத்த தெய்வத்தை ஆராதிக்கவில்லை. மரித்து, மண்ணோடு மண்ணாய் போய்விட்டவர்களை ஆராதிக்கவில்லை. கல்லறையும், சிலையுமாய் இருக்கிறவர்களை ஆராதிக்கவில்லை. உங்களுக்காக உயிரைக் கொடுத்தவரும், உங்களுக்காக உயிரோடு எழுந்தவரும், இன்றும் ஜீவிக்கிறவருமான இயேசு கிறிஸ்துவையே நீங்கள் ஆராதிக்கிறீர்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய மனதுருக்கமும் வல்லமையும் மாறவில்லை.

இயேசு உயிர்த்தெழுந்தார் என்னும் நிகழ்வினாலே உங்களுக்கு அநேக வாக்குத்தத்தங்களுண்டு. மகிமையான நம்பிக்கையுண்டு. அவர் உயிர்த்தெழுந்தது போல நாமும் உயிர்த்தெழுவோம் என்கிற நம்பிக்கை உங்களுக்குள் வருகிறது. மரணம் ஒரு முடிவல்ல, அது ஒரு இளைபாறுதல்தான் என்பதை இயேசுகிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். இன்றைக்கும் அவர் பிதாவினுடைய வலதுபாரிசத்திலே அமர்ந்திருந்து உங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டேயிருக்கிறார். மன்றாடி ஜெபித்துக் கொண்டேயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையை ஊற்றிக் கொண்டேயிருக்கிறார். எழுப்புதலை தந்து கொண்டேயிருக்கிறார்.

யோபு சொல்லுகிறார், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் அறிந்திருக்கிறேன்” (யோபு 19:25). உயிர்த்தெழுந்த இயேசு மீண்டும் வருவார். இயேசுகிறிஸ்து மீண்டும் வரும்போது, நீங்கள் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் முகமுகமாய் காணும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். கர்த்தருடைய பரலோக குடும்பமும் பூலோக குடும்பமும் ஒன்றாய் இணையும் நாள் எத்தனை பாக்கியமான நாளாயிருக்கும்!

நினைவிற்கு:- “குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்” (யோவான் 6:40).