AppamAppam - Tamil

Feb 18. பெற்றோரின் கடமை!

“உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாப் பாம்பைக் கொடுப்பானா?” (லூக். 11:11).

பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கிறார்கள். அதிலும் பிள்ளைகள் விருப்பத்தோடு தின்பண்டங்களைக் கேட்கும்போது பெற்றோர் கொடுப்பது நிச்சயம் அல்லவா? பிள்ளைகளுக்கு உணவளிக்கும் கடமை தகப்பனுக்கும் தாக்கும் பிரதானமானது. ஒரு பெண் தனது கணவன் தன்னைவிட்டு பிரிந்துபோய் விட்டதினால், கோபங்கொண்டு தன் பிள்ளைகளுக்கு உணவில் விஷத்தை வைத்து கொன்றுவிட்டாள். உணவளிக்க வேண்டிய அந்த தாயின் கரம் விஷத்தைக் கொடுத்தது.

பல வேளைகளில் நீங்கள் பிள்ளைகளுக்கு நல்லவைகளைக் கொடுக்க நினைத்தாலும், சமுதாயத்தாலும், நண்பர்களாலும் அவர்களுக்கு விஷம் கொடுக்கப் பட்டு விடுகிறது. பாருங்கள்! சிறிய பிள்ளைகள் டி. வி. முன்னால் உட்கார்ந்திருந்து ஆபாச காட்சிகளைக் கொண்ட சினிமாக்களைப் பார்க்கும்போது, அந்த விஷம் அவர்கள் கண்களுக்குள் வருகிறது. கெட்ட நண்பர்கள் விஷம் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்துவிடுகிறார்கள்.

 அநேக பெற்றோர் இதைக் குறித்து அக்கறைப்படுவதேயில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான உணவை ஊட்டாமல் போனால் மற்றவர்கள் விஷமாகிய உணவைக் கொடுத்துவிடக்கூடும். சமுதாயமும், தீய நண்பர்களும், சூழ்நிலைகளும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களுடைய ஆத்துமாவிற்கு தவறான உணவு வகைகளை தந்து விடக்கூடும்.

தேவபிள்ளைகளே, உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுங்கள். வெறும் உணவு கொடுப்பதோடு உங்களுடைய கடமை நின்று விடாது. மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வசனத்தினாலும் பிழைக்கக்கூடியவன். ஆகவே கர்த்தருடைய வசனத்தை பிள்ளைகளுக்குப் போதியுங்கள். கர்த்தருக்குப் பயப்படும் பயத்தைக் கொடுங்கள். தேவ பக்தியைக் கொடுங்கள்.

அவர்களை ஆலயத்திற்குக் அழைத்துகொண்டு செல்லுங்கள். அங்கே பாடப்படுகிற பாடல்கள், பகிரப்படும் சாட்சிகள், பிரசங்கங்கள் எல்லாம் பிள்ளைகளுடைய ஆத்துமாவை பெலப்படுத்துபவையாயிருக்கும். உங்கள் பிள்ளைகளுடைய நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். கெட்ட நண்பர்களோடு பிள்ளைகள் பழகுவதற்கு ஒருபோதும் அனுமதியாதேயுங்கள். நல்ல பழக்கமுள்ள ஜெப நண்பர்களை உண்டாக்கிக் கொடுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் பலவானாய் விளங்குவார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாய் கிறிஸ்துவோடு நடப்பது எப்படி, கிறிஸ்துவை நேசிப்பது எப்படி, கிறிஸ்துவுக்காக சாட்சியாய் ஜீவிப்பது எப்படி, என்பதை எல்லாம் சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுங்கள். அப்பொழுது முதிர் வயதிலும் அவர்கள் கனிதந்து பசுமையாய் இருப்பார்கள். தேவபிள்ளைகளே, உங்கள் பிள்ளைகளின் ஆவி, ஆத்துமா, சரீரத்தைப் போஷிக்க வேண்டியது உங்களுடைய கடமை. பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் அல்லவா?

நினைவிற்கு:- “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை” (3 யோவான் 4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.