AppamAppam - Tamil

Mar 1 – மகிழ்ச்சியுடன் துதிக்கும் நாள்!

“இது கர்த்தர் உண்டு பண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” (சங். 118:24).

கர்த்தரைத் துதிப்பதற்கு எது நல்ல நாள் என்று பலர் விவாதித்துக் கொண்டிருந்தாலும், ஒவ்வொருநாளுமே நீங்கள் கர்த்தரை துதிப்பதற்கு ஏற்ற நாளாயிருக்கிறது என்பதே உண்மை. “இது கர்த்தர் உண்டு பண்ணின நாள்” என்று தாவீது சொல்லுகிறார். எல்லா நாட்களையும் கர்த்தர்தாமே உண்டாக்கினாரே தவிர, சாத்தான் ஒரு நாளையும் உண்டாக்கினதில்லை.

யார்யாருடைய உள்ளத்தில் இது கர்த்தர் எனக்கென்றே உண்டாக்கிக் கொடுத்த நாள் என்ற விசுவாசம் இருக்கிறதோ, அவர்கள் கர்த்தரைத் துதிப்பார்கள். கர்த்தர் கல்லான இருதயத்தை எடுத்துப் போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குத் தந்திருக்கிறார். இப்பொழுது ஆவியானவர் உங்களுக்குள்ளே ஊற்றப்பட்டு, நவமான இருதயம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறபடியினால் நீங்கள் எல்லாவற்றுக்காகவும், எல்லா நாட்களிலும் கர்த்தரைத் துதித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஒவ்வொருநாளும் உங்களுக்கு துதியினால் ஏற்படும் மகிழ்ச்சியின் நாளாகவே இருப்பதாக! நீங்கள் கர்த்தரைத் துதிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. அந்த காரணம் ஒவ்வொரு நாளிலும் கர்த்தர் உங்களோடுகூட இருப்பதுதான். ஒவ்வொருநாளும் அவர் உங்களுடைய கரத்தைப் பிடித்து நடத்துவதுதான். உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் அவர் உங்களோடுகூட இருப்பதுதான்.

மட்டுமல்ல, உங்களுடைய வாழ்க்கையில் நேரிடுகிற காரியம் எதுவானாலும், அதையெல்லாம் கர்த்தர் உங்களுடைய நன்மைக்கேதுவாகவே செய்தருளுவார் (ரோமர் 8:28). யோசேப்பைப் போல சிறைச்சாலையிலே பாடுபட்டாலும், அங்கேயும் மறைந்திருக்கிற ஒரு நன்மையுண்டு. ஒரு காலத்தில் நீங்களும் அவரைப் போலவே பெரிய அதிபதியாய் உயர்த்தப்படுவீர்கள்.

சிங்கங்களின் கெபியிலே போடப்பட்டாலும், உங்களுக்கு ஒரு நன்மையுண்டு. சிங்கங்களின் வாய் கட்டப்பட்டுப்போகும். அக்கினி ஜுவாலையில் போடப்படும் போதும் உங்களுக்கு ஒரு நன்மையுண்டு. கிறிஸ்து உங்களோடுகூட இறங்கி உலாவுவார். ஆகவே அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சச் செடிகள் கனிகள் கொடாமல் போனாலும், தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் போனாலும், நீங்கள் தேவனை ஒவ்வொரு நாளும் துதித்து மகிழ்ந்து களிகூருவீர்கள். அவரே உங்களுடைய அன்பின் நீரூற்று.

நீங்கள் எல்லா நன்மைகளுக்காக மாத்திரமல்ல, எல்லா மனுஷருக்காகவும் கர்த்தரைத் துதிக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள் (1 தீமோ. 2:1). ஏனென்றால், கர்த்தர் எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர். எந்த மனுஷனையும் புறம்பே தள்ளாதவர். எத்தனை பெரிய கொடிய சத்துருவாயிருந்தாலும் அவனை உங்களுடைய ஆத்தும நண்பனாக மாற்றித்தர வல்லமையுள்ளவர். ஆகவே நீங்கள் அவரை ஸ்தோத்தரிப்பீர்களாக. தேவபிள்ளைகளே, முழு இருதயத்தோடும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பீர்களாக. அவர் இப்பொழுதே உங்கள் வாழ்க்கையில் அற்புதத்தைச் செய்தருளுவார்.

நினைவிற்கு:- “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (சங். 34:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.