AppamAppam - Tamil

Jan 10 – சமாதானம் தருவார்!

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன்… உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” (யோவா. 14:27).

உலகம் ஒரு வகை சமாதானத்தை ஜனங்களுக்கு வாக்குப்பண்ணுகிறது. பல தேசத்து ஜனாதிபதிகள் சமாதானப் பேச்சுகளை நடத்தி, தேசங்களுக்குள்ளே சமாதானத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த சமாதானங்களோ தற்காலிகமானவையே.

ஒரு மனிதனுடைய உள்ளத்தில் உண்மையான சாந்தியை, மன நிம்மதியை உலகத்தால் கொண்டு வர முடியாது. இயேசு சொன்னார், “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” (யோவான் 14:27). கிறிஸ்து ஒருவரே சமாதானத்திற்கு ஊற்றுக்காரணர். அவருடைய நாமம் சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசா. 9:6). அவர் பூமியிலே பிறந்தபோது, பரம சேனைகளின் திரள், “பூமியிலே சமாதானம் உண்டாவதாக” என்று துதித்துப் பாடினார்கள்.

தேவபிள்ளைகளே, இயேசு கிறிஸ்துதாமே கொடுக்கும் அந்த மெய் சமாதானத்தை நீங்கள் உள்ளத்திலே பெற்றிருக்கிறீர்களா? வேதம் சொல்லுகிறது; “தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்” (சங். 34:14). “பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” (1 பேதுரு 3:11).

  கர்த்தருடைய மகத்தான சமாதானத்தை பெற்றுக்கொள்ள வேதமே உங்களுக்கு வழிகாட்டுகிறது. சங்கீதக்காரராகிய தாவீது “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை” (சங். 119:165) என்று சொல்லுகிறார். தேவன் தம்முடைய வார்த்தையை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானத்தைத் தந்தருளுகிறார். வேதத்தை நேசிக்கிறவர்கள் மட்டுமே சமாதானத்தினால் நிரம்பியிருப்பார்கள்.

மிகுதியான சமாதானத்தை மட்டுமல்லாது, வற்றாத சமாதானத்தையும் தேவன் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப் போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்” (ஏசா 48:18). நதியைப்போல எப்போதும் வற்றாததும், ஊற்றெடுத்து ஓடுவதுமான சமாதானம் தேவனால் உங்களுக்கு அருளப்படுகிறது எத்தனை பாக்கியம்!

மகத்தானதும், வற்றாததுமான சமாதானத்தை மட்டுமல்லாது, பூரண சமாதானத்தையும் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்களித்திருக்கிறார். ஏசாயா எழுதுகிறார், “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).

தேவபிள்ளைகளே, கர்த்தரைப் பற்றிக்கொண்டு அவருடைய வார்த்தையை நம்பியிருப்பீர்களென்றால், எந்த சூழ்நிலையிலும் அசைக்க முடியாத சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளுவீர்கள். உங்களுடைய சமாதானத்தை யாராலும் கெடுக்க முடியாது. நினைவிற்கு:- “சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக” (2 தெச. 3:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.