AppamAppam - Tamil

ஜூலை 5 – தனிமை நீங்குகிறது!

“நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசுவா 1:5).

கர்த்தரிடமிருந்து நமக்குக் கொடுக்கப்பட்ட மேன்மைகளில் மிகச்சிறந்தது அவருடைய பிரசன்னம்தான். அவருடைய பிரசன்னத்தைப் போல இனிமையானதும் வல்லமையானதும் வேறு ஒன்றுமில்லை. அவருடைய மகிமையான பிரசன்னத்தை நமக்குத் தரவே இயேசுகிறிஸ்து பூமிக்கு இறங்கி வந்தார். வேதம் சொல்லுகிறது, “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்” (மத். 28:20). அவ்வாறு சொல்லி நம்முடன் தொடர்ந்து இருந்து வருகிறார்.

ஒரு சகோதரன், பிராமண குலத்திலிருந்து இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதின் நிமித்தம் சொல்லொணா பாடுகளை அனுபவித்தார். ஒரு நாள் அவருடைய பெற்றோர் அவரைப் பார்த்து ‘உன்னைப் பெற்று வளர்த்த நாங்கள் வேண்டுமா அல்லது இயேசுகிறிஸ்து வேண்டுமா, சொல்’ என்றார்கள். அவர் அமைதியாக, “இயேசுகிறிஸ்துதான் வேண்டும்” என்றார்.  ‘உனக்கு சொத்து, சுதந்தர வீதம், வீடு ஒன்றும் வேண்டாமா’ என்று கேட்டார்கள். அதற்கு ‘இயேசுகிறிஸ்துவே போதும்’ என்றார். அவர்கள் மூர்க்கக் கோபம் கொண்டு அவருடைய துணிமணிகளைக் கிழித்து அடித்து “வெளியே போ” என்று துரத்திவிட்டார்கள்.

அந்த சகோதரன் தெருவிலே இறங்கி தனிமையாய் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, இயேசுகிறிஸ்துவின் இனிமையான குரல் அவருடைய காதுகளில் கணீரென்று தொனித்தது. “மகனே, நான் உன்னைத் திக்கற்றவனாய் விடேன்” என்று அவர் பேசினார். அப்போது கர்த்தருடைய இனிமையான பிரசன்னம் அந்த சகோதரனைச் சூழ்ந்துகொண்டது.

கர்த்தர் அன்று கிதியோனைப் பார்த்து, “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (நியாயா. 6:12) என்றார். தேவதூதன் மரியாளைப் பார்த்து “கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்” (லூக். 1:28) என்றார். கர்த்தர் மோசேயைப் பார்த்து “இருக்கிறவராகவே இருக்கிறேன்” (யாத். 3:14) என்று வாக்களித்தார். அதே கர்த்தர் மாறாதவராய், வல்லமையுள்ளவராய் எப்போதும் உங்களோடுகூட இருக்கிறார். ஆகவே திடன் கொள்ளுங்கள். சோர்வுகளை உதறிப் போட்டுவிட்டு உற்சாகமாய் இருங்கள். கர்த்தர் உங்களைக் கொண்டு மகிமையான காரியங்களைச் செய்தருளுவார்.

தாவீது ராஜா கர்த்தர் தன்னோடிருக்கிறதை உணர்ந்தார். கர்த்தரை எப்போதும் முன்பாக வைத்திருக்கிறபடியினால் அசைக்கப்படுவதில்லை என்று சொல்லி திடன்கொண்டார்.  தன்னைவிட்டு விலகாத கர்த்தர் தம்முடைய மேய்ப்பராய் எப்போதும் தம்மோடுகூட இருக்கிறார் என்கிற உணர்வு அவருக்கு இருந்ததினாலே அவர் சந்தோஷத்தோடு, “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங். 23:4) என்று சொல்லி பெலன் கொண்டார். கர்த்தர் முடிவுபரியந்தமும் தாவீதோடுகூட இருந்து வழிநடத்தியது போலவே உங்களையும் நடத்துவார்.

நினைவிற்கு:- “அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்” (மாற்கு  16:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.