AppamAppam - Tamil

Jan 14 – சகலத்தையும் தாங்கும்!

“அன்பு சகலத்தையும் தாங்கும்” (1 கொரி. 13:7).

அன்பு ஒன்றுக்குத்தான் எல்லாவற்றையும் தாங்கும் சக்தியுண்டு. அன்புள்ள தகப்பன் தன் சம்பாத்தியத்தினால் தன் குடும்பத்தைத் தாங்குகிறான். அன்புள்ள தாய் பிள்ளைகளின் மேலுள்ள பாசத்தால் கஷ்ட நஷ்டங்களை, பாடுகளைத் தாங்குகிறாள். பக்தியுள்ள பெற்றோர் தங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஜெபத்தில் தாங்குகிறார்கள்.

ஒரு விதவைத்தாய் தன் மகன் சூதாடுகிறான் என்று கேள்விப்பட்டு கண்ணீரோடு அவனைக் கண்டித்தாள். ஆனால் அவனோ, தன் அன்பின் தாயின் வார்த்தைகளைக் கேளாமல் தொடர்ந்து சூதாடியபோது போலீசால் பிடிக்கப்பட்டான். அவனோடுகூட பிடிபட்ட மற்ற வாலிபர்கள் அபராதத் தொகையைக் கட்டி, விடுதலையாகி விட்டார்கள். ஆனால் இந்த வாலிபனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்ட வழியில்லாததால் சிறையிலடைக்கப்பட்டான். மகன் இப்படி தன் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனானே என்பதற்காக அந்தத் தாயின் அன்பு குறைந்து போகவில்லை.

ஒரு நாள் ஜெயிலின் ஜன்னல் கம்பி வழியாக மகன் வெளியே பார்த்தபோது, தன் தாய் கருங்கல்லை உடைக்கும் கடின வேலை செய்வதைக் கண்டான். தாயின் கைகளெல்லாம் இரத்தம் கொட்டியது. என்றாலும் காலையிலிருந்து இரவு வரை கல்லுடைத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, பல மாதங்களுக்குப் பின் தன் மகனது அபராதத் தொகையைக் கட்டி மகனை விடுவித்தாள். அதன் பிறகு இருவரும் ஒருவரையொருவர் பல மடங்கு நேசித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, மகன் பொறுப்பும், தேவ பக்தியுமுள்ளவனாய் மாறினான்.

பரி. போலிகார்ப் என்பவர் தனது 86-வது வயதில் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் தன்னை இரத்த சாட்சியாக ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவின் நாமத்தை மறுதலியாமல் உறுதியாய் நின்றதால், அவரைக் கொல்லும்பொருட்டு பிடித்து வரும்படி, மார்க்கஸ் ஆரேலியஸ் என்ற ராஜா தன் வீரர்களை அனுப்பினான். போலிகார்ப் அவர்களிடம் தான் சிறிது நேரம் ஜெபித்து விட்டு வருவதாகக் கேட்டுக் கொண்டார். இரண்டு மணி நேரம் ஜெபம் செய்தார்.

 பிறகு போலிகார்ப், அரசன் முன் நிறுத்தப்பட்டபோது, “ஐயா, நான் ஆறு வயதாயிருக்கும்போது, என்னை அன்போடு தேடி வந்த தெய்வீக ஆறாகிய கிறிஸ்துவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். கடந்த எண்பத்தாறு ஆண்டுகளாக அவர் என்னை அருமையாக போஷித்தார், வழி நடத்தினார், ஆசீர்வதித்தார், உயர்த்தினார். எனக்கு ஒருபோதும் அவர் தீங்கு செய்ததில்லை; என்னை விட்டு விலகினதில்லை; என்னை கைவிட்டதில்லை. அப்படிப்பட்ட அன்புள்ள என் இயேசுவை நானும் ஒருபோதும் மறுதலிக்கவே மாட்டேன்” என்று உறுதியோடு சொன்னார்.

வயதாகி, பழுத்து, தலையெல்லாம் வெண் பஞ்சைப் போன்றிருந்த அவர் கிறிஸ்துவுக்காக மகிழ்ச்சியோடு தீக்கிரையாகி தன்னைப் பானபலியாய் வார்த்தார். அவர் இரத்தம் இன்றும் பேசுகிறது. தேவபிள்ளைகளே, அந்த அன்பின் வல்லமைக்காக தேவனை ஸ்தோத்தரிப்பீர்களாக.

நினைவிற்கு:- “…அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (எபேசி. 4:2,3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.