AppamAppam - Tamil

ஜூலை 3 – முன்னே நடந்து போய்!

“தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ..தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்” (ஆதி. 33:3).

யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவத்தை இந்த வேதப் பகுதியில் வாசிக்கிறோம். யாக்கோபும், ஏசாவும் இரட்டைப் பிள்ளைகள். ஏசா வேட்டைக்காரனும் பலசாலியுமாயிருந்தான். யாக்கோபோ, கூடாரவாசியும் குணசாலியுமாய் இருந்தார். ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தையும், அவனுக்குரியதான தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும் யாக்கோபு தந்திரமாய் எடுத்துக் கொண்டபடியினால், தன் சகோதரன் தன்னைக் கொலையும் செய்வார் என்று பயந்து வீட்டை விட்டே ஓடிப் போய்விட்டார்.

பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இரண்டுபேரும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை. இப்பொழுது யாக்கோபுக்கு மனைவிகளும், மறுமனையாட்டிகளும் ஏற்பட்டு 13 பிள்ளைகளும் பிறந்தார்கள். திரளான சொத்துக்களும் கிடைத்தன. ஆனாலும் அண்ணனைப் பற்றிய பயம் கூடவே இருந்து வந்தது.

சகோதரனாகிய ஏசாவைச் சந்தித்தே தீர வேண்டும் என்கிற சூழ்நிலை வந்தபோது, யாக்கோபு பின்வாங்க ஆரம்பித்தார். ஏசா தன் மேல் விழுந்து முறியடிக்கக்கூடும் என்று எண்ணி, முன்பு தன் வேலைக்காரர்களையும், அதன் பின் தன் மந்தைகளையும், அதன் பின் மறுமனையாட்டிகளையும், பின்பு பிள்ளைகளையும் வைத்து, தான் கடைசியில் நடந்து வந்தார். யாக்கோபு மிகவும் பயந்து வியாகுலப்பட்டார் (ஆதி. 32:7). அப்பொழுதுதான் அவர் கர்த்தரைத் தேடினார். ஜெபம் பண்ண ஆரம்பித்தார். கர்த்தருடைய இரக்கத்திற்கும், வல்லமைக்கும் காத்திருந்தார். அவர் செய்த ஜெபம் எத்தனை உருக்கமானது!

“என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே; … அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்” (ஆதி. 32:9-11) என்று மனம் திறந்து ஜெபித்தார்.

அந்த ஜெபம் ஒரு சாதாரண ஜெபம் அல்ல. முழு இரவும் தொடர்ந்து ஜெபித்த ஜெபம். கர்த்தரோடு போராடி ஜெபித்த ஜெபம். அந்த ஜெபத்தில் கர்த்தரைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். கர்த்தருடைய தொடுதல் தனக்குக் கிடைக்கிற வரையிலும் அவர் விடவில்லை.

ஜெபித்து முடித்த பின் என்ன நடந்தது தெரியுமா? அதுவரை பின்தங்கி கடைசியிலே நடந்தவர், ஜெபத்திற்கு பின் முன்னே வந்து விட்டார். ‘தான் அவர்களுக்கு முன்னாக நடந்துச் சென்றான்’ என்று ஆதி. 33:3-ல் சொல்லப்படுகிறது. ஆம், அந்த ஜெபம் யாக்கோபைத் தைரியவானாய் மாற்றிவிட்டது. கர்த்தர் தன்னோடிருக்கிறார் என்ற உணர்வைக் கொண்டு வந்தது.

தேவபிள்ளைகளே, ஜெபம் உங்களுடைய சூழ்நிலைகளை மாற்றும் என்பதை முழுமையாய் விசுவாசியுங்கள்.

நினைவிற்கு:- “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங். 18:29).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.