AppamAppam - Tamil

மே 11 – ஆவியினாலும் அக்கினியாலும்!

“அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” (மத். 3:11).

இயேசு கிறிஸ்துவை யோவான் எத்தனை அருமையாக அறிமுகம் செய்கிறார் பாருங்கள். பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் இயேசு. ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் யோவான் (யோவான் 1:33).

இங்கே சுவிசேஷத்தின் இரண்டு குணாதிசயங்கள் வெளிப்படுகின்றன. முதலாவது தேவனுக்கும், மனிதனுக்கும் இடையேயுள்ள பிரிவினையை தம்முடைய சிலுவை மரணத்தினால் நிவர்த்தி செய்யவேண்டுமென்பதற்காகவே பாவ நிவாரண பலியாக கிறிஸ்து தன்னை அர்ப்பணிக்கிறார். இரண்டாவதாக, பாவ மன்னிப்பைப் பெற்ற கர்த்தருடைய பிள்ளைகள் அதோடு நின்றுவிடாமல், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவனோடு ஒன்றாய் இணைந்துவிடவும், பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தத்தைப் பெற்று கர்த்தரைப் போல மறுரூபமாக்கப்படவும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும், அக்கினி அபிஷேகமும் தேவை என்பதை வெளிப்படுத்துகிறது.

சிலுவையண்டை வந்து நிற்கும்போது, கிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும்கூட, பாவ சுபாவங்கள் மனிதனைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த பாவ சுபாவங்களை மேற்கொள்ள சுட்டெரிப்பின் அக்கினி அவசியம். ஆகவேதான் இயேசு பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன் என்றார் (லூக். 12:49).

ஒரு சகோதரன், தன் வீட்டுத் தோட்டத்தின் அருகே ஒரு கொடிய நாகப்பாம்பைக் கண்டு, அதை தலையில் அடித்துக் கொன்று அப்படியே போட்டுவிட்டு போய்விட்டார். ஆனால் இந்த பாம்பின் இரத்தத்தை மோப்பம் பிடித்து, மற்றொரு கொடிய பாம்பு பழிக்குப் பழி வாங்கும்படி அன்று இரவு அவருடைய வீட்டு கதவை கொத்திக் கொண்டே இருந்தது. அப்பொழுதுதான் அவர் பாம்பை அடித்து போட்டுவிட்டதோடு நில்லாமல் அதை தீயினால் சுட்டெரித்திருக்கவும் வேண்டும் என்பதை உணர்ந்தார்.

உடனே தன்னுடைய துப்பாக்கியை எடுத்து தன் வாசலின் அருகே பழி வாங்க நின்று கொண்டிருந்த பாம்பையும் சுட்டுக்கொன்றுவிட்டு, இறந்துபோன இரண்டு பாம்புகளையும் கொண்டுபோய் தீயில் கூட்டெரித்தார். பாம்பு தலையில் அடிக்கப்படவும் வேண்டும் அதே நேரத்தில் சுட்டெரிக்கப்படவும் வேண்டும். சிலுவையில் இயேசு வலுசர்ப்பமாகிய பாம்பின் தலையை நசுக்கினார். அதோடல்லாமல், பெந்தேகொஸ்தே நாள் வந்தபோது பரிசுத்த ஆவியின் அக்கினியை இறக்கி, அந்தகார வல்லமைகளை சுட்டெரிக்கவும் செய்தார்.

தேவபிள்ளைகளே, உங்களுக்கு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாகும் பரிசுத்தமும் தேவை. பரிசுத்த ஆவியின் அக்கினியால் உண்டாகும் சுத்திகரிப்பும் தேவை. பாவங்கள் மன்னிக்கப்படவும், பாவ சுபாவங்கள் சுட்டெரிக்கப்படவும் வேண்டும். “பரிசுத்த ஆவியானவரே எனக்குள் பலமாய் இறங்கி வாரும். என்னை அக்கினி ஜுவாலையாக மாற்றி, உமக்காக பிரகாசிக்கச் செய்யும்” என்று மன்றாடுங்கள்.

நினைவிற்கு:- “அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது” (அப். 2:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.