AppamAppam - Tamil

Jan 16 – சிநேகிக்கிற பரிசுத்தம்!

“கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்” (மல். 2:11).

இந்த வசனத்தில் “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்” என்கிற பகுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பல வேளைகளில் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறீர்கள். குறிப்பிட்ட நண்பர்களை அதிகமாய் சிநேகிக்கிறீர்கள். உறவினர்களிலே உங்களோடு நெருங்கி பழகுகிறவர்களின்மேல் அதிக பற்றுதலாய் இருக்கிறீர்கள். அவர்களுக்கு ஏதாகிலும் தீங்கு நேரிடுமென்றால், உங்கள் உள்ளமெல்லாம் துடித்துப்போய் விடுகிறது. உங்களுக்குப் பிரியமான குழந்தையை யாராகிலும் கடத்தி போய்விட்டால் அதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

கர்த்தர் சொல்லுகிறார், “நான் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்த குலைச்சலாக்கிவிட்டார்கள்”. அவருடைய உள்ளம் எவ்வளவு துக்கமாய் இருந்திருக்கும். அவர் ஒரு சுபாவத்தை மிகவும் நேசிக்கிறாரென்றால் அது பரிசுத்தம்தான். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே ஜீவித்தபோது, எகிப்தின் பாவ சுபாவங்கள் அவர்களை பற்றிவிடக்கூடாதே என்று எண்ணினார். ஆகவே எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவர சித்தமானார். தம் பிள்ளைகளை மற்றவர்களுக்கு பரிசுத்தத்தின் முன்மாதிரியாக்குவதற்காக அவ்வாறு செய்தார். ஆம், அவருக்கு ஒரு அசுத்தக்கூட்டம் தேவையில்லை, பரிசுத்தக்கூட்டமே தேவை.

 அவர் பரிசுத்தமுள்ள கர்த்தர். உங்களையும் பரிசுத்தமுள்ளவர்களாய் மாற்றுகிறவர். “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்” (லேவி. 20:26) என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் அவருக்கேற்ற பரிசுத்தத்தில் வாழ வேண்டுமென்பதுதான் தேவனுடைய சித்தமும் பிரியமுமாகும். பரிசுத்தத்தைப் பின்பற்ற உங்களுக்கு முன் மாதிரியானவர் தேவனாகிய கர்த்தர் ஒருவரே.

ஒரு நாள் ஏசாயாவின் கண்கள் கர்த்தரைக் கண்டது. அவருடைய பரிசுத்த அலங்காரம் அவருடைய உள்ளத்தை மிகவும் தொட்டது. ஆகவே தன்னை அறியாமலேயே, ‘ஐயோ! நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள மனுஷர் மத்தியிலே வாசம் பண்ணுகிறேன்’ என்று சொல்லிக் கதற ஆரம்பித்தார். அந்த உணர்வின் வெளிச்சம், வெளிப்பாடு உங்களுக்கு வரும்போது, உங்களை அறியாமலேயே தூய்மையும், பரிசுத்தத்தைக் குறித்த வாஞ்சையும் உங்களுக்குள் வந்துவிடும். ஏசாயாவை பரிசுத்தப்படுத்தின அந்த அக்கினிக் குறடுகள் உங்களுடைய நாவையும் தொட்டு, உங்கள் வார்த்தைகளைப் பரிசுத்த மாக்க வேண்டும்.

இயேசு சொன்னார், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணரா யிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத். 5:48). தேவபிள்ளைகளே, உங்களால் பரிசுத்தமாய் வாழ முடியும். கர்த்தர் அதற்கான வழிமுறைகளை வேதத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். முன் மாதிரியை காண்பித்திருக்கிறார். உங்கள் கண்கள் எப்போதும் பரிசுத்தமுள்ள தேவனை நோக்கிப் பார்த்துக்கொண்டேயிருக்கட்டும்.

நினைவிற்கு:- “பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்” (வெளி. 22:11,12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.