No products in the cart.
ஏப்ரல் 28 – கேள்விகள்!
“அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை” (மத். 22:46).
வாழ்க்கையில் அநேகர் தேவனிடத்திலே முறுமுறுத்து கேள்விகளைக் கேட்கிறார்கள். ஏன் எனக்கு இப்படி நடந்தது, ஏன் எனக்கு தோல்வி, ஏன் எனக்கு வேலையில்லை, ஏன் என் பிள்ளை மரித்தது என்றெல்லாம் கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
சிலருடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கிறது. என் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று தங்களுக்குத்தாங்களே கேள்வி எழுப்பி கலங்கிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு இந்தப் பூமியிலே விடைகாண முடியாது. கர்த்தருடைய இராஜ்யத்திற்கு போகும்போதுதான் நம்முடைய கேள்விகளின் எல்லா பதில்களையும் நாம் பெற்றுக்கொள்வோம்.
எப். ஜே. டேக்ஸ் என்ற பக்தன் வேதத்திலுள்ள கேள்விகளையெல்லாம் எண்ண ஆரம்பித்தார். பழைய ஏற்பாட்டிலே 2,272 கேள்விகளும், புதிய ஏற்பாட்டிலே 1,022 கேள்விகளும் இருக்கிறதைக் கண்டுபிடித்து அத்தனை கேள்விகளையும் அவர் தயாரித்த டேக்ஸ் வேதாகமத்தில் எழுதி வைத்திருக்கிறார்.
இதிலே பொதுவான கேள்விகள் உண்டு. மனிதன் மனிதனிடம் எழுப்பிய கேள்விகள் உண்டு. அதே நேரத்தில் கர்த்தர் மனிதனிடம் கேட்கும் கேள்விகளும் உண்டு. மனிதன் கர்த்தரிடத்திலே கேட்ட கேள்விகளும் உண்டு. முதல் கேள்வி சாத்தான் மனிதனிடம் தந்திரமாக எழுப்பிய கேள்வியாகும். கர்த்தர்மேல் சந்தேகப்படும்விதத்திலே “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” என்று தந்திரமாகக் கேட்டான். இன்று அநேகம்பேர் சோதிக்கும்படியான கேள்வியோடு வருகிறார்கள். நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அந்தக் கேள்வி நம்மை சோதனைக்குள்ளாக்கி முடிவில் வழிவிலகிப்போகச்செய்துவிடும்.
ஆண்டவர் மனிதனிடம் கேட்ட முதல் கேள்வி “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்பதே. தன்னைவிட்டு தூரமாய்ப்போன மனிதனை மீண்டும் தன்னுடைய அன்பிலே இழுத்துக்கொள்ளும்படி ஆண்டவர் உடைந்த உள்ளத்தோடு நீ எங்கே இருக்கிறாய் என்றார் (ஆதி. 3:9). இன்றைக்கும் நீங்கள் எந்த நிலைமையில் இருக்கிறீர்கள், உங்கள் ஆத்துமா எப்படி இருக்கிறது என்று உங்களைப் பார்த்து கேட்கிறார். அந்தக் கேள்வி உங்களையும் தேவனையும் இணைக்கும்படியான கேள்வியாக இருக்கட்டும். ஆதி அன்புக்குத் திரும்பி வந்துவிட தீர்மானித்துவிடுங்கள்.
மனிதன் கர்த்தரைப் பார்த்து எழுப்பிய முதல் கேள்வி என்ன? “என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” (ஆதி. 4:9). தன்னுடைய சகோதரனை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிட்டு, கர்த்தரைப் பார்த்து, துணிகரமாக நான் என் சகோதரனுக்கு காவலாளியோ என்று காயீன் கேட்கிற கேள்வியைப் பாருங்கள். இதனால் காயீன் பற்பல சாபங்களைப் பெற்றுக்கொண்டார்.
இன்று உங்களுடைய உள்ளத்தில் பல கேள்விகள் எழும்பலாம். ‘கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்’ என்று தாவீது இராஜா கேட்டதைப்போல கேட்கலாம். சில வேளையிலே நாம் பிள்ளைகளைப்போல உரிமையோடு பரமதகப்பனிடத்திலே கேள்வி கேட்கிறோம். ஆனால் முறுமுறுத்துவிடக்கூடாது. தேவபிள்ளைகளே, நிச்சயமாகவே உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலுண்டு.
நினைவிற்கு:- “நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (சங். 91:15).
