AppamAppam - Tamil

மே 15 – ஆசீர்வாதமாக்குவார்!

“…உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்” (உபா. 23:5).

நம் தேவன் சாபங்களை முறிக்கிறவர். சாபங்களிருக்குமிடத்தில் ஆசீர்வாதமான நீரூற்றை பொங்கப் பண்ணுகிறவர். சாபங்கள் ஒரு மனிதனை தாக்கும்போதுதான், அவன் அதின் கொடிய கோர வல்லமையை உணருகிறான். ஐயோ! இந்த சாபத்திலிருந்து விடுதலையாவது எப்படி என்று தத்தளிக்கிறான். சில சாபங்கள் தேவனிடத்திலிருந்து வருகின்றன. சில சாபங்கள் நியாயப்பிரமாணத்தை மீறுகிறதினால் வருகின்றன. சில சாபங்கள், மனிதர் தங்களுக்கு இழைத்த துரோகம் தாங்க முடியாமல், மனம் குமுறி மற்றவர்களை சபிப்பதினால் வருகின்றன. வேறு சிலர் சாபங்களை தங்கள் மேலேயே ஏற்றுக்கொள்ளுகிறார்கள், சுமக்கிறார்கள்.

ஆதி மனிதன் பாவம் செய்தபோது, அவனிமித்தம் இந்த பூமி சபிக்கப்பட்டது. சபிக்கப்பட்ட இந்தப் பூமி முள்ளையும், குருக்கையும் முளைப்பித்தது. எங்கு பார்த்தாலும் முட்கள், கண்களைக் குத்தும் முட்கள், உள்ளத்தை பிழியும் முட்கள், ‘ஐயோ இந்த சாபமான முட்களிலிருந்து எனக்கு விடுதலையே இல்லையா’ என்று மனிதன் ஏங்க ஆரம்பித்தான்.

தேவனால் வந்த சாபத்தை தேவன் முறிக்க வேண்டும். ஆகவேதான், தேவனாகிய கர்த்தர் இயேசு என்கிற பெயரிலே பூமிக்கு இறங்கி வந்தார். சாபத்திற்கு அடையாளமான முள்ளை, முள்முடியாக தன்னுடைய சிரசின் மேல் ஏற்றுக்கொண்டார். அந்த முட்கள் அவருடைய தலையை ஆழமாக கிழித்தன. சாபத்தின் வேதனையை அந்த முட்கள் மூலம் அவர் உணர்ந்தார். முள்முடி சூட்டப்பட்ட அவருடைய தலையிலிருந்து இரத்தத்தை சிந்திக்கொடுத்தார்.

ஒரு மனிதன் முள்முடி சூட்டப்பட்ட இயேசுவுக்கு முன்பாக நின்று, “என் தேவனே எனக்காக சாபமானீரே, அந்த முள் முடியில் வழிகிற இரத்தத்தின் மூலம் என் சாபங்களை மாற்றியருளும்” என்று கதறும்போது, கர்த்தர் ஒவ்வொரு சாபத்தையும், ஆசீர்வாதமாக மாறப்பண்ணுவார். அமெரிக்க தேசத்தில் ஒரு சாபமிருந்தது. நீக்ரோ மக்களையெல்லாம் அவர்கள் பிடித்து அடிமைகளாக்கி, ஆடு மாடுகளை விற்பதை போல ஏலம் போட்டார்கள். அந்த அடிமைகள் தங்களுடைய நீதி, நியாயங்களையெல்லாம் எங்கும் சொல்ல முடியாது.

ஆபிரகாம் லிங்கன் அந்த அடிமைகளின் நிலைமையை உணர்ந்து அவர்கள் மேல் மனதுருகினார். அடிமைகளுக்கு விடுதலையையும், தேசத்திலே சுதந்திரத்தையும் கொடுத்து சட்டம் இயற்றினார். ஆனால், அந்தோ! அவர் இயற்றிய சட்டத்தை எதிர்த்து ஒருவன் அவரை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். அவரது பிரேத ஊர்வலத்தில் திரளான நீக்ரோக்கள் வந்து கலந்துகொண்டார்கள். ஒரு நீக்ரோ பெண்மணி கூட்டத்தின் மத்தியிலிருந்து தன் பிள்ளையை உயர்த்தி காண்பித்து, ‘அதோ அவரைப்பார். அவர் உனக்காக மரித்தார்’ என்று சொன்னாள். அதை எல்லாரும் கேட்டு கண்ணீர் சிந்தினார்கள்.

தேவபிள்ளைகளே, ‘என் சாபத்தை மாற்றும்’ என்று கர்த்தரிடம் கதறி ஜெபியுங்கள். அவர் நிச்சயம் மனமிரங்குவார்.

நினைவிற்கு:- “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்” (கலா. 3:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.