AppamAppam - Tamil

Mar 7 – மனதுருக்கமும் உபதேசமும்!

“அவர்கள் மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்” (மாற். 6:34).

கர்த்தர் உங்களை சிநேகிக்கிறார். அவர் உங்களை சிநேகித்ததினாலேயே இந்த உலகத்திற்கு வந்தார். அவருடைய சிநேகம், அன்பின் வார்த்தைகளாய் வெளியே வந்தது. ஒருவருடைய வார்த்தைகளை நீங்கள் கவனிக்கும்போது, அவருடைய அன்பை நீங்கள் புரிந்துக் கொள்ளுகிறீர்கள். அன்பு, வார்த்தைகளினாலும், கிரியைகளினாலும் வெளிப்படுகிறது.

வேதத்தில் கிறிஸ்து பேசிய வார்த்தைகளையெல்லாம் கவனித்துப் பாருங்கள். அவை உள்ளத்தை உருக்கக்கூடியவை. அவைகளெல்லாம் அன்பையே வெளிப்படுத்துகின்றன. இயேசு திரளான ஜனங்களைக் கண்டார். மனதுருகி அநேகம் காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.

இயேசு வனாந்தரத்திலே தங்கியிருந்தபோது, அவருடைய அன்பின் வார்த்தைகளைக் கேட்பதற்காக ஜனங்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரைத் தேடி வந்தார்கள். அவர் தேவாலயத்தில் அமர்ந்திருக்கும்போது, அவருடைய கிருபையுள்ள வார்த்தைகளை ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். நோய்களோடு வந்த மக்கள் ஒரு வார்த்தை சொல்லமாட்டாரா, என்னுடைய நோய்கள் நீங்குமே என்று அவருடைய வார்த்தைக்காகக் காத்திருந்தார்கள்.

இயேசு கிறிஸ்து தன்னுடைய ஓய்வை மறந்தார். உணவை மறந்தார். பகல் என்றும், இரவு என்றும் பாராமல் இடைவிடாமல் கிராமம் கிராமமாய் சென்று மக்களைக் கண்டு மனதுருகி உபதேசித்தார். அநேகம் காரியங்களைக் குறித்துப் பேசினார் என்று வேதம் சொல்லுகிறது (மாற்கு. 6:34). மத்தேயு 5, 6 மற்றும் 7 ஆகிய அதிகாரங்கள் மலைப் பிரசங்கம் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான எல்லாவற்றையம் அவர் பேசினார். ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு வேண்டிய எல்லா போதனைகளும் அவரிடத்திலிருந்து வெளிவந்தன.

தேவையான நன்மைகள் எல்லாவற்றையும் நீங்கள் அனுபவிப்பதற்கு அவர் சம்பூரணமாக கொடுக்கிற தேவன் (1 தீமோ. 6:17). அவர் நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கிற அன்புள்ள தகப்பன் (மத். 7:11). அவர் கொடுத்த வார்த்தைகள் ஜீவ அப்பமாய் விளங்குகின்றன. மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.

 இயேசு இம்மைக்குரியவைகளையும் பேசினார். நித்தியத்திற்குரியவைகளையும் பேசினார். சமாதானத்தைக் குறித்து பேசினார். தெய்வீக சமாதானத்தைப் பெற்றுக் கொள்வது எப்படி என்பதைக் குறித்தும் பேசினார். மறுபிறப்பைக் குறித்து பேசினார். இரட்சிப்பைக் குறித்து பேசினார். பரிசுத்த ஆவியானவரைக் குறித்து பேசினார். நித்தியத்திற்கு வழியை காண்பித்தார்.

தேவபிள்ளைகளே, வேதத்தை வாசிக்கும்போதெல்லாம் இயேசு உங்களோடு அன்பாய் பேசுவதை உணருங்கள். அவருடைய வார்த்தைக்கு செவி கொடுங்கள். அது இன்பமானவை மட்டுமல்ல, அவர் உங்கள் மேல் வைத்திருக்கிற நேசத்தையும் வெளிப்படுத்துகிறது. தேவபிள்ளைகளே, வேதத்தை விரும்பி வாசியுங்கள்.

நினைவிற்கு:- “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசின தில்லை என்றார்கள்” (யோவான் 7:46).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.