AppamAppam - Tamil

ஏப்ரல் 02 – சிலுவையைச் சுமந்துகொண்டு!

“அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்கு புறப்பட்டுப் போனார்” (யோவான் 19:17).

கர்த்தர் உங்களுக்காக பரலோகத்தை விட்டு பூமிக்கு இறங்கி வந்தார். உங்களுக்காக அடிமையின் ரூபமெடுத்தார். உங்களுக்காக சிலுவையைச் சுமந்தார். சாதாரணமாக, அந்த பாரமான சிலுவையை யாராலும் தூக்க முடியாது. அப்படித் தூக்கினாலும் அந்த பளுவோடு மலையில் ஏறுவது மிகவும் கடினமான காரியம். இயேசுவுக்கு ஒருபக்கம் பசி, தாகம், தூக்கமின்மை. மற்றொரு பக்கம், சரீரமெல்லாம் சவுக்குகளினால் அடிக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனை. அந்த வேதனையான சூழ்நிலையில், சிலுவையை தூக்கிக்கொண்டு எருசலேம் வீதி வழியா கொல்கொதா மேட்டை நோக்கி நடந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, உகாண்டா தேசத்தை இடி அமீன் என்று சொல்லப்பட்ட ஒரு கொடிய சர்வாதிகாரி அரசாண்டார். அவர் அப்பாவி மக்களையும், தன்னுடைய விரோதிகள் என்று கருதி, சித்திரவதை செய்து கொலை செய்தார். ஒரு முறை சந்தேகத்தின்பேரில் முந்நூறு பேரை பிடித்து சுட்டுக் கொல்லுவதற்காக வரிசையாக நிறுத்தினார். அப்படி சுட்டு கொல்லுகிறவர்களை தூக்கி அடக்கம்பண்ண அவர் ஒரு வழியை கையாண்டார். ஒருவன் மாத்திரம் சுவரின் அருகே போய் நிற்க வேண்டும். அவனை போர் வீரன் சுட்டவுடனே, அவனுடைய சரீரத்தை மற்றவன் தூக்கிக்கொண்டு போய் மண்ணில் புதைக்க வேண்டும். பின்பு அவன் சுவர் பக்கமாய் வந்து சுடப்படுவதற்காக நிற்க வேண்டும். அடுத்து அவனை போர் வீரர்கள் சுடுவார்கள். அடுத்தவன் வந்து அவனைக் கொண்டு போய் அடக்கம் செய்து விட்டு அவனும் சுவர் பக்கமாய் வந்து நிற்க வேண்டும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். சுடப்பட்ட ஒருவனை மற்றொருவன் போய் தூக்கிக்கொண்டு பிரேத குழியில் போடும்போது, தூக்கிக்கொண்டு செல்லுகிறவன் என்ன நினைப்பான்? அடுத்த சில வினாடி நேரங்களில் தானும் அதேபோல துடிப்பதை உணருவான் அல்லவா? அதுபோல இயேசுகிறிஸ்து பாரமான சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்கும்போது, அவருடைய தீர்க்கதரிசன கண்கள் இனி அவருக்கு என்னென்ன துன்பங்கள் சம்பவிக்கப்போகிறது என்பதையெல்லாம் பார்த்திருந்திருக்கும்.

ஆனாலும் அவர் அதைக் குறித்து பயப்படவோ, வருத்தப்படவோவில்லை. அவருடைய கண்கள் சிலுவைக்கு அப்பாலுள்ள மேன்மையான காரியங்களை மட்டுமே நோக்கிப் பார்த்தன. இம்மையிலுள்ள பாடுகளை அவர் பொருட்படுத்தவில்லை உயிர்த்தெழுதலின் சந்தோஷத்தையும், நித்தியத்தில் உள்ள மகிமையையுமே அவர் நோக்கிப் பார்த்தார். “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபி. 12:2). தேவபிள்ளைகளே, உங்களுக்காக சிலுவை சுமந்த அந்த இரட்சகரை நோக்கிப் பாருங்கள்.

நினைவிற்கு:- “அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.