AppamAppam - Tamil

Feb 19. பெரிய அன்பு!

“இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி. 13:13).

வேதத்தில், அன்புக்கு என பிரத்தியேகமான ஒரு அதிகாரம் உண்டு. அது 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரம். ஆம், உலகத்தின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த வல்லமையான அன்புக்கு கர்த்தர் ஒரு முழு அதிகாரத்தையே ஒதுக்கி வைத்திருப்பதில் ஆச்சரியம் இல்லையே!

விசுவாசத்துக்கு எபிரெயர் 11-ம் அதிகாரமும், வேத வசனங்களின் முக்கியத்துவத்துக்கு 119-ம் சங்கீதமும், எழுப்புதலுக்கு ஏசாயா 64-ம் அதிகாரமும், கல்வாரிக்கென்று ஏசாயா 53-ம் அதிகாரமும், இருக்கிறதுபோலவே அன்புக்கென்று 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரம் முழுவதும் அன்பு என்னும் இனிமையான கனி நிரம்பிக் கிடக்கிறது.

நீங்கள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற பிறகு, இந்த அதிகாரம் உங்களுக்கு ஒரு தங்கச்சுரங்கமாய் இருக்கும். சிலுவையின் அன்பை உணர்ந்து இந்த அதிகாரத்தை வாசிப்பீர்களென்றால், அது உள்ளத்தில் கல்வாரியின் நேச அக்கினியைப் பற்ற வைக்கும்.

பில்லி கிரகாமிடம் ஒரு பத்திரிகை நிருபர் வந்து ‘முழு வேதத்தில் உங்களுக்குப் பிரியமான வேதப் பகுதி எது’ என்று கேட்டார். உடனே அவர் “அன்பைப் பற்றியுள்ள 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரமே எனக்கு மிகவும் பிரியமான வேதப்பகுதி” என்று சொல்லி அதனுடைய காரணத்தையும் விளக்கினார்.

ஒரு முறை கிறிஸ்துவிடம் வேதபாரகன் ஒருவன் வந்து “போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்” (மத். 22:36). எல்லா கற்பனைகளும் முக்கியமானவைதான் என்று இயேசு பொதுவாக பதில் சொல்லவில்லை. “அன்பு கூரு” என்று திட்டமாய்ச் சொன்னார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், அன்பு கூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை” (மத். 22:37,38) என்றார்.

மட்டுமல்ல, அந்த வேதபாரகன் மீண்டும் குறுக்கிட்டு இரண்டாவது பிரதான மானது எது என்று கேட்கும் முன்னதாக, அவராகவே “இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பதே” (மத். 22:39) என்றார். அப்.பவுல் ‘அன்பே பெரியது’ என்றார் (1 கொரி. 13:13). கிறிஸ்து, ‘அன்பே பிரதானமான கற்பனை’ என்றார் (மாற். 12:33). அப்.பேதுரு, “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரி லொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 4:8) என்றார்.

வேதத்தில், “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்ற கட்டளை பதினான்கு முறைகள் வருகிறது. கிறிஸ்து அதையே மிகவும் அதிகமாக வலியுறுத்தினார். இந்த அன்பு என்னும் நற்குணமானது, கிறிஸ்தவர்கள் மத்தியில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாய் காணப்படுகிறோ, அவ்வளவுக்கவ்வளவு ஆத்தும அறுவடையும் அதிகமாய் இருக்கும் என்பதுதான் உண்மை. தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்து கொள்ளுவார்கள் என்றார்” (யோவா. 13:35).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.