AppamAppam - Tamil

Feb 05 – பரிசுத்தமான விசுவாசம்!

 “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு… நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்” (யூதா 1:20,21).

ஒரு முறை வில்லியம் பூத் என்ற தேவனுடைய ஊழியக்காரர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தின் மத்தியிலே ஒருவர் எழுந்து நின்று சத்தமாய், “நிறுத்து உன் பிரசங்கத்தை. என் வாழ்க்கையிலே வீசுகிற புயல் உன் வாழ்க்கையிலே வீசி நிர்ப்பந்தமான நிலைமை உனக்கு ஏற்பட்டிருந்தால் நீ இப்படி பிரசங்கிக்கமாட்டாய். இளம் வயதில் என் மனைவியை ஏன் இயேசு கிறிஸ்து எடுத்துக்கொண்டார்? என் ஐந்து பிள்ளைகளும் அனாதைகள் போல் கதறுகிறார்களே. இப்படி ஒரு சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால் நீர் பிரசங்கிப்பீரா?” என்று கேட்டார்.

அந்தக் கேள்வி ஊழியரான வில்லியம் பூத்தின் உள்ளத்தை உடைத்தது. எனினும் அவர் அந்த சகோதரனைப் பார்த்து அமைதியாக, “எந்த சூழ்நிலையிலும் என் இயேசுவை பிரசங்கிப்பேன்” என்று கூறினார். கேள்வி கேட்ட அந்த சகோதரனுக்காக கண்ணீரோடு ஜெபித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு கார் விபத்தில் ஊழியரான வில்லியம் பூத்தின் மனைவி மரித்துப் போனாள். தன் அன்பான மனைவியின் பிரிவு அவருடைய உள்ளத்தை உடைத்தது. ஊழியத்தில் அவருடைய மனைவி அதுவரை உறுதுணையாக நின்று ஊழியத்தைத் தாங்கினவர். ஜெபித்து உழைத்தவர். ஊழியம் வளர்ந்து வருகிற நேரத்தில் மரித்து விட்டாரே என்று வில்லியம் பூத் கதறினார்.

எனினும் கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து தன்னைத் தேற்றி, அவருடைய மனைவியின் அடக்க ஆராதனையிலே எழுந்து நின்று, ‘கார் விபத்திலே என் மனைவி மரித்துப் போனாள். என் ஆண்டவர் விடுவிக்க வல்லமையுள்ளவர்தான். அவர் விடுவிக்காமல் போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன். “கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்; அவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்” ஒருவேளை இப்படி விடுவிக்க முடியாமல் போன சூழ்நிலையில் யாராவது இருந்தால் என்னோடு சேர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்’ என்று கூறினார்.

உடனே கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒருவர் ஓடி வந்தார். சில நாட்களுக்கு முன்பு குறுக்கு கேள்வி கேட்டவர் அவர்தான். அவர் ஊழியரான வில்லியம் பூத்தைக் கட்டி அணைத்து, தழுவிக்கொண்டு அவரோடு இணைந்து கர்த்தருக்குத் துதிகளை ஏறெடுத்தார். அன்று அந்த சகோதரன் இரட்சிக்கப்பட்டார். “கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவை எல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:36,37).

தேவபிள்ளைகளே, ஜெபத்திற்கு உடனே பதில் வரவில்லையா? சோர்ந்து போகாமல் விசுவாசத்தோடு ஜெபம்பண்ணி காத்திருங்கள். கண்டிப்பாக பதில் தருவார்.

நினைவிற்கு:- “உயர்வானாலும், தாழ்வானாலும் வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:39).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.