AppamAppam - Tamil

Feb 8 – பாடுபட அழைத்திருக்கிறார்!

“நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” (1 பேதுரு. 2:20,21).

உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் எதற்காக உங்களை அழைத்தார்? முதலாவதாக பரிசுத்தத்திற்காகவும், இரண்டாவதாக சமாதானத்திற்காகவும், மூன்றாவதாக நித்திய மகிமைக்காகவும் அழைத்தார். மட்டுமல்ல, கர்த்தருடைய நாமத்தினிமித்தம் நீங்கள் பாடுகளைச் சகிக்கும்படியாக அழைத்தார். ஏனென்றால், கிறிஸ்துவும் பாடுபட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றும்படி உங்களுக்கு மாதிரியை பின் வைத்துப் போயிருக்கிறாரே.

கிறிஸ்துவுக்காக பாடு அனுபவிப்பது ஆனந்த பாக்கியமானது. எவ்வளவு வேதனைகளை உங்களுக்காக அவர் அனுபவித்தார்! முள்முடி சூட்டப்பட்டபோதும், கைகளிலும், கால்களிலும் ஆணிகள் கடாவப்பட்ட போதும், வேதனையினால் அவர் எவ்வளவு துடி துடித்திருந்திருப்பார்! உங்கள் மேல் வைத்த அன்பினால் அல்லவா அவர் அத்தனை பாடுகளையும் பொறுமையோடு சகித்தார்!

அன்றைக்கு பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் தள்ளப்பட்டபோது, தாங்கள் பாடுகளை சகிக்கவே அழைக்கப்பட்டதை உணர்ந்தார்கள். கர்த்தருக்காக பாடுகளைச் சகிப்பது என்பது அவர்களுக்கு ஆனந்த பாக்கியமாக இருந்தது. ஆகவே சரீரத்தின் வேதனையை பொருட்படுத்தாமல் இரவில் கர்த்தரைப் பாடித் துதித்து அவருக்கு ஆராதனை செய்தார்கள். பாடுகளின் மத்தியிலும் பாடல்களைப் பாடுவதின் ரகசியம் என்ன? தாங்கள் பாடுபட அழைக்கப்பட்டவர்கள் என்ற உணர்வுதான்.

அப்.பவுல் எழுதுகிறார்: “நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும், இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் செய்கிறது. நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடுகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக் குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 1:6,7).

ஒவ்வொரு சீஷருடைய மற்றும் அப்போஸ்தலருடைய வாழ்க்கையின் முடிவை கவனித்துப் பாருங்கள். பெரும்பாலானோர் கர்த்தருக்காக பாடு சகித்து சாட்சியாக தங்களுடைய ஜீவனைக் கொடுத்திருக்கிறார்கள். பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார். மாற்கு சுவிசேஷத்தை எழுதினவரை, இரதத்தின் பின்னால் கட்டி ரோமாபுரியிலே இழுத்துச்சென்று சாகடித்தனர். மத்தேயு, எத்தியோப்பியாவிலே இரத்த சாட்சியாக மரித்தார்.

தோமா அப்போஸ்தலன், இந்தியாவிலே இரத்தசாட்சியாக மரித்தார். அப். பேதுரு ரோமாபுரியில் சிரைச்சேதம் பண்ணப்பட்டார். அப். யோவானை பலமுறை கொதிக்கும் எண்ணெயில் தூக்கிப் போட்டார்கள். என்றாலும் அவர்கள் கிறிஸ்துவினுடைய அன்பை விட்டு விலகவில்லை. காரணம், அவர்களுடைய அழைப்பை அவர்கள் அறிந்திருந்தார்கள். தேவபிள்ளைகளே, பாடுகளின் நேரத்தில் மனம் சோர்ந்து போகாதேயுங்கள். கர்த்தர் உங்களுக்கு கிருபை தந்து உங்களைத் தாங்கி வழிநடத்துவார்.

நினைவிற்கு:- “அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்” (அப். 9:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.