AppamAppam - Tamil

மே 21 – ஆத்துமாவுக்கு நற்செய்தி!

“தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்” (நீதி.25:25).

நம்முடைய தேவன் சரீரத்திற்கு மட்டுமல்ல, ஆத்துமாவுக்கும் நன்மைகளை சம்பூரணமாய் தருகிறவர். ஆத்துமாவிலே நமக்குக் கிடைக்கிற பெரிய நன்மை பாவ மன்னிப்பு ஆகும். மட்டுமல்ல, நற்செய்தியானது ஆத்துமாவுக்கு இன்னும் ஒரு நன்மையாக விளங்குகிறது.

ஒரு மனிதன் வெயிலிலே பல மைல் தூரம் நடந்து வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிழலுக்கும், தண்ணீருக்கும் ஏங்கும் அவன், தூரத்திலே ஒரு கிச்சிலி மரத்தைக் காண்பானென்றால், அதன் நிழலையும் இனிமையான பழங்களையும் நோக்கி களிகூர்ந்து ஓடுவான். அந்த மரத்தின் அருகிலே குளிர்ந்த நீரூற்று இருக்குமானால், அவனுடைய உள்ளமெல்லாம் மகிழ்ந்து களிகூரும். இப்படித்தான் தூரதேசத்திலிருந்து வருகிற நற்செய்தியும் ஆத்துமாவை களிகூரப்பண்ணக்கூடியது. வேதம் சொல்லுகிறது, “காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது” (உன். 2:3).

தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி என்று வேதம் சொல்லுகிறது. அந்த தூரதேசம்தான் பரலோக தேசம். அங்கிருந்து வருகிற நற்செய்திதான் சுவிசேஷத்தின் செய்தி. கர்த்தருடைய நற்செய்தி ஆத்துமாவுக்கு குளிர்ந்த தண்ணீரைப் போன்றது. ஆகவேதான் இயேசுகிறிஸ்து ஜனங்கள் மேல் மனதுருகி அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார் (மாற்கு 6:34).

நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும் (நீதி. 15:30). நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும் (நீதி. 12:25). நமக்கு கிடைத்திருக்கிற நற்செய்தி என்ன? இயேசு நமக்காக மரித்தார் என்கிற நற்செய்தி. மரித்த அவர் உயிரோடு எழுந்தார் என்கிற நற்செய்தி. மரித்த இயேசு இனி மரிப்பதில்லை. யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் என்பதே அந்த நற்செய்தி.

யோபு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவானாயிருந்தாலும், அந்த நற்செய்தியை எவ்வளவு சந்தோஷத்தோடு அனுபவிக்கிறார் என்பதை பாருங்கள். “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்” என்றும் எழுதுகிறார் (யோபு 19:25-27).

தேவபிள்ளைகளே, இதுவரையிலும் நீங்கள் பலவிதமான தோல்வியின் செய்திகளையும், துக்க செய்திகளையும், சோர்ந்து போன செய்திகளையும் கேட்டிருந்திருக்கலாம். ஆனால் இன்று உங்களுடைய வாயைத் திறந்து, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்கள் துக்கத்தை எல்லாம் சந்தோஷமாய் மாற்றியருளுவார்.

நினைவிற்கு:- “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” (2 கொரி. 12:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.