No products in the cart.
Feb 7 – பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க நாடுங்கள்!
“பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபி. 12:14).
உங்கள் வாழ்க்கையின் நோக்கமே கர்த்தரைத் தரிசிக்கவேண்டுமென்பதுதான். இந்த உலக வாழ்க்கை முடிந்து நித்திய ராஜ்யத்திற்குள் போகும்போது, உங்கள் முதல் ஏக்கம் இயேசு கிறிஸ்துவைக் கண்குளிர தரிசிக்க வேண்டுமென்பதாக இருக்கட்டும். வேதம் சொல்லுகிறது, “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபி. 12:14). “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத். 5:8).
பரிசுத்தம் இருந்தால்தான் இயேசுவைக் காணமுடியும், அவரைக் குறித்த வெளிப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். பரிசுத்ததமில்லாமல் அவரை அறியவே முடியாது. அநேகர் இயேசுவைக் காணவேண்டுமென்று விரும்புகிறார்கள். அவருடைய மெல்லிய குரலைக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். உங்களுடைய உள்ளம் தேவன் தங்குகிற ஆலமாயிருந்தால்தான் ஆலயத்தில் அவருடைய மகிமையின் பிரசன்னத்தைத் தரிசிக்க முடியும்.
இயேசு இந்த உலகத்திலிருந்தபோது, ஆலயத்திற்கு வந்தார். அங்கே பரிசுத்தத்தை அவரால் காணமுடியவில்லை. புறாக்களையும் அடைக்கலான் குருவிகளையும் விற்று பணம் சம்பாதிக்கிறவர்களைக் கண்டார். அவருக்கு கோபம் வந்து விட்டது. “என்னுடைய வீடு ஜெப வீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” (மத் 21:13) என்று சொல்லி சவுக்கை எடுத்து விரட்டி அடித்தார்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய இருதயமானது பரிசுத்த ஆலயமாய் இருக்கிறதா அல்லது கள்ளர் குகையாய் இருக்கிறதா? அங்கே கர்த்தரைக் காண்கிறீர்களா அல்லது விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் காண்கிறீர்களா? கள்ளர் குகையையும் பரிசுத்தமானதாய் மாற்ற வல்லமையுள்ளவர் உங்கள் அருகே நிற்கிறார். நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருந்தால் தேவதூதர்கள் உங்களில் இறங்கி உலாவுவார்கள். தேவ மகிமை உங்களில் நிரம்பியிருக்கும்.
சாது சுந்தர்சிங் தனது புத்தகத்திலே ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை எழுதியிருந்தார். ஒரு மனிதன் அசுத்தமான பாவம் ஒன்று செய்ய தீவிரித்து சென்றபோது, தேவதூதர்கள் அவனைத் தடுக்க முயற்சித்தார்கள். ‘நீ விசுவாசியாயிருந்து பாவத்தில் விழுந்துவிடாதே. உன் உள்ளத்தை கள்ளர் குகையாக்கி விடாதே’ என்று சொல்லி கெஞ்சினார்கள். ஆனால் அவனோ, அதை சட்டை செய்தவனாய் அசுத்தமான பாவத்தைச் செய்ய அந்த வீட்டுக்குள் தீவிரித்தான்.
அவன் பாவம் செய்ய இறங்கியபோது, கள்ளர் குகைக்குள் இருக்கும் அருவருப்பான வாடை அவனுக்குள்ளிலிருந்து வீசியது. தேவதூதர்கள் அந்த துர்நாற்றத்தை தாங்க முடியாமல் அவனைவிட்டு விலகினார்கள். பரிசுத்தமுள்ள தேவனின் பிரசன்னம் அவனைவிட்டு விலகியது. மட்டுமல்ல, அந்த துர்வாடையைக் கண்டு ஆயிரக்கணக்கான அசுத்த ஆவிகள் அவனை நோக்கி ஓடிவந்து அவனை பற்றிக் கொண்டன. தேவபிள்ளைகளே, நீங்கள் பரிசுத்தமுள்ளவராயிருந்தால் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம்பண்ணுவார். தேவதூதர்கள் உங்கள் வீட்டில் இறங்கி உங்களுடனே வாசம் பண்ணுவார்கள்.
நினைவிற்கு :- “நீங்கள் தேவனுடைய ஆலமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி 3:16).