AppamAppam - Tamil

Feb 02 – பஞ்சக் காலத்திலே!

“அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப் போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்” (சங். 37:19).

கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை பஞ்ச காலத்திலேயும் போஷித்து அருமையாய் வழிநடத்துகிறவர். உலகமெங்கும் பற்றாக்குறை நிறைந்திருந்தாலும், தம் பிள்ளைகளைத் திருப்தியாய் போஷிக்கிறவர்.

ஒரு குடும்பத்திலே, கணவனுக்கும், மனைவிக்கும் வேலையில்லை. எனினும் அவர்கள் உற்சாகமாய் காணப்பட்டார்கள். அவர்கள், “கடந்த ஆறு மாதமாய் என் கணவருக்கு வேலையில்லை. எனினும் கர்த்தர் ஒவ்வொருநாளும் எங்களை ஆச்சரியமாய் வழிநடத்தி வருகிறார். ஒரு பைசாகூட கடன் வாங்காமல் எங்களை திருப்தியாய் போஷிக்கிறார்” என்று சந்தோஷமாய் சொன்னார்கள்.

கர்த்தருடைய வழிகள் ஆச்சரியமானவைகள். பஞ்சத்திலே திருப்தியடைவார்கள் என்பது கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம் அல்லவா? வேதம் சொல்லுகிறது, “பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள் மேல் நோக்கமாயிருக்கிறது” (சங்கீதம் 33:19).

வேதத்திலே அருமையான ஒரு சம்பவத்தை கர்த்தர் எழுதி வைத்திருக்கிறார். பஞ்சத்திலே அற்புதமாய் போஷிக்கப்பட்ட சாறிபாத் விதவையின் சம்பவமே அது. அந்த விதவை ஏழையாக இருந்தபோதிலும், கர்த்தருடைய ஊழியக்காரர்களை உபசரிக்கிற ஒரு நற்குணம் அவளிடத்தில் இருந்தது. தேவனுடைய மனுஷனாகிய எலியா வந்தபோது, அவளிடம் கொஞ்சம்தான் மாவும், எண்ணெயும் இருந்த போதிலும், அதிலே முதலாவது ஒரு அடையை செய்து தேவனுடைய மனுஷனுக்கு கொடுத்தாள்.

பாருங்கள்! அவள் தன் தாராளத்திலிருந்தும், தனக்குப் போக மீதியிலிருந்தும் கொடுக்கவில்லை. வறுமையிலும் கொஞ்சத்திலும் முதன்மையானதைக் கொடுத்தாள். கர்த்தர் அதைக் கண்டார். ஆகவே கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையில் மாவு செலவழிந்து போவதும் இல்லை, கலசத்தில் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை (1 இராஜா.17:14) என்று அன்போடு ஒரு ஆசீர்வாதத்தை கொடுத்தார். தேசமெங்கும் பஞ்சம். ஆனால், அவளோ அற்புதமாய் போஷிக்கப்பட்டாள்.

“சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான்” (மத். 10:42). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (மத். 25:40) என்று இயேசு சொன்னார்.

தேவபிள்ளைகளே, மழை தாழ்ச்சி ஏற்பட்டு விளைநிலங்களெல்லாம் விளையாமல் போகிறதா? கவலைப்படாதீர்கள். வேதம் சொல்லுகிறது: “உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்” (சங்.37:18).

நினைவிற்கு:- “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீருற்றைப் போலவும் இருப்பாய்” (ஏசா. 58:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.