AppamAppam - Tamil

Feb 23 – பொருத்தனை!

“நீ தூணுக்கு அபிஷேகஞ் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே” (ஆதி.31:13).

கர்த்தர் பொருத்தனையைப் பார்க்கிறார். அதை நிறைவேற்றி ஆசீர்வதிக்கிறார். வேதத்தில் அநேகர் பொருத்தனைச் செய்தார்கள் என்றும், கர்த்தர் அதைக் கண்டார் என்றும், வாசிக்கிறோம். யாக்கோபு தன் தகப்பனையும், தாயையும் விட்டு பதாம் அராமுக்குப் போகும் வழியிலே, கர்த்தரிடத்தில் ஒரு பொருத்தனைச் செய்தார். அப்பொழுது அவர் வாலிப வயதுடையவராயிருந்தார். எங்கு செல்லுகிறோம் என்றும் அறியாமல், எதிர்காலம் என்ன என்றும் தெரியாமல் கர்த்தரிடத்திலே ஜெபித்து ஒரு பொருத்தனைச் செய்தார்.

வேதம் சொல்லுகிறது, “தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்கு சமாதானத்தோடே திரும்பி வரப் பண்ணுவாரானால் , கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசம பாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைப் பண்ணிக்கொண்டான்” (ஆதி. 28:20-22).

அநேகர் கடன் பிரச்சனைகளால் நெருக்கப்படும்போது, அதற்கு மூலக்காரணம் தாங்கள் தசமபாகம் செலுத்தாததுதான் என்பதை உணருகிறார்கள். இனி ஒழுங்காக தசமபாகம் செலுத்துவேன் என்று பொருத்தனைச் செய்யும்போது, கர்த்தர் கடன் பிரச்சனைகளை மாற்றி ஆசீர்வதிக்கிறார். அவர் பொருத்தனையைக் காண்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.

அன்னாள் ஒரு பொருத்தனைச் செய்தாள். பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் நிந்தைகளையும், அவமானங்களையும் அவள் சகித்துவிட்டாள். முடிவாக கர்த்தரிடத்திலே, ‘கர்த்தர் உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைத் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின் மேல் சவரகன்கத்திபடுவதில்லை’ என்று ஒரு பொருத்தனை பண்ணினாள் (1 சாமு. 1:11).

கர்த்தர் அந்த ஜெபத்தையும், பொருத்தனையையும் கண்டு, அற்புதமான தீர்க்கதரிசியாகிய சாமுவேலைக் கொடுத்தார். தானியேலின் பொருத்தனையைப் பாருங்கள்! தானியேல் பாபிலோன் தேசத்திற்குள் போகும்போது ராஜாவின் போஜனத்தாலும், திராட்சரசத்தாலும் தன்னை தீட்டுப்படுத்தலாகாது என்று உறுதியா பொருத்தனைச் செய்து கொண்டார். அந்த பொருத்தனையின் விளைவாக கர்த்தர் தானியேலை உயர்த்தினார். பாபிலோனிலுள்ள எல்லா ஞானிகளைப் பார்க்கிலும் அதிக ஞானத்தைக் கொடுத்தார்.

தேவபிள்ளைகளே, வேதத்திலே அநேக பரிசுத்தவான்கள் பொருத்தனைச் செய்து கர்த்தரிடத்தில் ஜெபித்தபோது, கர்த்தர் அவர்கள் சத்தத்தைக் கேட்டு அவர்கள் வேண்டிக்கொண்டதை எல்லாம் அருளிச் செய்தார். நீங்களும் பொருத்தனையுடனான ஜெபத்தோடு உங்களை கர்த்தருக்கு அர்ப்பணிப்பீர்களா?

 நினைவிற்கு:- “ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்” (எண்.30:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.