AppamAppam - Tamil

Jan 22 – சிநேகிதம்!

“சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்” (நீதி.22:11).

ஞானமுடையவன், இந்த உலகத்திலே தனக்கு உத்தமமான சிநேகிதரை சம்பாதித்துக் கொள்ளுகிறான். உலகத்தில் வெற்றியுள்ள வாழ்க்கை வாழுவதற்கு நட்பு உங்களுக்கு மிகவும் அவசியம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பத்திரிக்கை ஒன்றில், “நட்பு என்ற வார்த்தைக்கு யார் சரியான விளக்கம் அளிக்கிறார்களோ அவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கப்படும்” என்று அறிவிப்பு வெளி வந்தது. வந்த ஆயிரக்கணக்கான விளக்கங்களுக்குள்ளே ஒரு விளக்கத்தை தெரிந்தெடுத்து பரிசு கொடுத்தார்கள். பரிசு பெற்ற விளக்கம் என்ன தெரியுமா? “உலகம் கைவிட்ட நிலையில் தனது நண்பனிடத்தில் மனமிரங்கி அவனைத் தூக்கி விடுபவனே உண்மையான நண்பன்!”

 இயேசுவைப் பார்த்து நட்பு அல்லது சிநேகிதத்திற்கு சிறந்த விளக்கம் தாரும் ஐயா என்று கேட்டால் அவர் என்ன சொல்லுவார் தெரியுமா? “ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்றே சொல்லுவார் என்று வேதம் சொல்லுகிறது. “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவான் 3:16).

நட்புறவை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், இயேசு கிறிஸ்து வினிடத்தில்தான் கற்றுக்கொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டிலே கர்த்தர் ஆபிரகாமோடு சிநேகிதனாய் இருந்தார் என்று வேதத்தில் வாசிக்கலாம். ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டார். ஏனோக்கோடு உலாவி சஞ்சரித்தார். மோசேயோடு முகமுகமாய் பேசினார். தானியேலை பிரியமானவன் என்று அழைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பூமியிலே இறங்கி வந்து, பன்னிரண்டு சீஷர்களை தெரிந்தெடுத்து அவர்களுடைய சிநேகிதனானார்.

இயேசு தன்னுடைய சிநேகிதத்தை எப்படி வெளிப்படுத்தினார்? அவர் பெரிய மகிமையின் ராஜாவாய் இருந்தபோதிலும் சீஷர்களோடு உண்டு, உறங்கி தங்கியிருந்தார். தன்னுடைய பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார். சீஷர்களைக் குற்றம் கண்டுபிடிக்க சதுசேயர் பரிசேயர் எல்லாம் வந்தபோது, அவர் விட்டு கொடுக்கவில்லை. சீஷர்களுக்காக பரிந்து பேசினார். முடிவாக நட்புக்கு இலக்கணமாக தன்னுடைய ஜீவனையே அர்ப்பணித்தார்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய வீட்டை ஞானமாகக் கட்ட வேண்டுமா? இயேசுவாகிய தூணை அங்கே நிறுத்துங்கள். இயேசு உங்களுடைய சிநேகிதராய் இருக்கிறதுபோல நீங்களும் மற்றவர்களுக்கு சிநேகிதராயிருங்கள். இயேசு உங்களில் அன்பு பாராட்டுவதைப் போலவே மற்றவர்களிடம் அன்பை பாராட்டுங்கள். உங்களுடைய வீட்டிலே அந்த சிநேகிதத்தை நீங்கள் ஆரம்பியுங்கள். தொடர்ந்து, எல்லா இடங்களிலும் சிநேகிதத்தை வெளிப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” (நீதி.17:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.