AppamAppam - Tamil

Feb 16. புயல் எழுந்தால்!

“அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று” (மாற்கு 4:39).

உலக வாழ்க்கையில், புயலும் மழையும் ஒன்றுசேர்ந்து தாக்கும்படியான பிரச்சனைகள் நிகழும்போது, நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து விளக்கும் வகையில் ஒரு நிகழ்வு வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்த்தர் மீது நாம் வைக்க வேண்டிய உறுதியான விசுவாசத்தைக் குறித்தும் அந்த நிகழ்ச்சி நமக்கு விளக்குகிறது.

ஒரு முறை இயேசுகிறிஸ்து தம் சீஷர்களையும் அழைத்துக் கொண்டு கடலின் அக்கரைக்கு செல்ல முற்பட்டார். அது சாயங்கால நேரமாக இருந்தபடியினாலும், அதுவரையிலும் பிரசங்கித்துக் கொண்டிருந்ததாலும், இயேசுவானவர் களைப்பாய் இருந்ததனால் சற்று நேரம் இளைப்பாறி உறங்க முற்பட்டார்.

சீஷர்கள் அக்கரையை நோக்கிப் படகை செலுத்த முற்பட்டனர். இயேசு நித்திரையிலிருந்து அந்த நேரத்தில் பலத்த சுழல் காற்று வீசத் துவங்கி படகை அலைக் கழித்தது. படகு கடல் நீரால் நிறைந்து மூழ்கிவிடுமோ என்று பயப்படும் படியான சூழ்நிலை நிலவியது. சீஷர்களோ என்ன செய்வதென்று அறியாமல் “போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா?” (மாற் 4:38) என்று கதறினார்கள்.

இயேசு எழுந்திருந்தது எப்படி? வீசுகிற புயல் காற்றின் சத்தத்தால் எழுந்துவிட்டாரா? கொந்தளிக்கிற கடல் அலைகளின் சத்தத்தால் எழுந்து விட்டாரா? பயங்கரமான சூழ்நிலைகள் அவரை எழும்பச் செய்தனவா? இல்லை. சீஷர்களின் வேண்டுதல் சத்தம்தான் அவரை எழும்பச் செய்தது. இன்றைக்கும் நீங்கள் நெருக்கப்பட்டு ஜெபிக்கும்போது, உங்களுடைய ஜெபத்தைக் கேட்டு எழுந்தருள அவர் ஆவலுள்ளவராயிருக்கிறார்.

 தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையில் புயல் வீசுகிறதா? கடல் கொந்தளிக்கிறதா? சமாதானமற்று போய் விட்டீர்களா? நிம்மதியில்லாமல் தடு மாறுகிறீர்களா? இயேசுவுக்கு தெரியப்படுத்துங்கள். புயல் வீசுகிற நேரத்தில் அவர் எழுந்திருக்கும்படி அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். கடலையும் காற்றையும் அதட்ட வல்லமையுள்ளவர் உங்களோடுகூட இருக்கிறார். நீங்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காததினால்தான் அவர் நித்திரைக்கு போய்விட்டவரைப் போல இருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் தூங்குகிறவர் அல்ல. “இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” (சங். 121:4).

இயேசுகிறிஸ்து எழுந்ததும், கடலோடும், காற்றோடும் பேசுவதற்கு முன்பாக, முதலாவது அவர் சீஷர்களுடன்தான் பேசினார். ‘அற்ப விசுவாசிகளே, ஏன் பயப்படுகிறீர்கள்’ என்றார் (மத். 8:26). அவர்களுக்கு விசுவாசம் இருந்திருக்குமென்றால் அவர்களே அந்த கடலையும் காற்றையும் அதட்டியிருப்பார்கள்.

காற்றையும் கடலையும் அமைதலாயிருக்கும்படி இயேசு கட்டளையிட்டவுடன் மிகுந்த அமைதல் உண்டாயிற்று. தேவபிள்ளைகளே, ஜெபியுங்கள், உங்களுடைய வீட்டிலும் கர்த்தர் மிகுந்த சமாதானத்தைக் கட்டளையிடுவார்.

நினைவிற்கு:- “ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்” (சங். 44:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.