AppamAppam - Tamil

Feb 10 – பிற்பாடு!

“பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்” (எபி. 12:17).

  இழந்த வாய்ப்புகள் துயரத்தைத் தரும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவ விட்டவர்கள் ஆறா துயரத்தில் அமிழ்ந்திருக்கிறார்கள். அப்படி சந்தர்ப்பத்தை நழுவவிட்டவன்தான் ஏசா. கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் மேன்மையை அறியாமல், சேஷ்டபுத்திர பாகத்தை அற்பமாக எண்ணி, வெறும் கூழுக்காக அதை விற்றுப் போட்டுவிட்டு, பிற்பாடு கண்ணீரோடு தேடி அலைந்தவன்தான் ஏசா. முற்பிதாக்களின் பட்டியலிலே அவனுடைய பெயர் பொறிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், அவன் தேவ ஆசீர்வாதங்களை அசட்டை பண்ணினதின் நிமித்தம் மேன்மையை எல்லாம் இழந்துபோனான். பின் அவன் கவலையோடு தேடியும் மனம் மாறுதலைக் காணவில்லை என்று வேதம் சொல்லுகிறது.

காற்று அடைத்த பலூனை நழுவ விட்டுவிட்டு தவிக்கும் சிறுவனைப் போல, வாய்ப்பை நழுவ விட்டவர்கள் தவிக்கிறார்கள். அவ்வாய்ப்புகள் ஆண்டாண்டு காலம் அழுதாலும் மீண்டும் கிடைக்காது. ஒவ்வொரு வினாடி நேரமும், கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற அருமையான சந்தர்ப்பம். அதை நீங்கள் நித்தியத்திற்காக பயன்படுத்தவும் முடியும். வீணாக்கவும் முடியும். கடைசி நியாயத்தீர்ப்பின் நாளிலே தவறவிட்ட சந்தர்ப்பங்களுக்காக கணக்கு ஒப்புவிக்க வேண்டியது வரும். ஆகவேதான் “…காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” (எபேசி. 5:16) என்று வேதம் சொல்லுகிறது.

ஏசாவைப் பார்க்கிலும், இழந்துபோன சந்தர்ப்பத்திற்காக மிக அதிகமாய் வேதனைப்பட்ட இன்னொரு நபர் நரகத்தில் தத்தளித்த ஐசுவரியவான். ஆபிரகாமைப் பார்த்து, “தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும்; இந்த அக்கினிஜூவாலையில் வேதனைப்படுகிறேனே” (லூக்.16:24) என்று கதறினான். வேதம் சொல்லுகிறது, “அதோ, அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டு போனார்கள்” (சங்.36:12).

ஒரு முறை ஒரு சகோதரி, சாலையோரமாய் ஒரு குஷ்டரோகி உட்கார்ந்திருக் கிறதைக் கண்டார். ஆவியானவர் அவர்கள் உள்ளத்தில், “மகளே, இந்த குஷ்டரோகிக்கு சுவிசேஷம் அறிவி” என்று பேசினார். ஆனால் அந்த சகோதரியோ அந்த அழைப்பை அசட்டை செய்து போய்விட்டார். அன்று இரவில் அவரால் சரியாக தூங்க முடியவில்லை. காலையிலே எழுந்து அந்த குஷ்டரோகியை பார்க்க வந்தார். அந்தோ! அந்த குஷ்டரோகியோ மரித்துக் கிடந்தான்.

அதைப் பார்த்ததும் அந்த சகோதரியின் உள்ளம் உடைந்தது. “ஆண்டவரே, நீர் அவனிடம் பேசச் சொன்னபோது பேசியிருந்தால் நித்திய ஜீவனுக்குள் வழிநடத்தி இருந்திருக்கலாமே. அவனுடைய ஆத்துமா எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே? கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேனே” என்று புலம்பி அழுதார். தேவபிள்ளைகளே, வாய்ப்புகளை நழுவ விட்டுவிடாதேயுங்கள்.

நினைவிற்கு:- “தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” (யாக். 5:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.