AppamAppam - Tamil

ஜூலை 4 – சாலேமின் ராஜா!

“அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு” (ஆதி. 14:18).

மெல்கிசேதேக்கு குறித்து மேலே சொன்ன வசனத்திலே எழுதப்பட்டிருக்கிறது. ஆபிரகாமின் நாட்களில் அவர் சாலேமின் ராஜாவாகவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாகவும் இருந்தார். ராஜாவின் அபிஷேகமும் அவர் மேல் இருந்தது.

மாத்திரமல்ல, அவர் ஆபிரகாமை ஆசீர்வதிப்பதைப் பார்க்கும்போது, தீர்க்கதரிசியின் அபிஷேகமும் அவர் மேல் இருந்ததைக் காணலாம். இந்த மூன்று அபிஷேகங்களையும் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார். தேவபிள்ளைகள் ஆளுகையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், ராஜாக்களின் அபிஷேகம் தேவை. பெற்றுக் கொண்ட அபிஷேகத்தில் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், ஆசாரியனின் அபிஷேகமும், தீர்க்கதரிசன அபிஷேகமும் தேவை.

நம்முடைய தேவனை நாம் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று அழைக்கிறோம். ஆபிரகாம் தேவனுடைய ஒரு தீர்க்கதரிசி. கர்த்தர்தாமே அபிமெலேக்கினிடத்தில், ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி என்று சொன்னார். ஈசாக்கு ஆசாரியனுக்கு நிழலாட்டமானவர். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நிழலாட்டமாக பலிபீடத்தின் மேல் கிடத்தப்பட்டார்.

யாக்கோபு ராஜாவுக்கு நிழலாட்டமாக இருக்கிறார். ஏனென்றால், தேவன்தாமே அவருக்கு தேவப்பிரபு என்ற அர்த்தத்தையுடைய ‘இஸ்ரவேல்’ என்ற பெயரைச் சூட்டினார்.

புதிய ஏற்பாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது, நற்செய்தி நூல்கள், இரண்டாவது, அப்போஸ்தல நடபடிகள், மூன்றாவது, வெளிப்படுத்தின விசேஷம். நற்செய்தி நூல்களிலே இயேசு கிறிஸ்துவை தீர்க்கதரிசியாயும், அப்போஸ்தலர் நடபடிகளிலே ஆசாரியனாயும், வெளிப்படுத்தின விசேஷத்திலே ராஜாதி ராஜாவாயும் காணலாம்.

இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். நேற்றைய தினத்தில் அவர் தீர்க்கதரிசியாக இருந்தார். இன்றைய தினத்தில் அவர் நமக்காக பரிந்து பேசுகிற ஆசாரியனாக இருக்கிறார். இனி வரும் நாட்களிலும் என்றைக்கும் அவர் ராஜாதி ராஜாவாக இருப்பார்.

வெளிப்படுத்தல் 1:8ல் நம் ஆண்டவரைக் குறித்து, அவர் இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தவர் தீர்க்கதரிசி. இருக்கிறவர் ஆசாரியர், வருகிறவர் ராஜாதி ராஜா. ஆம், அவர் தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், ராஜாதி ராஜாவாகவும் மூன்றுவிதமான ஊழியத்தை நிறைவேற்றுகிறார்.

யோவான் 4:19ல், சமாரிய ஸ்திரீ இயேசுகிறிஸ்துவைத் தீர்க்கதரிசியாய்க் கண்டாள். “ஆண்டவரே நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். எபி. 9:11ல் கிறிஸ்து பிரதான ஆசாரியனாய் வெளிப்படுவதைக் காணலாம். 1 யோ. 1:7ல் நம்மை சுத்திகரிப்பவராகவும், 1 கொரி. 15:25ல் ஆளுகை செய்பவராகவும் அவரைக் காண்கிறோம். தேவபிள்ளைகளே, அவர் உங்களை ராஜாவாக, ஆசாரியனாக, தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை” (எரே. 18:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.