No products in the cart.
Jan 7 – சமாதான உடன்படிக்கை!
“…என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 54:10).
மலைகள் விலகுகின்றன. பர்வதங்கள் நிலைபெயர்ந்து போகின்றன. உங்களுக்கு யார் யாரெல்லாம் உதவிசெய்வார்கள் என்று மலைபோல நம்பினீர்களோ, அவர்களெல்லாம் விலகிப்போய் விடுகிறார்கள். பர்வதங்கள் போல யார் யாரெல்லாம் உங்கள் பட்சத்தில் உறுதியாயிருப்பார்கள் என்று எதிர்பார்த்தீர்களோ, அவர்களெல்லாம் நிலைபெயர்ந்து கைக்கழுவிப் போய்விடுகிறார்கள்.
ஆனால் கர்த்தரோ, “மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்” (ஏசா. 54:10) என்று சொல்லுகிறார். கர்த்தர் உங்களுக்குத் தருகிற சமாதானம் மாறாதது. அந்தச் சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பட்டும். கர்த்தர் உங்களோடிருக்கிறார் என்கிற உணர்வுதான் அந்தச் சமாதானத்தைக் உங்களுக்குள் கொண்டுவரும்.
இயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவான் 14:27). கர்த்தருடைய சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமல் இருக்கும்படி எப்போதும் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை சமாதானத்தைக் காத்துக்கொள்ளுவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். ஆம், முதலாவது உங்களுடைய உள்ளம் கர்த்தரோடு சமாதானமாய் இருக்கவேண்டும். சமாதானத்தைக் குலைக்கிற எந்தக் காரியத்தையும் உங்களுடைய வாழ்க்கையில் அனுமதிக்கவே கூடாது.
ஒருபோதும் உங்கள் வாழ்க்கையில் பாவங்களை அனுமதிக்காதிருங்கள். பாவங்கள் உள்ளே புகுந்துவிட்டால் உடனுக்குடன் தேவ சமுகத்திலே நிறுத்தி கர்த்தருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். இயேசு எருசலேம் குடிகளைப் பார்த்து, கண்ணீரோடு, “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கேற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்” (லூக்கா 19:42) என்று சொன்னார்.
நீங்கள் கர்த்தரோடு சமாதானமாய் இருக்கும்போது, உங்களுடைய உள்ளத்தை தெய்வீக சமாதானம் நிரப்புகிறது. எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயத்தை ஆண்டு கொள்ளுகிறது. வேதம் சொல்லுகிறது, “அவரே நம்முடைய சமாதானக் காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து… இப்படிச் சமாதானம்பண்ணி… தேவனுக்கு ஒப்புரவாக்கினார்” (எபேசி. 2:14,15).
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை உறுதியாய்ப் பிடித்துக் கொள்ளுங்கள். ‘சமாதானப் பிரபுவே, என் குடும்பத்தில் சமாதானத்தைத் தாரும்’ என்று சமாதானத்திற்காக ஜெபியுங்கள். இப்பொழுதே தேவசமாதானம் உங்கள் உள்ளத்தை நிரப்புவதாக!
நினைவிற்கு:- “அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி,.. தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ. 1:20).