AppamAppam - Tamil

Mar 4 – மரித்தோரை எழுப்புங்கள்!

“மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” (மத். 10:8).

கர்த்தர் அன்று தம்முடைய சீஷர்களுக்கும், இன்று உங்களுக்கும் கொடுத்த அதிகாரங்களையும் ஆளுகைகளையும் வாசிக்கும்போது, அதில் முக்கியமானதாயிருப்பது, “மரித்தோரை எழுப்புங்கள்” என்பதாகும்.

மாற்கு 5-ம் அதிகாரம், லூக்கா 7-ம் அதிகாரம், யோவான் 11-ம் அதிகாரம் ஆகியவற்றை வாசிக்கும்போது, இயேசு மரித்துப்போன மூன்று பேரை உயிரோடே எழுப்புகிறதைக் காணலாம். முதலாவது, யவீரு என்னப்பட்ட ஜெப ஆலயத்தலைவனுடைய மகள். இரண்டாவது, நாயீனூர் விதவையின் மகன், மூன்றாவது, மார்த்தாள், மரியாளுடைய சகோதரனாகிய லாசரு.

யவீருவின் மகளை உயிரோடு எழுப்பினது வீட்டிலே. நாயீனூர் விதவையின் மகனை எழுப்பியது வீதியிலே. லாசருவை உயிரோடு எழுப்பினது கல்லறையிலே. ஆம், இயேசு கிறிஸ்து வீட்டிலும் மரித்தோரை எழுப்புகிறார், வீதியிலும் அற்புதங்களைச் செய்கிறார், கல்லறையிலும் உயிர்ப்பிக்கிறார்.

இன்னொரு காரியத்தைக் கவனியுங்கள், யவீருவின் மகளை மரித்த அன்றே உயிரோடு எழுப்பினார். ஆனால் நாயீனூர் விதவையின் மகனை மரித்து அடுத்த நாள் அடக்கம் பண்ணப் போகிற வழியிலே அதாவது, இரண்டாவது நாள் உயிரோடு எழுப்பினார். ஆனால் லாசருவையோ நான்காம் நாள்தான் உயிரோடு எழுப்பினார். கர்த்தர் எங்கேயும், எப்போதும் அற்புதத்தைச் செய்வார், அற்புதத்தை செய்ய இடமோ, நேரமோ அவருக்கு ஒரு பொருட்டல்ல.

முதலாவது அற்புதத்தைச் செய்தபோது, “சிறு பெண்ணே எழுந்திரு” என்று கையைப் பிடித்து எழுப்பி விட்டார். நாயீனூர் விதவையின் மகனை உயிரோடு எழுப்புகிற சம்பவத்தில் அவர் பாடையைத் தொட்டார். வாலிபன் உயிரோடு எழுந்தான்.

மூன்றாவது அற்புதம் செய்தபோது, லாசருவின் கையையும் தொடவில்லை, பாடையையும் தொடவில்லை, வாசலில் இருந்த கல்லையும் தொடவில்லை. வெளியே நின்று, “லாசருவே வெளியே வா” என்று சத்தமிட்டுக் கூறினார். லாசரு உயிர்ப் பெற்று வெளியே வந்தான். அவர் எல்லாவிதத்திலும் அற்புதம் செய்ய வல்லமையுள்ளவர்.

ஒரு நாள் கர்த்தர் எசேக்கியேல் தீர்க்கதரிசியை உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்குக்கு அழைத்துக் கொண்டு போனார். உலர்ந்த எலும்புகளே அங்கு ஏராளமாயிருந்தன. அவை பள்ளத்தாக்கின் வெட்ட வெளியிலே திரளாய்க் கிடந்தன. கர்த்தருடைய வார்த்தையின்படியே எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அந்த எலும்புகளெல்லாம் உயிர்ப்பெற்றன. காலூன்றி நின்றன. ஜீவ ஆவி அவைகளுக்குள் பிரவேசித்தது. உயிர் பெற்ற அவர்கள், சேனையாய் நின்றார்கள்.

தேவபிள்ளைகளே, மரித்தோரை எழுப்புங்கள். பிசாசுகளைத் துரத்துங்கள். இலவசமாய்ப் பெற்றீர்கள். இலவசமாய்க் கொடுங்கள். இது கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிற கட்டளையாகும்.

நினைவிற்கு:- “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபே. 2:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.