AppamAppam - Tamil

ஜூலை 6 – தாவீதின் உண்மை!

“கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்” (1 சாமு. 26:23).

அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மேல் கைப்போட வேண்டாம் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்படியே நிறைவேற்ற தாவீது உண்மையுள்ளவராயிருந்தார். சவுல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவர். ஆனால் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினால் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்டார். கர்த்தர் சவுலின் சிங்காசனத்தை எடுத்து தாவீதுக்குக் கொடுக்கச் சித்தமானார். என்றாலும் தாவீதுக்கு சவுலின்மேல் ஒரு மதிப்பும், மரியாதையும் இருந்தது.

ஆனால் சவுலோ, தாவீதை வேட்டையாட துரத்திக் கொண்டு சென்றார். தாவீது மலைகளிலும், குகைகளிலும் ஒளிந்திருந்தாலும் சவுல் தன் வீரர்களோடு தாவீதைத் தேடி பிடிக்கும்படி சென்றுக் கொண்டேயிருந்தார். ஆனால் அந்தோ ஒரு நாள் சவுல் தூங்கிக்கொண்டிருந்தபோது தாவீது ஒருவருக்கும் தெரியாமல் சவுலின் அருகிலே வந்தார். நித்திரைப் பண்ணிக் கொண்டிருந்த சவுலின் அருகிலிருந்த ஈட்டியையும் தண்ணீர் செம்பையும் எடுத்துக்கொண்டு போனார். ஆனால் சவுலையோ கொல்லவில்லை. சவுலை கொல்ல விரும்பிய அபிசாயைப் பார்த்து தாவீது, “கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற் போகிறவன் யார்?” (1 சாமு. 26:9) என்றார்.

கர்த்தர் தாவீதின் உண்மையைப் பார்த்தார். தாவீதை ஆசீர்வதிக்கச் சித்தமானார். தாவீது வரவர விருத்தியடைந்தார். ஏற்றக்காலத்தில் சவுலின் ராஜ்யபாரத்தையும் சுதந்தரித்துக் கொண்டார். தாவீதின் உண்மை நமக்கிருக்கும் என்றால் அது எத்தனை ஆசீர்வாதமாயிருக்கும்! கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு விரோதமாக ஒரு போதும் போசாதிருங்கள். கையை உயர்த்தாதிருங்கள். வேதம் சொல்லுகிறது. “தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்” (ரோமர் 8:33).

கர்த்தர் மேல் அன்புள்ளவர்கள், அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய ஊழியர்கள் மேல் குற்றம் கண்டுபிடிக்க தீவிரம் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய மேன்மையைப் பாராட்டுவார்கள். குறைகளைக் காணும்போது அவர்களை அவமானப்படுத்த எண்ணாமல் கர்த்தருடைய சமுகத்திலே முழங்காலூன்றி அவர்களுக்காக கண்ணீரோடும், பாரத்தோடும் ஜெபிப்பார்கள். தாவீதுக்கிருந்த உண்மை எத்தனை அருமையானது!

தாவீதின் உண்மையை சாலொமோன் கண்டார். ஆகவே சாலொமோன் ஜெபிக்கும்போது “என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மனநேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்” (1 இராஜா. 3:6) என்றார். தேவபிள்ளைகளே, கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருங்கள். அபிஷேகிக்கப்பட்டவர்கள்மேல் குற்றம் கண்டுபிடிக்கிற சுபாவத்தை உங்களை விட்டு விலக்கி, தெய்வீக சமாதானத்தோடும், சாந்தத்தோடும் நடந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்” (சங். 31:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.