AppamAppam - Tamil

மே 1 – ஆவியை!

“ஆவியை அவித்துப் போடாதிருங்கள்” (1 தெச. 5:19).

கர்த்தர் ஒரு மனிதனுக்கு கொடுத்திருக்கிற ஈவுகளிலே சிறந்த ஈவு பரிசுத்த ஆவிதான். அந்த விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை மண்பாண்டமாகிய உங்கள் சரீரத்திலே பெற்றிருக்கிறீர்கள். இதைப் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமை அல்லவா? ஆவியை அனல் மூட்டி எழுப்பி விடுங்கள் என்று ஆலோசனை சொல்லும்போதே, ஆவியை அவித்துப் போடாதிருங்கள் என்று கர்த்தர் எச்சரிக்கவும் செய்கிறார். ஆவியானவர், பற்றி எரிகிற அக்கினிக்கு ஒப்பானவர்.

நீங்கள் ஜெபிக்கும்போதும், துதிக்கும்போதும், அந்த ஆவி அனல்கொண்டு எழுகிறது. ஆவியின் வரங்கள் கிரியை செய்கின்றன. அதே நேரத்தில் ஆவியானவரைத் துக்கப்படுத்திவிடும்போது, நீங்கள் பெற்ற ஆவி அவிந்து போகிறது. உதாரணத்துக்கு, ஒரு மண்ணெண்ணெய் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். விளக்கில் எண்ணெய் இல்லாவிட்டாலோ அல்லது திரியின் நீளம் குறைந்துபோனாலோ அது அணைந்து போகும்.

அதைப் போலவே ஒரு மின்சார விளக்குக்கு மின்சாரம் வரவில்லையென்றாலோ, மின் விளக்கிலுள்ள மெல்லிய இழை அறுந்துவிட்டாலோ, மின் விளக்குக்கும் பிரதான மின் சப்ளைக்குமுரிய தொடர்பு விடுபட்டாலோ அது அணைந்து போகும். அப்படியே பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலையும், எச்சரிக்கையையும் புறக்கணித்து, ஜெப ஜீவியத்திலே குறைந்துபோய், துணிகரமான பாவங்களுக்குள் செல்லும்போது, ஆவியை அவித்துப் போடுகிறவர்களாயிருப்பீர்கள்.

ஒரு காலத்தில் வல்லமையாய் ஆவியானவரால் எடுத்துப் பயன்படுத்தப்பட்ட விசுவாசிகளும், ஊழியர்களும் அணைந்துபோய் பிரகாசிக்க முடியாமல் நஷ்டப்பட்டு போனதற்கு மூலக்காரணம் அவர்கள் விபச்சாரத்திலும், வேசித்தனத்திலும், இச்சைகளிலும் விழுந்து போனதேயாகும். நீங்கள் ஆவியை அவித்துப் போடாமல், அனல்மூட்டி எழுப்ப வேண்டுமென்றால், ஒருபோதும் இச்சைக்கு இடம் கொடுத்துவிடாதேயுங்கள். ஆவியானவர் தங்கியிருக்கிற சரீரத்தைப் பரிசுத்தமாகவும், கனமாகவும் ஆண்டுகொள்ளுங்கள்.

வேதம் சொல்லுகிறது, “தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டை பண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைப் பண்ணுகிறான்” (1 தெச. 4:7,8). கர்த்தரை அதிகமாய் நேசித்த தாவீதின் வாழ்க்கையிலும்கூட, இந்த இச்சைகள் மெதுவாய் புகுந்தன. அரண்மனையின் உப்பரிகையின்மேல் உலாவின தாவீதின் கண்கள், இச்சையினால் இழுக்கப்பட்டு, முடிவில் கொடிய விபச்சார பாவத்தில் விழச் செய்தது.

எனவேதான் தாவீது, “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்… உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்” (சங். 51:10,11) என்று கண்ணீரோடு அழுது புலம்பினார். தேவபிள்ளைகளே, ஒருபோதும் ஆவியை அவித்துப் போடாமல் அனல் மூட்டி எழுப்பிவிடுங்கள். ஆவியானவர் உங்களுக்குள் தங்கியிருப்பதுதான் உங்களுடைய மேன்மை.

நினைவிற்கு:- “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுங்கள்” (ரோமர் 12:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.