AppamAppam - Tamil

Jan 19 – சிங்கங்களின் வாய்களை!

“விசுவாசத்தினாலே… சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்” (எபி. 11:33).

விசுவாசத்திற்கு, மிருக ஜீவன்களை வெல்லக்கூடிய சக்திக்கூட இருக்கிறது. கெர்ச்சிக்கிற சிங்கங்களின் கோப வெறியையும், கொடூர தன்மைகளையும்கூட விசுவாசம் மேற்கொள்ளுகிறது. அவைகள் சேதப்படுத்தாதபடி அவைகளின் வாய்களை விசுவாசமானது கட்டிப்போட்டு விடுகிறது.

 ஆப்பிரிக்கா கண்டத்தில் பணியாற்றிய ஒரு தேவனுடைய ஊழியக்காரர், ஆப்பிரிக்க காடுகளின் வழியாக கடந்து சென்றபோது, திடீரென்று தூரத்தில் கெர்ச்சிக்கிற சிங்கம் ஒன்று வருவதைக் கண்டார். அதைப் பார்த்ததும் அவருக்குள் இனிமையான விசுவாசம் சுரக்க ஆரம்பித்தது.

தூரத்தில் வரும் சிங்கத்தைப் பார்த்து அவர் மிகவும் மென்மையாக, அமைதியாக “சிங்கமே, உன்னை சிருஷ்டித்தவரும், என்னை சிருஷ்டித்தவரும் ஒருவர்தான். நம் இருவரையும் வழி நடத்துகிறவரும் அவர்தான். நாம் பரலோக பிதாவின் இனிமையான குடும்பத்தில் இருக்கிறோம். ஆகவே, நீ என்னை சேதப்படுத்தாதே” என்று சொல்லிவிட்டு ஆண்டவரைப் பார்த்து, “தானியேலின் தேவனே, தானியேல் சிங்கக் கெபியில் போடப்பட்டபோது பாதுகாத்தவரே, என்னையும் பாதுகாத்தருளும்” என்று ஜெபித்தார். அருகில் வந்த அந்த சிங்கம் எந்த சேதமும் செய்யாமல் அமைதியாய்ப் போய் விட்டது.

தானியேல் தீர்க்கதரிசியின் வாழ்க்கை வரலாற்றை கர்த்தர் நமக்காகவே வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார். அவருக்குள்ளிருந்த மேன்மையான விசுவாசம் என்ன? சிங்கங்கள் என்னை சேதப்படுத்தாது என்பதுதான். “கர்த்தருக்கு முன்பாக நான் உத்தமனாயிருந்திருக்கிறேன். ராஜாவுக்கு முன்பாகவும், நான் நீதி கேடு செய்ததில்லை. ஆகவே, என் தேவன் ஒருபோதும் என்னை சிங்கங்களுக்கு ஒப்புக்கொடுக்கவேமாட்டார்.

யூதாவின் ராஜ சிங்கம் என்னோடிருப்பதால் உலக சிங்கங்களின் வாய்களை கர்த்தரின் நாமத்தால் நான் அடைக்கிறேன். அவை என்னை சேதப்படுத்தாது. சிங்கங்களின் மேலும், விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் என்று கர்த்தர் வாக்குப் பண்ணியிருக்கிறார். ஆகவே, இந்த சிங்கங்கள் என்னை சேதப்படுத்தாது” என்பதுதான் தானியேலின் விசுவாச அறிக்கை.

தானியேலை சிங்கக்கெபியிலே போடும்படி வேறு வழியின்றி ஒப்புக்கொடுத்த ராஜாவின் உள்ளத்தில்கூட அசைக்க முடியாத ஒரு விசுவாசம் இருந்தது. ஆகவே தான் தானியேலை தேடி அதிகாலையில் ஓடிவந்தார். விசுவாசத்துடனே கெபியைப் பார்த்து பேசி, ‘தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை சிங்கங்களுக்கு தப்புவிக்க வல்லவராய் இருந்தாரா?” என்று கேட்டார். ஆம், இரண்டு பேருக்குமே வல்லமையான விசுவாசம் இருந்தது. ஆகவே, கர்த்தர் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார்.

தேவபிள்ளைகளே, அன்று தானியேலின் விசுவாசத்தை கண்டு அற்புதத்தை செய்த தேவன், நிச்சயமாகவே உங்களுடைய வாழ்க்கையிலும் அற்புதத்தைச் செய்தருளுவார்.

நினைவிற்கு:- “சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்” (சங். 91:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.