No products in the cart.
Feb 22. பெரியவரிலும் பெரியவர்!
“ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது” (வெளி. 19:16).
நம்முடைய தேவன் பெரியவரிலும் பெரியவர். ஆகவேதான், ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா, தேவாதி தேவன் என்னும் நாமங்களை அவர் கொண்டிருக்கிறார். வேதத்தில் அவருடைய நாமங்களை வாசிக்கும்போதெல்லாம், அவரைப் போற்றித் துதிக்கும்படி இருதயம் ஏவப்படுகிறது.
அப். பவுல், ராஜாதி ராஜாவை நோக்கிப் பார்த்தார், பரவசமடைந்தார். அவர் சொல்லுகிறார், “அவரே நித்தியானந்தமுள்ள ஏகச்சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக் கூடாதவருமாயிருக்கிறவர்” (1 தீமோ. 6:15,16).
அப். பவுலின் கண்களில் ராஜாதி ராஜாவின் தரிசனம் இருந்ததினாலே, அவர் ஊழியத்திற்காக பல தேசங்களுக்கு கடந்து சென்றார். இந்தப் பூமியிலே, தான் ராஜாதி ராஜாவின் ஸ்தானாதிபதி என்கிற மகிழ்வுடன் வல்லமையாக ஊழியம் செய்தார். உங்களுடைய கண்களிலும் தேவன் ‘ராஜாதி ராஜா’ என்கிற தரிசனம் இருக்க வேண்டும்.
அப். யோவானுக்கு கர்த்தர் இந்த தரிசனத்தை கொடுத்தார். அவரை ரோம அரசாங்கம் கைது செய்து நாடு கடத்தி பத்மு தீவிலுள்ள தனிமைச் சிறையில் அடைத்தது. ஆனால் அதைக் குறித்து யோவான் பயப்படவில்லை. அவர் எழுதுகிறார்; “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” (வெளி. 1:5).
கர்த்தர் இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பு ஏழு ஆண்டுகள் அந்திக் கிறிஸ்துவினுடைய ஆட்சி நடைபெறும். வலுசர்ப்பமும், கள்ளத்தீர்க்கதரிசியும், மிருகமும் இந்த உலகத்தை ஆளுவார்கள். இதை உபத்திரவ காலம் என்று வேதம் அழைக்கிறது. ஆனால், முடிவிலே கர்த்தர் ராஜாதி ராஜாவாக கர்த்தாதி கர்த்தாவாக வானத்திலிருந்து இறங்கி வருவார்.
அப்பொழுது மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசியும் அந்திக்கிறிஸ்துவும் ஆட்டுக் குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால், அவர்களை ஜெயிப்பார் (வெளி. 17:14). அதோடு அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சிக்கு ஒரு முடிவுண்டாகும். நீங்கள் இயேசு கிறிஸ்துவோடுகூட இந்த உலகத்தை என்றென்றும் அரசாளுவீர்கள். கர்த்தர் ராஜாதி ராஜாவாயிருப்பார். நீங்கள் ராஜாக்களாய் அரசாளுவீர்கள்.
வேதம் சொல்லுகிறது: “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்” (தானி. 7:27). தேவபிள்ளைகளே, அந்த நாள் சமீபித்திருக்கிறது. உங்கள் கண்கள் எப்பொழுதும் ராஜாதி ராஜாவை எதிர்பார்த்திருக்கட்டும்.
நினைவிற்கு:- “எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்” (வெளி. 5:10).