AppamAppam - Tamil

Feb 06 – பரிசுத்தத்தை பூரணப்படுத்துதல்!

“பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2 கொரி. 7:1).

  கர்த்தர் தம்முடைய ஜனங்களிடத்திலிருந்து எதிர்பார்க்கிற ஒரு முக்கியமான காரியம் பரிசுத்தம்தான். கர்த்தர் பரிசுத்தமுள்ள தேவனாய் இருக்கிறபடியினால் தம்முடைய பிள்ளைகளும் பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டுமென்று விரும்புகிறார். பரிசுத்தர்களின் சுதந்திரத்தை அடைவதற்கும், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கும் பரிசுத்தம் மிகவும் அவசியம்.

 அப். பவுல், “பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணமாக்கக்கடவோம்” என்று சொல்லுகிறார். பரிசுத்தமாகுதலில் ஒரு பூரணம் உண்டு. அந்த பூரணத்தை நோக்கி நீங்கள் கடந்து செல்லுகிறீர்கள். ஏனென்றால் காலங்கள் வேகமாய் சுழன்று, உலகத்தின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள். கர்த்தருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடு பூரணப்படுத்த வேண்டும்.

ஒரு வீட்டிற்குள் மிதந்துகொண்டிருக்கும் தூசிகளை சாதாரணமாக உங்களுடைய கண்களினால் காண முடிவதில்லை. ஆனால் சூரிய வெளிச்சத்தின் கதிர், கூரை துவாரத்தின் வழியாக உள்ளே வரும்போது, அந்த வெளிச்சத்தில் ஆயிரமாயிரம் தூசி துகள்கள் காற்றில் மிதப்பதைக் காணலாம். அப்படியே தேவ சமுகத்தில் ஆவியானவரின் வெளிச்சத்தில் உங்களைக் காணும்போது, மாம்சத்திலும் ஆவியிலும் உள்ள அசுத்தங்களைக் கண்டுபிடிக்க முடியும். ஜெபத்துடன் நீக்கிப் போடவும் முடியும்.

 தேவபிள்ளைகளே, அசுத்தம் நிறைந்த இந்த உலகத்தில்தான் நீங்கள் வாழுகிறீர்கள். அசுத்தமான சிந்தனைகள், அசுத்தமான செயல்கள் ஆத்துமாவைக் கறைப்படுத்துகின்றன. அசுத்தமான சினிமாக்களும், அசுத்தமான வீடியோக்களும் மனிதனை துரிதமாக பாதாளத்தை நோக்கி இழுத்துச் செல்லுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருடைய பிள்ளைகள் செய்ய வேண்டியது என்ன? தேவ சமுகத்தில் ஒவ்வொரு நாளும் அமர்ந்து உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் ஆவியில் வந்த அசுசிகள் என்ன? பெருமையா? அகங்கார ஆணவங்களா? கண்ணீரோடு அவைகளை அறிக்கைச் செய்து புது பிரதிஷ்டையோடு, புது தீர்மானங்களோடு முன்னேறிச் செல்லுங்கள். பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடு பூரணப்படுத்துங்கள்.

வேதம் சொல்லுகிறது: “நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” (1 கொரி. 11:31). மனம் திரும்புதலையும், இரட்சிப்பையும் குறித்து ஏராளமான பிரசங்கங்களை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆழமான சத்தியங்களையும், வெளிப்பாடுகளையும் அறிந்திருக்கலாம். ஆனால் பரிசுத்தத்தைப் பற்றி போதுமான அளவு நீங்கள் அறியவில்லை. தேவன் எதிர்பார்க்கிற பரிசுத்தத்தில் முன்னேறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளவில்லை. இன்றைக்கு நீங்கள் உங்களைத் தாழ்த்தி பரிசுத்தத்தில் பூரணப்பட ஒப்புக் கொடுப்பீர்களாக.

நினைவிற்கு:- “நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்” (யாத். 19:10,11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.