AppamAppam - Tamil

ஜூன் 7 – அன்பு இயேசுவின் அன்பு!

“அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவான் 3:16).

உங்களுடைய முதல் அன்பும், முழு அன்பும் கர்த்தருக்கே உரியதாக இருக்கட்டும். நம் அன்பு இரட்சகரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் நேசிப்பீர்களாக.

அன்பு என்ற வார்த்தை எத்தனை இனிமையானது! பெற்றோர் பிள்ளைகளின் அன்புக்காக ஏங்குகிறார்கள். கணவன் மனைவியின் அன்புக்காகவும், மனைவி கணவனின் அன்புக்காகவும் ஏங்குகிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு அன்பு கிடைக்காமல் போகும்போது, சோர்ந்து போகிறார்கள். வாழ்ந்து என்ன பயன் என்று எண்ணிவிடுகிறார்கள். அந்த தன்னலமற்ற தூய்மையான அன்பை உங்கள்மேல் பொழிகிறவர் நம் அருமை ஆண்டவர்தான். அவருடைய சுபாவமே அன்பாயிருப்பதாகும். வேதம் சொல்லுகிறது, “தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவான் 4:7).

உங்களுடைய அன்பு முதலில் கர்த்தரில் ஆரம்பித்து, அதன் பின்பு குடும்பத்தில் பரவ வேண்டும். குடும்பத்தில் மனப்பூர்வமாய் அன்புகூரவேண்டும். வேதம் சொல்லுகிறது: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில் தான் அன்புகூருகிறான்” (எபேசி. 5:25,28).

இரண்டாவதாக, அந்த அன்பு குடும்பத்தை தொடர்ந்து, சகோதர சிநேகம் உள்ளதாய் கடந்து வரவேண்டும். வேதம் சொல்லுகிறது: “எல்லாரையும் கனம் பண்ணுங்கள், சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்” (1 பேது. 2:17). உங்கள் சகோதர சகோதரிகளை நேசியுங்கள். அவர்களும் பரலோகத்தில் காணப்பட வேண்டுமல்லவா? அதோடு நின்றுவிடாமல் இந்த தெய்வீக அன்பானது, அயலகத்தாரையும் நேசிக்கும்படி, அவர்களுக்கும் உதவி செய்யும்படி உங்களைத் தூண்டி எழுப்புகிறது (மத். 19:19, 22:39, மாற். 12:31, லூக். 10:27). நீங்கள் உங்களை நேசிப்பது போல பிறரையும் நேசிக்கும்படி கட்டளைப் பெற்றிருக்கிறீர்களே.

கிறிஸ்துவினுடைய அன்பு அதோடு நின்று விடுவதில்லை. உங்களுடைய சத்துருக்களையும் நேசிக்கும்படி கிருபையளிக்கிறது. இயேசு சொன்னார்: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிப்பிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” (லூக். 6:26,27).

எந்த சூழ்நிலையிலும் நீங்கள் மற்றவர்களை நேசிக்க முடியும். பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய அன்பு உங்களுடைய இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறது. அந்த அன்பு நீரோடையாக குடும்பத்தையும், சகோதரரையும், அயலகத்தாரையும், சத்துருக்களையும் நேசிக்கும்படி உங்களை ஏவி எழுப்புகிறது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்காக ஜீவனைக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறீர்கள். அந்த கல்வாரி அன்புக்குத் தகுதியுள்ள ஒரு வாழ்க்கை வாழ உங்களை அர்ப்பணிப்பீர்களா?

நினைவிற்கு:- “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.