AppamAppam - Tamil

Feb 11 – பிரதான ஆசாரியன்!

“பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி.4:15).

இயேசு நம்முடைய பிரதான ஆசாரியன். பிதாவின் வலது பாரிசத்திலிருந்து நம்மை ஆசீர்வதிக்கிற பிரதான ஆசாரியன். உலகப்பிரகாரமான பிரதான ஆசாரியன் வருஷத்திற்கு ஒரு முறை அவனுக்குரிய அங்கியைத் தரித்துக்கொண்டு மிகுதியான பலிகளை செலுத்தி, பயபக்தியோடுகூட மகா பரிசுத்த ஸ்தலத்தில் தேவனுடைய பிரசன்னத்தில் பிரவேசிப்பான்.

அங்கு ஆசாரிய பணிவிடை செய்து, தூபவர்க்கமி12ட்டு, பிதாவின் சமுகத்திலே தனிமையாய் தன்னுடைய ஜனங்களுக்காக மன்றாடிக் கொண்டிருப்பான். அப்படி அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் அவன் பணிவிடை செய்யும்போது, பிரதான ஆசாரியனுடைய அங்கிகளில் உள்ள பொன்மணியானது சத்தத்தை ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

 பிரதான ஆசாரியன் உள்ளே பிரவேசித்திருக்கும்போது, வெளியில் திரளான ஜனங்கள் ‘பிரதான ஆசாரியன் எப்பொழுது வெளியே வருவார், தேவசமுகத்தின் ஆசீர்வாதங்களால் எப்பொழுது தங்களை ஆசீர்வதிப்பார்’ என்று ஆவலோடு காத்திருப்பார்கள். மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஒலிக்கும் அந்த பொன்மணியின் சத்தமானது, தங்கள் பிரதான ஆசாரியன் தங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார், உயிரோடிருக்கிறார் என்பதை அறிவித்துக் கொண்டேயிருக்கும்.

ஒருவேளை பிரதான ஆசாரியன் அந்த நாளில் பாவத்தோடும், அசுத்தத்தோடும் உட்பிரவேசித்திருப்பாரென்றால், மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள தேவனுடைய ஷெக்கினா மகிமையைச் சந்திக்க முடியாமல் அவர் கீழே விழுந்து மரிக்க வேண்டியதாயிருக்கும். அவர் மரித்துப் போய்விட்டால் அந்த பொன்மணியின் சத்தம் வெளியே கேட்காது.

அப்போது வெளியில் உள்ள ஜனங்களெல்லாம் பிரதான ஆசாரியனின் காலில் கட்டியிருக்கிற சங்கிலியின் மறுமுனையைப் பிடித்து இழுப்பார்கள். செத்த பிரதான ஆசாரியனின் சரீரம்தான் வெளியில் வரும். மணியின் ஓசை கேட்கிற வரையிலும் ஜனங்களுக்கு சந்தோஷம்! பிரதான ஆசாரியன் உயிரோடிருக்கிறார் என்கிற மகிழ்ச்சி! எப்பொழுது பிரதான ஆசாரியன் வெளியே வருவார் என்கிற எதிர்பார்ப்பு! தங்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி அவர்களை நிரப்பும்.

 உங்களுடைய பிரதான ஆசாரியன் இயேசு. அவர் மகா பரிசுத்த ஸ்தலமாகிய பிதாவினுடைய வலது பாரிசத்திலே உங்களுக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். வேதம் சொல்லுகிறது: “மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி. 7:25).

இன்றைக்கும் அந்த மணியின் சத்தம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த மணிதான் ஆவியின் வரங்களின் சத்தம், எழுப்புதலின் சத்தம், தேவன் உங்களுக்கு அனுப்பிக் கொடுத்திருக்கிற பரிசுத்த ஆவியானவரின் சத்தம். தேவபிள்ளைகளே, பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து, உங்களுக்காக பரிந்து பேசும் சத்தத்தை, உங்களுடைய இருதயம் உணரும்.

நினைவிற்கு:- “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” (யோபு 19:25).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.