AppamAppam - Tamil

Feb 26. போராட்டம் யாருடன்?

“மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல.. வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபே. 6:12).

 கிறிஸ்தவ வாழ்க்கை என்பது போராட்டமான ஒரு வாழ்க்கைதான். இந்தப் போராட்டத்திலே உங்களுடைய விரோதி, மாம்சமும் இரத்தமுமல்ல. வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைதான். ஆம், நீங்கள் சாத்தானோடும், அந்தகார லோகாதிபதிகளோடும் போராடுகிறீர்கள்.

ஒரு வாலிபன், “நான் புதிதாக இயேசுவை ஏற்றுக் கொண்டு வல்லமையாய் ஊழியம் செய்ய முற்பட்டேன். ஆனால், என் ஊரிலுள்ள மூத்த ஊழியர்களோ என்னை மட்டம் தட்டி, குற்றஞ்சாட்டி, சோர்ந்து போகப்பண்ணுகிறார்கள். அவர்கள்மேல் எனக்குக் கசப்பாய் இருக்கிறது” என்று சொன்னான். இப்படி சோர்ந்து போகிறவர்களுக்காக ஒரு கதை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு முறை மனிதரைக் கொல்லும் புலி ஒன்று ஒரு கிராமத்தைப் பாழாக்கி கொண்டிருந்தது. ஆகவே, அந்த கிராம மக்கள் மிகவும் பிரயாசப்பட்டு மிகுந்த பணம் செலவழித்து ஒரு வேட்டைக்காரனை அழைத்துக் கொண்டு வந்தார்கள். புலியை வேட்டையாடுவதற்கு காட்டிலுள்ள உயர்ந்த மரங்களின் மேல் அவனுக்கு மேடைகளை அமைத்துக் கொடுத்தார்கள். புலியை கொன்று வீழ்த்திவிட்டால் பல லட்சம் ரூபாயைப் பரிசாகத் தருவதாக வாக்களித்தார்கள்.

அந்த வேட்டைக்காரன் தன் துப்பாக்கியிலே குண்டுகளை நிரப்பிக்கொண்டு மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்தான். அப்போது அங்கிருந்த கொசுக்கள் வந்து அவனைக் கடிக்க, அவனுடைய சிந்தையெல்லாம் அவை பக்கமாய்த் திரும்பியது. இரவெல்லாம் கொசுக்களை அடித்துக் கொண்டிருந்தான்.புலியோ அவ்வழியாய் வந்து கிராம மக்களைத் தாக்கிவிட்டு போய் விட்டது.

ஆவிக்குரிய வாழ்க்கையிலும் விசுவாச வாழ்க்கையிலும் கொசுக்கள் கடிப்பதுண்டு. காரணமில்லாமல் மற்றவர்கள் உங்களைப் பகைப்பார்கள்; குறை சோல்லுவார்கள்; குற்றம் சாட்டுவார்கள். ஆனால் இவர்களெல்லாரும் வெறும் கொசுக்கள்தான். இவர்களைப் பார்த்து கவனத்தை சிதறவிட்டு, உங்களது அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் விட்டுவிடக் கூடாது.

உங்களுடைய யுத்தம் கொசுக்களோடு அல்ல; மாம்சத்தோடும், இரத்தத்தோடு மல்ல; விசுவாசிகளையும், ஊழியர்களையும் குறைச்சொல்லி தூண்டி விடுகிற சாத்தானோடுதான். சாத்தான் ஜனங்களைத் தூண்டி எழுப்பிவிட்டு, தான் மறைந்துக் கொள்ளுகிறான். நீங்கள் அம்பை நொந்துக்கொண்டிருக்க நேரமில்லை. எதவனிருக்க அம்பை நோவானேன்? சாத்தானுடைய தலையை இயேசுவின் நாமத்தினாலே நசுக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை எப்பொழுதும் குற்றப்படுத்துவதுதான் சாத்தானுடைய வேலை.

தேவபிள்ளைகளே, சாத்தானுடைய எல்லா குற்றச் சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தினாலே நீங்கள் அவனை மேற்கொள்ள முடியும். வேதம் சொல்லுகிறது, “இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர் மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ் சாட்டுகிறவன் தாழ தள்ளப்பட்டுப் போனான்” (வெளி. 12:10).

நினைவிற்கு:- “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ. 1:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.