AppamAppam - Tamil

Jan 8 – சமாதானக் காரணர்!

“எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து” (எபே. 2:14).

 இயேசு பிரிவினைச் சுவரைத் தகர்க்கிறவர், சமாதானத்தின் காரணர். அன்று இஸ்ரவேலருக்கும், புறஜாதியாருக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் நின்றது. கர்த்தருடைய வாக்குத்தத்தங்களும், உடன்படிக்கைகளும் இஸ்ரவேலருக்கே சொந்தமாக இருந்தன. இஸ்ரவேலரும் புறஜாதியாரும் ஒருவரையொருவர் பகைத்தார்கள். சமாதானக் காரணராகிய இயேசுவோ, பகையாக நின்ற பிரிவினைச் சுவரைத் தகர்த்து, இருதிறத்தாரையும் ஒன்றாக்கினார். இருதிறத்தாருக்கும் இடையே இருந்த பிரிவினைச் சுவர் தகர்க்கப்பட்ட பிறகு அங்கு சண்டையுமில்லை, குழப்பமுமில்லை.

 இயேசு ஆணிகளால் கடாவப்பட்ட ஒரு கரத்தினால் இஸ்ரவேலரின் கரங்களைப் பிடித்தார். மறுகரத்தினால் புறஜாதியாரைப் பிடித்தார். இரண்டு பேரையும் ஒன்றாய் இணைத்துவிட்டார். கிறிஸ்தவ மார்க்கத்தில் இஸ்ரவேலரும், புறஜாதியாரும் சகோதரர்களாய் விளங்குகிறார்கள். இயேசு இணைப்பின் பாலமானபடியினால், தேவனிடத்திலும், தேவபிள்ளைகளின் மத்தியிலும் நீங்கள் சமாதானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இனி தடுப்புச் சுவர் ஒன்றுமில்லை.

ஜெர்மனி தேசத்தை, மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் பிரித்து, தடுப்பு சுவரை உண்டாக்கி, பல ஆண்டுகாலங்கள் ஆண்டார்கள். இரண்டு தேசத்து மக்களும் ஒன்றாய் இணைந்து வாழ விரும்பினபோதிலும், அரசாங்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு தடுப்புச்சுவராய் நின்று கொண்டிருந்தன. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த சுவர் உடைக்கப்பட்டு இரண்டு தேசங்களும் ஒன்றாய் இணைந்தன. பிரிந்திருந்த குடும்பங்கள் சேர்க்கப்பட்டன. ஜனங்களுக்கு அளவில்லாத ஆனந்தம். அந்த சுவர் உடைக்கப்பட்டபோது, நினைவுச் சின்னமாக அதன் உடைந்த கற்களை எடுத்துச் சென்றார்கள்.

பிரிவுக்கு காரணம் என்ன? பகை. பகைகள் பிரிவினையை வளர்க்கின்றன. பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணம் புறஜாதியாரிலிருந்து இஸ்ரவேலரை வேறு பிரித்த தடுப்புச்சுவராய் விளங்கியது. விருத்தசேதனம் இஸ்ரவேலரையும், புறஜாதியாரையும் பிரித்த மதிற்சுவராய் விளங்கியது. ஆனால் இயேசு அந்த சட்ட திட்டங்களையும், விருத்தசேதனத்தையும் தன் மரணத்தினால் அழித்து, சிலுவையின் மேல் ஆணியடித்து, வெற்றிச் சிறந்தார். புறஜாதியாருக்கும், இஸ்ரவேலருக்குமிடையே சமாதானத்தைக் கொண்டு வந்தார்.

  இன்றைக்கு சபைகளிலும், குடும்பங்களிலும்கூட பலவிதமான தடுப்புச் சுவர்கள் எழும்புகின்றன. ஒன்றாக இருந்த வீட்டில் பாகப்பிரிவினையை ஏற்படுத்தி, மத்தியில் சுவர் ஒன்று எழுப்பி, வீட்டை இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள். ஜாதி, மதபேதங்கள், செல்வம், பதவி, படிப்பு, பட்டம், நிறம் எல்லாமே தடுப்புச் சுவர்களாக எழும்புகின்றன. தேவபிள்ளைகளே, நீங்கள் இவற்றை இயேசுவிடம் கொண்டு வரும்போது, உங்கள் பிரச்சனைகளை அவர் தீர்த்து, தடுப்புச் சுவர்களை உடைத்து சமாதானத்தைத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்” (எபே. 2:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.