AppamAppam - Tamil

ஜூன் 4 – அன்புக்கு பொறாமை இல்லை!

“அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” (1 கொரி. 13:4).

பொறாமையோ எலும்புருக்கி என்று வேதம் சொல்லுகிறது (நீதி. 14:30). ஆனால் அன்புள்ளவர்களின் இருதயத்தில் பொறாமை தங்குவதில்லை. ஏனென்றால், அன்பு சகலவற்றையும் தாங்கி, சகலவற்றையும் விசுவாசித்து, சகலவற்றையும் நம்பி, சகலவற்றையும் சகிக்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் பொறாமைக்கு இடம் ஏது? அன்புக்கு பொறாமையில்லை.

புறாவுக்கு கசப்பு இல்லை. எல்லா பறவைகளுக்கும் கசப்பு நீராகிய பித்த நீர் உண்டு. ஆனால் புறாவுக்கோ கசப்பு நீராகிய பித்த பை இருப்பதில்லை. ஆகவே புறாவுக்கு வேதத்தில் நீங்காத ஒரு இடம் உண்டு. ஆவியானவரும்கூட, தன்னை புறாவோடு இணைத்துக்கொள்ளுகிறதைக் காணலாம். அன்புள்ள பறவையாகிய புறாவுக்கு பொறாமையில்லை.

பொறாமையின் துவக்கம் லூசிபரின் இருதயத்தில் இருந்தது. தன்னை தேவனுக்கு ஒப்பாக உயர்த்தி, கர்த்தர்பேரில் பொறாமைக் கொண்டதினாலே அவன் பரலோகத்திலிருந்து கீழேத் தள்ளப்பட்டான். பொறாமையினால் ஏற்பட்ட அந்த வீழ்ச்சி, எவ்வளவு பயங்கரமான வீழ்ச்சி என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கர்த்தர் ஆபேலின் பலியை அங்கீகரித்தபோது, காயீனுடைய உள்ளம் சந்தோஷப்படவில்லை. தன்னுடைய சொந்த தம்பிதானே, அவன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு உயரட்டும் என்று எண்ணவில்லை. அவனுக்கு உடனே பொறாமை வந்தது. அந்த பொறாமை கொலைவெறியாய் மாறிவிட்டது. தன்னுடைய சொந்த சகோதரன் என்றும் பாராமல், சகோதரனுக்கு விரோதமாய் எழும்பி அவனைக் கொலை செய்தான் (ஆதி. 4:3-8).

இன்றைக்கும்கூட, சகோதரர்கள் மத்தியிலே பொறாமையும், எரிச்சலுமான காயீனின் ஆவி கிரியை செய்கிறது. பொறாமைக்கு ஒருபோதும் நீங்கள் இடம் கொடாதிருங்கள். சகோதரனுடைய முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, நீங்கள் அதைக்குறித்து கர்த்தரிடத்தில் ஸ்தோத்திரம்பண்ணி மகிழ்ச்சியடையுங்கள். அவர்களில் குறை காணும்போது, அதை பகிரங்கப்படுத்தி, அவர்களை அவமானப்படுத்த எண்ணாமல், ஜெபத்தில் அவர்களைத் தாங்குங்கள்.

பாருங்கள்! யோசேப்பின் சகோதரர்கள், யோசேப்பின் மேல் பொறாமை கொண்டார்கள். அந்த பொறாமையினால் அவனைக் குழியிலே தூக்கிப்போட்டார்கள். அவனைக் கொலை செய்ய முயற்சித்தார்கள். முடிவாக, மீதியானியரின் கைகளிலே அவனை விற்றுப்போட்டார்கள்.

முடிவு என்னவாயிற்று? எந்த சகோதரர்கள் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டார்களோ, அந்த சகோதரர்களே யோசேப்பை பணிந்து கொள்ளும்படியான சூழ்நிலையை கர்த்தர் கொண்டு வந்தார். அவர்கள் தங்களைத் தரைமட்டும் தாழ்த்தி, அவனுடைய பாதங்களை வணங்கினார்கள். பொறாமைப்படுகிறவர்கள் தாழ்த்தப்படுவது உறுதி.

தேவபிள்ளைகளே, கல்வாரி அன்பினால் நிரப்பப்பட உங்களை ஒப்புக் கொடுங்கள். ஜெபஆவி உங்கள் உள்ளத்தில் பற்றியெரியட்டும்.

நினைவிற்கு:- “சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேதுரு 2:2,3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.