AppamAppam - Tamil

ஏப்ரல் 03 – சிலுவை மரணம்!

“அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது” (யோவான் 19:41).

இயேசுகிறிஸ்துவின் மரணமும், அடக்கம்பண்ணப்படுதலும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஒரு நல்ல ஆவிக்குரிய பாடத்தை கற்றுத் தருவதுடன் ஆறுதலையும் தந்தருளுகிறது. அவர் ஏன் அடக்கம் பண்ணப்பட்டார்? உயிர்த்தெழுவதற்காகவே அடக்கம் பண்ணப்பட்டார். மாம்ச சரீரம் அடக்கம் பண்ணப்பட்டு, ஆவிக்குரிய சரீரம் உயிர்த்தெழுந்தது.

நம்முடைய தேசத்திலே இந்து சகோதரர்கள் யாராவது மரிக்கும்போது, அவர்களை எரிப்பது அந்த மார்க்கத்தின் பழக்க வழக்கமாயிருக்கிறது. முஸ்லீம் சகோதரர்களிலே யாராவது மரித்தால் அவர்களைப் புதைப்பது அந்த மார்க்கத்தின் வழக்கமாயிருக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாமோ எரிப்பதுமில்லை, புதைப்பதுமில்லை. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களைக் கொண்டு போய் விதைக்கவே செய்கிறோம்.

ஒரு விவசாயி, விதைக்கப் போகும்போது, தான் விதைக்கும் அனைத்து விதைகளும் மகிமையாய் முளைத்தெழும்பும் என்கிற நம்பிக்கையோடுதான் விதைக்கச் செல்லுகிறான். அப்படியே அவை முளைத்து சில முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் கொடுக்கிறது. வேதம் சொல்லுகிறது, “மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமை யுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்” (1 கொரி. 15:42-44).

கிறிஸ்துவின் அடக்கம் பண்ணப்படுதலும், விதைக்கிற விதைக்கு ஒப்பாகவேயிருந்தது. விதை முளைத்தெழும்புவதுபோல அவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். அதன் மூலமாக உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுத்தார். இயேசு சொன்னார்; “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவான் 11:25,26).

விதைக்கப்பட்ட விதை முளைத்தெழும்ப வேண்டுமானால், அதற்குள் ஜீவன் இருக்க வேண்டும். ஒரு விதை சிதைக்கப்பட்டாலோ அல்லது சுடு தண்ணீரில் போடப்பட்டாலோ அதற்குள்ளிருக்கும் ஜீவன் செத்து விடுகிறது. அதன் பின்பு அது முளைப்பதில்லை. அதுபோல பாவத்திலே வாழுகிற மனிதனுடைய ஜீவன் சாத்தானாலே சிதைக்கப்பட்டுப் போய் விடுகிறது. பாவம் செய்கிற ஆத்துமா சாகும். பாவத்தின் சம்பளம் மரணம். பாவத்திலே மரிக்கிறவர்கள் கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையிலே உயிர்த்தெழ முடியாது. காரணம், உள்ளே கிறிஸ்துவாகிய ஜீவன் இல்லாததேயாகும்.

தேவபிள்ளைகளே, உங்களுக்குள் கிறிஸ்துவாகிய ஜீவன் இருக்கிறதா? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம் பண்ணுகிறாரா?

நினைவிற்கு:- “கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்” (ரோமர் 14:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.