No products in the cart.
அக்டோபர் 25 – ஞானத்தினால் பெலன்!
“ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்” (நீதி. 24:5).
பிரசங்கி சொல்லுகிறார், “ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான். அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டை பண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம்” (பிர. 9:14-16). பலமுள்ள ராஜாவைப் பார்க்கிலும், ஏழையினுடைய ஞானத்தால் வந்த பெலன் அதிகமாயிருந்தது. ஆகவே, ஜனங்கள் விடுதலை அடைந்தார்கள்.
ஒரு பஸ்சிலே சுற்றுலாப்பயணிகள், மகிழ்ச்சியோடு சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று அங்கேயிருந்த இரண்டு சகோதரிகளுக்குள் பெரிய சண்டை வந்தது. டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார். சண்டைக்கு என்ன காரணம்? ஒரு பெண், பஸ்சின் ஜன்னலை திறந்து வைக்கவேண்டும். காற்றுவராவிட்டால் மூச்சுத் திணறி மரித்துப்போய்விடுவேன் என்றாள். ஆனால், அடுத்தவளோ, “பஸ்சின் ஜன்னலைத் திறக்கக்கூடாது. குளிர்காற்று எனக்கு நெஞ்சை அடைக்கிறதினால் நான் மரித்துப்போய்விடுவேன்” என்றாள்.
சாதாரணமாய் ஆரம்பித்த இந்த சண்டை, போகப்போக வலுப்பெற்றது. பாதிபேர் முதல் பெண்ணையும், மீதி பாதிபேர் அடுத்த பெண்ணையும் ஆதரித்தார்கள். பெரிய அடிதடி சண்டை வந்துவிடுமோ என்கிற நிலைமை வந்தது.
அதிலே ஞானமுள்ள ஒருவர் சொன்னார். “நாம் பணம் கொடுத்து சுற்றுலா வந்திருக்கிறோம். இந்த இரண்டுபேரும் இப்படி பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள். ஜன்னலை அரைமணி நேரம் திறந்து வையுங்கள். ஒரு பெண் சாகட்டும். பின் அரைமணி நேரம் ஜன்னலை மூடி வையுங்கள். அடுத்த பெண்ணும் சாகட்டும். நாம் சுற்றுலாவைத் தொடரலாம்” என்றார். ஞானமாய் அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு, எல்லாரும் அமைதியாகிவிட்டார்கள். பயணம் அமைதியாகத் தொடர்ந்தது.
பாபிலோன் ராஜா, தான் கண்ட சொப்பனத்தையும், அதின் அர்த்தத்தையும் யாராலும் சொல்லக்கூடாததால், ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். பெலனும், அதிகாரமும், கோபமும் கொண்ட நேபுகாத்நேச்சாரை யாராலும் எதிர்த்துப் பேச முடியாது.
ஆனால் தானியேலின் ஞானம், தேவ ஞானமாயிருந்தது. அவர் ராஜாவினிடத்தில் சென்று, முதலாவது தவணை கேட்டார். பிறகு தன் நண்பர்களோடு தேவசமுகத்திலே அமர்ந்திருந்து ஜெபித்தார். முடிவில் ராஜா கண்ட சொப்பனத்தையும், அதின் அர்த்தத்தையும் அறிவித்தார். அதன்மூலம் பாபிலோனிலுள்ள அத்தனை ஞானிகளும் பிழைத்தார்கள்.
தேவபிள்ளைகளே, ஞானமுள்ளவன் பெலமுள்ளவன். உங்களுடைய வாழ்க்கையிலே சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் அதை செய்வதற்கு ஞானம் தேவை. கர்த்தரிடத்தில் ஞானத்தைக் கேளுங்கள். கர்த்தர் உங்களுக்கு அதைத் தருவார் (யாக். 1:5).
நினைவிற்கு:- “நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப்பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்” (பிர. 7:19).