AppamAppam - Tamil

Feb 20. பெரிய கிரியைகள்!

“…என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” (யோவா. 14:12).

இயேசு இந்த உலகத்திலிருந்த நாட்களில் பலத்த அற்புதங்களையும், பெரிய கிரியைகளையும் செய்தார். அவர் அதிகாரமும், வல்லமையும் உடையவராய் யிருந்தார். அந்த அதிகாரத்தையும், ஆளுகையையும் அவர் உங்களுக்கும் கொடுத்திருக்கிறார்.

தேவதூதரிலும் சற்றே சிறியவராயிருக்கும் உங்களைக் கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்ய ஆவலுள்ளவராயிருக்கிறார். இயேசு சொன்னார், “நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” (யோவா.14:12). இயேசு கிறிஸ்துவின் மேல் ஆளுகையும் அதிகாரமும் நிரம்பியிருந்தன.

 இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி அதைக் குறித்து சொல்லும்போது, “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்” (ஏசா.11:2) என்றார்

இயேசுவின் மேல் பெலனை அருளும் ஆவி தங்கியிருந்தது. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு பெலனை அருளும் ஆவியைத்தந்து, தான் செய்த கிரியைகளை அவர்களும் செய்ய வேண்டுமென விரும்புகிறார். அன்று சீஷர்களோடு இயேசு இணைந்து, அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் வசனத்தை உறுதிப் படுத்தியது போலவே, உங்களோடும்கூட இணைந்து செய்ய விரும்புகிறார்.

இயேசு நடந்து சென்றபோது பிசாசுகள் அவரைப் பார்த்து அலறின. “தேவகுமாரனே உமக்கும் எங்களுக்கும் என்ன எங்களை வேதனைப்படுத்தவா வந்தீர்?” (மத்.8:29) என்று சொல்லி நடுநடுங்கின. இயேசு கட்டளைக் கொடுத்த போது, அவைகளெல்லாம் அலறி ஓடின. உங்களை கனத்தினாலும், மகிமையினாலும் முடிசூட்டியிருக்கிற கர்த்தர் உங்களைக்கொண்டு அசுத்த ஆவிகளைத் துரத்தவும், பிசாசின் கட்டிலுள்ளவர்களை விடுதலையாக்கவும் சித்தங்கொண்டிருக்கிறார்.

அப். பவுல், “…மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்” (கொலோ. 1:11). என்று எழுதுகிறார். மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் நீங்கள் பெலப்பட வேண்டும்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய பெலத்தினால் நிரப்பப்படும்போது, எந்த கோலியாத்தும் உங்களுக்கு எதிர் நிற்க முடியாது. எந்த யோர்தானும் உங்களுக்கு சவால்விட முடியாது. எந்த எரிகோவும் தடை செய்ய முடியாது. இயேசு சொன்னார்: “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை… பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” (மத் 16:18,19).

நினைவிற்கு:- “நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை” (ஏசா. 54:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.