AppamAppam - Tamil

Jan 15 – சம்பூரணமான பரிசுத்தம்!

“சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக” (1 தெச. 5:23).

நம்முடைய தேவன் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதிற்கும் பரிசுத்தத்தைத் தந்து, வழுவாதபடி கடைசிவரை நிலைநிறுத்துகிறவர். கர்த்தர் ஒருவரே தம்முடைய பரிசுத்தத்தை உங்களுக்குத் தர வல்லமையுள்ளவர்.

உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதே கர்த்தருடைய நோக்கம். இயேசுகிறிஸ்து வரும்போது உங்களை மாசற்றவர்களாய் நிலைநிறுத்தவே அவர் விரும்புகிறார். அதற்காகவே கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தந்திருக்கிறார். வேதத்திலே, “புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு…” (ரோமர் 15:15) என்று எழுதப்பட்டிருக்கிறது.

முதலாவது, அவர் செய்கிற காரியம், பாவத்தின் வல்லமையிலிருந்து, மனுஷனை விடுவிக்கிறார். அன்று பேதுரு பிரசங்கம் பண்ணினபோது, பரிசுத்த ஆவியானவர், வசனத்தை கேட்ட ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் கிரியை செய்ததினால் அவர்கள் பாவத்தைக் குறித்து உணர்த்தப்பட்டார்கள். “சகோதரன்மாரே இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள். பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவதுதான் இதன் காரணம் (யோவான். 16:8).

இரண்டாவது, பரிசுத்த ஆவியானவர் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு பாவத்தின்மேல் ஜெயம் தருகிறார். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள் (அப். 1:8) என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணுகிறார். ஆகவே, பரிசுத்த ஆவியின் பலத்தின் வல்லமையினாலே தோல்விகளை ஜெயமாக்குகிறீர்கள்.

மூன்றாவது, பரிசுத்த ஆவியானவர் வல்லமையைக் கொண்டு வருகிறார். ஊழியம் செய்வதற்கான வல்லமையையும், சத்துருவினுடைய கைகளிலிருந்து ஆத்துமாக்களை விடுவிக்கும் வல்லமையையும், பாதாளத்தின் வாசல்களை நொறுங்கடித்து சபைகளை ஸ்தாபிக்கிற வல்லமையையும், ஜனங்களுக்கு நன்மை செய்யும்படியான வல்லமையையும், கிருபையையும் உங்களுக்குத் தருகிறார். வேதம் சொல்லுகிறது, “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்” (அப். 10:38).

நான்காவது, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம்பண்ணி தெய்வீக சுபாவத்தை கொண்டு வந்து உங்களை பரிசுத்தத்திலே பூரணப்படுத்துகிறார். வேதம் சொல்லுகிறது, “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரி. 3:16). தேவபிள்ளைகளே, ஆவியானவர் உங்களுக்குள்ளே இருந்து, மறுரூபமாக்கப்படும் அனுபவத்திற்குள்ளே அருமையாக நடத்திச் செல்லுவார்.

நினைவிற்கு:- “நாமெல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத் தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரி. 3:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.