AppamAppam - Tamil

Sep – 19 – காக்கையின் வேண்டுதல்!

“…கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்” (சங். 147:9). காக்கைக் குஞ்சுகளும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகின்றன. கர்த்தர் அந்தக் கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்கிறார். அவைகளுக்கு ஆகாரங் கொடுக்கிறார். பறவைகளைக் கவனித்துப் பார்த்து அவைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அருமையான பாடங்கள் பல உண்டு. எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் (நீதி. 6:6). காட்டுப் புஷ்பங்களைப் பார்த்து கர்த்தர் எப்படி அவைகளை உடுத்துவிக்கிறார் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் (லூக். 12:27). ஆகாயத்துப் பட்சிகளை கர்த்தர் எவ்விதமாய் போஷிக்கிறார் என்பதைப் பார்த்து, கவலையை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் (மத். 6:26). காக்கைக் குஞ்சுகள் கூப்பிட்டு ஆகாரத்தைப் பெற்றுக் கொள்ளுகிறதைப் பார்த்து நீங்களும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும். கூப்பிடுகிற காக்கை குஞ்சுக்கு பதில் கொடுக்கிற தேவன், தம்முடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதனுக்கு செவிக்கொடுப்பது எத்தனை நிச்சயம்! நீங்கள் ஆகாயத்துப் பறவைகளைவிட விசேஷமானவர்கள் அல்லவா? உங்களுக்கு விலையேறப்பெற்ற ஆத்துமா உண்டு அல்லவா? உங்களுடைய ஆத்தும மீட்புக்காக இயேசுகிறிஸ்து தம்முடைய உயிரையே கொடுத்தார் அல்லவா? அவர் நிச்சயமாகவே உங்களுடைய கூப்பிடுதலுக்கு செவிக்கொடுப்பார். பொதுவாக, காக்கையை ஒருவரும் விரும்ப மாட்டார்கள். அதை ஆகாயத்து தோட்டி என்பார்கள். அது செத்து அழுகின பொருட்களை சாப்பிடும். அதற்கு அழகுமில்லாமல் கன்னங்கரேல் என்று இருக்கிறது. குரலும் கேட்க சகிக்காது. ஒரு நாளில் ஆயிரம் காக்கைகளைக் கொன்று போட்டாலும் அதனால் இந்த உலகத்துக்கு எந்த நஷ்டமில்லை. ஒரு காகம் மரித்ததென்றால் அதோடு அதன் கதை முடிந்து விடுகிறது. ஆனால் மனிதன் அப்படியல்ல. மனிதன் மரித்தாலும் அவனுடைய அழியாத ஆத்துமா நித்திய ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுகிறது. காக்கையின் கூப்பிடுதலுக்குச் செவிக்கொடுக்கிற கர்த்தர், அழியாத ஆத்துமாவையுடைய உங்களுக்கு செவி கொடுப்பது அதிக நிச்சயமல்லவா? கர்த்தர் எலியாவை ஒரு காகத்தின் மூலமாகத்தான் போஷிக்க சித்தமானார். ஆயிரமாயிரமான பறவைகள் இருந்தபோதிலும் தன்னை நோக்கிக் கூப்பிட்ட அந்த காகத்துக்கு கர்த்தர் ஒரு வேலையைக் கொடுத்தார். அந்த வேலையை அது எவ்வளவு உண்மையும், உத்தமமுமாய் செய்தது! வேதம் சொல்லுகிறது: “காகங்கள் அவனுக்கு (எலியாவுக்கு) விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது” (1 இராஜா. 17:6). காகத்தை சாதாரணமாக யாராலும் பழக்க முடியாது. அது யாருக்கும் கொடுக்கவும் செய்யாது. மனிதனுடைய கரங்களிலிருந்து பொருட்களை பறித்துக் கொண்டு போகத்தான் வழி பார்க்கும். ஆனால் கர்த்தர் அதை பழக்கினார். கொடுக்காத காகத்தையும் கொடுக்கும்படி செய்தார். காகங்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றின. தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை நேசிக்கிறார். அவர் உங்களுடைய பரமபிதாவாயிருக்கிறார். நீங்கள் அவருடைய சித்தத்தை செய்ய பரிபூரணமாய் அர்ப்பணித்துவிடுங்கள். நிச்சயமாகவே அவர் உங்களையும் போஷிப்பார். நினைவிற்கு :- “காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?” (யோபு 38:41).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.