AppamAppam - Tamil

Feb 21. பெருகுவாய்!

“அவர்களை (இஸ்ரவேலரை) எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்” (யாத்.1:12).

கர்த்தர், தம்முடைய ஜனங்கள் பலுகிப் பெருக வேண்டுமென்று விரும்புகிறார். சாத்தானோ அவர்களை ஒடுக்கி, சிறுமைப்படுத்தி அழிக்க வேண்டுமென்று எண்ணுகிறான். இதில் எப்பொழுதுமே கர்த்தருடைய நினைவுகளும், விருப்பங்களும்தான் நிறைவேறும். அவர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடைபடாது.

கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் என்ன? ‘நீ திரளான ஜனங்களுக்குத் தகப்பன். உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், ஆபிரகாம் என்னப் படும். உன்னை மிகவும் அதிகமாப் பலுகப் பண்ணுவேன்’ (ஆதி. 17:4-6) என்பதாகும். கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தை ஆபிரகாமின் பிள்ளைகளாகிய உங்களுக்கும் கொடுத்திருக்கிறார். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருக வேண்டுமென்று சித்தங்கொண்டிருக்கிறார்.

வேதம் சொல்லுகிறது, “உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடை செய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து, நீ வலதுபுறத்திலும் இடது புறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாக்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்” (ஏசாயா 54:2,3).

 மேலே சொன்ன இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிப் படித்த வில்லியம் கேரி என்ற ஊழியர் “தேவனுக்காக பெரிய காரியங்களைத் திட்டமிடு, அவருக்காக பெரிய காரியங்களை செய்துமுடி” என்று முழங்கினார். அப்படியே அவர் வலது புறமும் இடதுபுறமும் இடங்கொண்டு பெருகினார். ஏராளமான இந்திய மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்த்தார்.

ஆபிரகாமுடைய பிள்ளைகள் எகிப்திலே பெருகினபோது, அதைக் கண்டு எகிப்தின் ராஜா பயந்து, அவர்களை ஒடுக்க தீர்மானித்தான். கர்த்தருடைய பிள்ளைகள் பெருகுவது சாத்தானுக்கு பிரியமானதல்ல. அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்து, மற்றவர்களைப் பார்க்கிலும் சிறந்து விளங்குவதை அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆகவே தேவபிள்ளைகள் மேன்மையடைவதை அவன் தடுக்க முயற்சிக்கிறான். ஜனங்கள் அதிகமா இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்று, எழுப்புதலுக்குள் பிரவேசிப்பதை தடுக்க முயற்சிக்கிறான்.

அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களை ஒடுக்கும்படி அவர்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தினான். அதிகாலையில் இருந்து இரவு வரையிலும் கொடிய முறையில் வேலை வாங்கினான். வைக்கோல்கூட கொடுக்காமல் அவர்களை மனமடிந்து போகச் செய்தான். மட்டுமல்ல, ஆண் குழந்தைகளைக் கொன்று, நதியில் போட்டுவிடுவது போன்ற கொடிய திட்டங்களைக் கொண்டு வந்தான். ஆனால் “எகிப்தியர் இஸ்ரவேலரை எவ்வளவாய் ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்” (யாத். 1:12) என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களைப் பெருகச் செய்வார்.

நினைவிற்கு:- “துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரிய வான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்கனென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப் பண்ணுகிறோம்” (2 கொரி. 6:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.