AppamAppam - Tamil

Jan 31 – சோர்ந்து போகிறதில்லை!

“ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை” (2 கொரி. 4:16).

தேவ ஜனங்கள் மேல் சாத்தான் உபயோகிக்கிற கொடிய ஆயுதங்களில் சோர்வும் ஒன்றாகும். அவன் போராட்டத்தின் மேல் போராட்டத்தைக் கொண்டு வந்து மனிதனைச் சோர்ந்து போகப் பண்ணுகிறான். வல்லமையான எலியா தீர்க்கதரிசிக்கும்கூட இந்த சோர்வை அவன் கொண்டு வந்தான். “போதும் கர்த்தாவே என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்” என்று எலியா ஜெபித்தார் அல்லவா!

 பராக்கிரமத்திற்கு பேர் போன ஜுலியஸ் சீசர் என்ற ரோம அரசனைக் கொலை செய்ய வஞ்சகர்கள் சதி செய்தார்கள். எதிரிகள் தாக்கும்போது ஜுலியஸ் சீசர் போராடினார். அதே நேரம், அவருடைய ஆத்தும சிநேகிதனாகிய புரூட்டஸ் அங்கே வந்தான். அவன் தனக்கு உதவி செய்வான் என்று ஆவலோடு எதிர்பார்த்தபோது, அவனோ தான் கொண்டு வந்திருந்த கத்தியினால் ஜுலியஸ் சீசரைக் குத்த ஓங்கினான். அந்தோ பரிதாபம்! “புரூட்டஸ் நீயுமா என்னைக் குத்த வந்திருக்கிறா?” என்று கேட்டு மன முறிவோடு அவர் மரித்தார்.

உங்களுடைய வாழ்க்கையில் இப்படித்தான் சோர்ந்துபோகக்கூடிய பல போராட்டங்கள் வரக்கூடும். கொடிய நோய் தாக்கி பல நாட்கள் படுக்கையில் இருக்கும்போது சோர்ந்து போகிறீர்கள். உங்களுக்கு அன்பானவர்களிடத்திலிருந்து கடிதங்கள் வரவில்லையென்றால் சோர்ந்து போகிறீர்கள். நீண்ட காலக் கடன் பிரச்சனையினால் மனம் சோர்ந்து போகிறீர்கள். இப்படி சோர்வடைந்து விட்டால் உங்களால் கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்யவோ, ஊக்கமாய் ஜெபிக்கவோ, வல்லமையாக ஊழியம் செய்யவோ முடியாது. வேதம் சொல்லுகிறது, “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” (நீதி. 24:10).

நம் தேவன் சோர்வடையாத, இளைப்படையாத தேவன். அந்த சோர்வடையாத தேவன், நீங்கள் சோர்வுறும் வேளைகளிலெல்லாம் உங்களைத் தூக்கியெடுக்கிறவராக இருக்கிறார். வேதம் சொல்லுகிறது: “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை” (ஏசா. 40:28). “சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்” (ஏசா. 40:29).

நீங்கள் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள் (லூக். 18:1). சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்யுங்கள் (ரோம. 2:7). சோர்ந்து போகாமல் ஊழியத்தை தொடருங்கள் (2 கொரி. 4:1). அப். பவுல், “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரி. 4:16) என்று எழுதுகிறார்.

இதுதான் சோர்வை மேற்கொள்ளும் இரகசியம். உள்ளான மனுஷனிலே பெலன் கொள்ள, பெலன் கொள்ள, சரீரத்தில் சோர்வுகள் எல்லாம் மாறிப்போய் விடுகின்றன. தேவபிள்ளைகளே, சோர்வு நேரங்களில் இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். சோர்வில் பெலன் தருகிற அவரை உறுதியாய்ப் பற்றிக் கொள்ளுங்கள். அப்போது சோர்வு உங்களை மேற்கொள்ளுவதில்லை.

நினைவிற்கு:- “ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய், உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்” (எபி. 12:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.