AppamAppam - Tamil

Jan 24 – சீதோனுக்கடுத்த சாறிபாத்!

“நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்” (1 இராஜா. 17:9).

கர்த்தருடைய பராமரிப்பு ஆச்சரியமானது. அவருடைய வழிநடத்துதல் அதிசயமானது. நீங்கள் அவருடைய சத்தியத்திற்கு செவிக்கொடுக்கும்போது, ஒருபோதும் குறைவுபட்டுப் போவதில்லை. அவர் வனாந்தரத்தில் வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குகிறவர்.

கர்த்தர் எலியாவைப் பார்த்து, ‘நீ சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போ’ என்று சொன்னார். இந்த சீதோன் யாருடைய ஊர் தெரியுமா? எலியாவின் தலையை வாங்கத் தேடின யேசபேலினுடைய ஊர். அவள் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி (1 இராஜா. 16:31) என்று வேதம் சொல்லுகிறது. அது பாகால் வணக்கம் நிறைந்த, தேவனுடைய தீர்க்கதரிசிகளை வெறுக்கிற ஒரு தேசம். அப்படிப்பட்ட இடத்திற்குள்ளேதான் கர்த்தர் எலியாவை அனுப்பினார்.

கர்த்தர் ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டியை அனுப்புவதுபோல சில வேளைகளில் உங்களை அனுப்பக்கூடும். சிங்கக் கெபிக்குள்ளே செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களும் வரக்கூடும். ஆனாலும் நீங்கள் கலங்க வேண்டியதில்லை. யூதாவின் ராஜ சிங்கம் உங்களோடுகூட இருக்கிறார்.

 இந்த “சீதோன்” என்கிற பகுதியானது, ஆசேர் புத்திரருக்கு சொந்தமான ஒரு இடமாயிருந்தது. யோசுவா சீதோனை ஆசேர் கோத்திரத்தாருக்கு பங்கிட்டுக் கொடுத்தார் (யோசுவா 19:28). ஆசேரின் ஆசீர்வாதம் என்ன? அது எண்ணெய் வளம் நிறைந்த ஒரு இடமாகும். ஆசேர் தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான் என்று உபா. 33:24-ல் வாசிக்கலாம். அந்த சாறிபாத் விதவை எண்ணெய் வளம் மிக்க நாட்டில்தான் குடியிருந்தாள். ஆனால் அவளுக்கோ, கலசத்தில் கொஞ்சம் எண்ணெய் அல்லாமல் வேறு எண்ணெய் அவளுக்கு இல்லை. எண்ணெய் கிடைக்கிற இடத்தில் அந்த விதவை இருந்தாலும், அவளிடமோ போதிய எண்ணெய் இல்லை.

இன்றைக்கு அநேகம் பேர் ஆசீர்வாதம் கிடைக்கக்கூடிய, அபிஷேக எண்ணெய் ஊற்றப்படுகிற இடங்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடைய வாழ்க்கையிலே ஆசீர்வாதமுமில்லை, அபிஷேகமுமில்லை, எண்ணெயுமில்லை. குற்றாலம் நீர் வீழ்ச்சியின் வழியாக எவ்வளவுதான் தண்ணீர் இடைவிடாமல் வந்து கொண்டிருந்தாலும், மூடியிருக்கிற பாட்டில்களுக்குள் தண்ணீர் செல்லுவதில்லை. அதைப் போலவே இருதயம் பூட்டப்பட்டிருப்பதால், எவ்வளவுதான் ஆசீர்வாதமான மழை பெய்தாலும் ஒரு சொட்டு ஆசீர்வாதம்கூட வாழ்க்கையில் பிரவேசிப்பதில்லை.

தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையிலே திறக்கப்படாத அறைகள் இருக்கக்கூடும். பூட்டப்பட்ட ஒவ்வொரு பகுதியையும் இப்பொழுது திறந்து விடுங்கள். கர்த்தர் உங்களோடு இருக்கிறதினாலே, உங்கள் வாழ்நாளெல்லாம் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

நினைவிற்கு:- “எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” (எபே. 1:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.