AppamAppam - Tamil

Jan 21 – சிறுமைப்பட்டவன்மேல்!

“சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்” (சங். 41:1,2).

பாக்கியவான்கள் யார் என்பதைப் பற்றி அதிகமாக மலை பிரசங்கத்திலும், பழைய ஏற்பாட்டில் தாவீதின் சங்கீதத்திலும் எழுதியிருக்கிறதைக் காணலாம். வேதத்தில் ஏறக்குறைய 120 பாக்கியவான்களையும், பாக்கியவதிகளையும் குறித்து வாசிக்கலாம். 41-ம் சங்கீதத்தில் சிறுமைப்பட்டவர்கள்மேல் சிந்தையுள்ள பாக்கியவானைக் குறித்து தாவீது ராஜா எழுதுகிறார்.

தாவீது ராஜாவின் வாழ்க்கையில் இரண்டு பகுதிகள் இருந்தன. ஒரு பகுதி சிறுமைப்பட்டு ஒடுங்கிப்போய் மலைகளிலும், குன்றுகளிலும் வாழ்ந்து உயிருக்காக போராடின பகுதி. அடுத்த பகுதி, அவர் ராஜாவான போது சிறுமைப்பட்ட மக்களுக்கு உதவி செய்து அவர்களை தேற்றி, அரவனைத்து, ஆதரித்த பகுதி.

  இன்றைக்கு எல்லா இடங்களிலும் சிறுமைப்பட்டவர்களைப் பார்க்கலாம். அநேகர் அவர்களைப் பார்த்தும் பாராத விதமாய் போய் விடுகிறார்கள். அவர்களைத் தூக்கிவிடவோ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ அவர்களுடைய சிந்தையில் இரக்கமில்லை. ஆனால் சிறுமைப்பட்டவர்கள்மேல் சிந்தையுள்ளவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது என்பதை இந்த வேத பகுதி தெளிவாய் சொல்லுகிறது.

 முதலாவதாக, சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவானாயிருப்பான். பாக்கியவான் என்ற வார்த்தைக்கு “பேறு பெற்றவன்” அல்லது “கொடுத்து வைத்தவன்” என்பது அர்த்தமாகும். மற்றவர்களைப் பார்க்கிலும் அவனுடைய வாழ்க்கை மேன்மையுள்ளதாகவும், ஆசீர்வாதமுள்ளதாகவும், தெய்வீக பிரசன்னம் நிறைந்ததாகவும் இருக்கும். தேவபிள்ளைகளே, சிறுமைப்பட்டவன் மேல் சிந்தை வைத்து அந்த பாக்கியத்தை பெற்றுக் கொள்ளுவீர்களா?

இரண்டாவதாக, தீங்கு நாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார் என்று வேதம் சொல்லுகிறது. எதிர்பாராத மழையினால், புயலினால், சேதங்களினால், பூமியதிர்ச்சியினால் அநேகர் அழிந்து போகும்போது, கர்த்தரோ சிறுமைப்பட்டவர்கள் மேல் சிந்தையுள்ளவர்களை அத்தகைய சேதங்களிலிருந்து விடுவிப்பேன் என்று வாக்களிக்கிறார்.

 மூன்றாவதாக, அப்படிப்பட்டவர்களை கர்த்தர் பாதுகாத்து உயிரோடே வைப்பார். கரடிகளின் கூரிய பல்லுக்கும், கெர்சிக்கிற சிங்கத்திற்கும், பயங்கரமான கோலியாத்துக்கும் தாவீதை விடுவித்து உயிரோடே காத்ததுபோல, அவர்களையும் பாதுகாப்பார்.

 நான்காவதாக, சத்துருக்களின் இஷ்டத்திற்கு சிறுமைப்பட்டவன்மேல் சிந்தனை உள்ளவனை ஒப்புக்கொடுக்கமாட்டார். அவர்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்படி செய்வார். தேவ பிள்ளைகளே, சிறுமைப்பட்டவர்கள் மேல் சிந்தையுள்ளவர்களாயிருங்கள்.

நினைவிற்கு:- “படுக்கையின் மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப் போடுவீர்” (சங். 41:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.