AppamAppam - Tamil

ஏப்ரல் 06 – துதியின் மேன்மை!

“தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்” (2 நாளா. 29:25).

சங்கீத புத்தகமானது, பூமியில் கர்த்தரைத் துதிக்கும் துதியை விவரிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் பரலோகத்தில் தேவஜனங்கள் கர்த்தரைத் துதிக்கும் துதியை வெளிப்படுத்துகிறது. பூமியிலே நீங்கள் கர்த்தரைத் துதித்தால், நித்தியத்திலே கோடானகோடி வருடங்களாய் அவரைத் துதிக்க அது வழி செய்யும்.

நித்தியத்திலே தேவதூதர்கள், கேருபீன்கள், சேராபீன்கள், மீட்கப்பட்டவர்கள் எல்லாம் எவ்விதமாய் கர்த்தரைத் துதிப்பார்கள் என்பதை தாவீது ராஜாவின் கண்கள் எண்ணிப் பார்த்தது. பரலோகத் துதியை அவர் பூமியிலே கொண்டு வர வேண்டுமென்று ஆவல் கொண்டார். ஆகவே அவர் துதியைக் கற்பித்து, துதிக்காக ஒரு பாடல் குழுவை ஏற்படுத்தினார்.

அதில் எத்தனை பேர் இருந்தார்கள் தெரியுமா? தாவீது சொல்லுகிறார், “துதி செய்கிறதற்கு தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம் பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்க வேண்டும்” (1 நாளா. 23:5). சிந்தித்துப் பாருங்கள், நாலாயிரம் பேர் இனிமையாய் இசைக் கருவிகளை மீட்டி பாட்டுப் பாடினால் இவ்வுலகமே ஒரு குட்டிப்பரலோகம் போல் காட்சியளித்திருக்கும் அல்லவா?

கர்த்தரைத் துதித்துப் பாடுவதற்கு தாவீது தன் அனுபவத்திலிருந்து பாடல்களை இயற்றினார். வேதத்தை தியானித்து சங்கீதங்களை உருவாக்கினார். மட்டுமல்ல, பாடல் குழுவுக்கு பாடல்களை எப்படிப் பாடவேண்டும் என்பதையும், கீத வாத்தியங்களை எப்படி மீட்ட வேண்டுமென்பதையும், சொல்லிக்கொடுத்தார். ‘ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்’ என்று அவர் சொல்லுகிறதை வேதத்தில் பார்க்கிறோம் (சங். 33:3).

நான் சிறுவனாயிருந்துபோது ஒரு பாடலைப் பாடுவது உண்டு. “ஓர் வெண்ணங்கி, ஓர் பொன்முடி, ஓர் வாத்தியம், ஓர் மேல்வீடு, ஓர் ஜெயக்கொடி, ஓயா இன்பம் எனக்குண்டு மோட்சத்தில்” என்று அந்தப் பாடல் ஆரம்பிக்கும். நமக்கு ஒரு வாத்தியம் உண்டு. பூமியிலே ஒருவேளை அது இரண்டு கைகளைத் தட்டுகிற வாத்தியமாய் இருக்கலாம்; அல்லது தம்புருவாய் இருக்கலாம்; அல்லது இனிய கிட்டாராக இருக்கலாம். எதுவாயிருந்தாலும், வாத்தியக் கருவிகளை மீட்டி உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆண்டவரை நன்றியோடு துதித்துப் பாடும்போது பரலோகம் அந்தப் பாடலை ரசிக்கிறது. கர்த்தரும் அதில் மகிமைப்படுகிறார்.

தாவீதைப் பாருங்கள். அவர் வீட்டிலே துதித்தார். “நான் பரதேசியாய் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின” (சங். 119:54) என்று சொல்லுகிறார். வீதியிலேயும் துதித்தார். கர்த்தருடைய பெட்டி எருசலேமுக்கு வந்தபோது அது வீதி என்றும் பாராமல் தன் முழு பெலத்தோடும் நடனமாடி களிகூர்ந்து கர்த்தரைத் துதித்தார் (2 சாமு. 6:14). சபையிலேயும் துதித்தார். “மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்” என்றார் (சங். 35:18). தேவபிள்ளைகளே, நீங்களும் தாவீதைப்போல அவரைத் துதித்து மேன்மைப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்” (1 நாளா. 29:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.