AppamAppam - Tamil

ஜூன் 18 – அலட்சியம் பண்ணாமல்!

“திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்” (சங். 102:16)

நம்முடைய தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர் மாத்திரமல்ல, ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறவர். சங்கீதக்காரன் அவருக்கு “ஜெபத்தைக் கேட்கிறவரே”(சங். 65:2) என்று ஒரு அருமையான பெயரை சூட்டினான். இன்றைக்கும், கர்த்தர் உங்களுடைய ஜெபத்தைக் கேட்கிறவராயிருக்கிறார். அவர், “திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல் அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்” (சங். 102:16) என்று வேதம் சொல்லுகிறது.

இந்த திக்கற்றவர்கள் யார்? திக்கற்றவர்கள் என்கிற வார்த்தைக்கு ஆங்கில அகராதியிலே தகப்பனையும், தாயையும் இழந்தவர்கள், அநாதைகள், ஏழ்மை நிலையிலிருக்கிறவர்கள், தனிமையிலிருக்கிறவர்கள் என்றெல்லாம் அர்த்தம் சொல்லப்படுகிறது. ஆனால் இங்கே திக்கற்றவர்கள் என்று சொல்லும்போது, எப்பொழுதுமே ஏழ்மை நிலமையிலிருப்பவர்களை மாத்திரம் குறிக்கவில்லை. அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ராஜாவாகவும் இருக்கலாம், இளவரசனாகவும் இருக்கலாம். அது ஒரு உதவியற்ற, ஆறுதலற்ற நபரைக் காண்பிக்கிறது.

வேதத்திலே, யோசபாத் என்று சொல்லப்பட்ட ஒரு இராஜாவைப் பாருங்கள்! அவருடைய வாழ்க்கையிலே மிகப்பெரிய பிரச்சனைகள், உபத்திரவங்கள் வந்தன. அவருடைய பெலத்திற்கு மிஞ்சி ஒரு பெரிய இராணுவ சேனை அவருக்கு எதிராக வந்தது. அந்த நேரத்தில் அவர் “எங்கள் தேவனே, அவர்களை நியாயந்தீர்க்க மாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது” (2 நாளா. 20:12) என்று திக்கற்றவனைப்போல கதறி அழுதார்.

2015-ம் ஆண்டு, சென்னைப் பட்டணத்தில் ஒரு மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு வந்தபோது, ஏராளமான ஜனங்கள் பாதிக்கப்பட்டார்கள். திடீரென்று திக்கற்றவர்களைப்போல மாறிப்போனார்கள். மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்கூட வங்கியில் இருந்தோ, தானியங்கி இயந்திரம் மூலமாகவோ பணத்தை எடுக்க முடியவில்லை. அவர்கள் வைத்திருந்தது விலையுயர்ந்த கைபேசிகளாய் இருந்தாலும் யாரையும் அவற்றைக் கொண்டு தொடர்புகொள்ள முடியவில்லை.

அவர்கள் வைத்திருந்த மிகப் பிரசித்தி பெற்ற பென்ஸ் (Benz Car) கார்களெல்லாம் தண்ணீருக்குள் மூழ்கி போயின. ஆகாரத்திற்கும், அடிப்படை தேவைகளுக்கும் திக்கற்றவர்களாக காணப்பட்டார்கள். திடீரென்று இயற்கை பேரழிவுகள் வருகின்றன. சூழ்நிலைகள் மாறுகின்றன. அப்போது யாராயிருந்தாலும் திக்கற்ற நிலைமைக்கு கடந்துபோகிறார்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் இப்படிப்பட்ட திக்கற்ற பாதையிலே கடந்து போக வேண்டியிருக்கும்போது, கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். கர்த்தர் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்வார். இன்றைக்கிருக்கிற திக்கற்ற நிலைமையிலிருந்து கர்த்தர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவான் 14:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.