AppamAppam - Tamil

Dec 31 – ஸ்தோத்திரம்!

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப் படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா, என்பார்களாக” (சங். 106:48).

வருடத்தின் இறுதி நாளுக்குள் வந்திருக்கிற உங்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் எழும்பும் ஒரே வார்த்தை ஸ்தோத்திரமாகவே இருக்கட்டும்.

இந்த வருடம் முழுவதும் கர்த்தர் உங்களோடுகூட இருந்து ஒவ்வொரு நாளும் உங்களை அருமையாய் போஷித்து, உண்ண உணவும், உடுக்க வஸ்திரமும் தந்து பாதுகாத்தாரே, சிலுவை சுமந்த தமது தோள்களிலே ஒவ்வொரு நாளும் உங்களை தூக்கி சுமந்து கொண்டு வந்தாரே, கழுகு தன் குஞ்சை தன் செட்டைகள் மேல் சுமந்து கொண்டு செல்வதைப் போல உங்களை சுமந்து கொண்டு வந்தாரே.

ஒரு தாய் தேற்றுவதுபோல தேற்றி, ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவதைப் போல அவர் உங்களுக்கு இரங்கினாரே, ஒரு சகோதரனைப் போல பாசமுடையவராய் இருந்து உங்கள்மேல் அன்பு பாராட்டினாரே, அருமையான நண்பனைப் போல இருந்து ஆற்றி தேற்றி அரவணைத்தாரே, ஆத்தும நேசராய் உங்களோடு வழிநடந்து தெய்வீக சமாதானத்தினால் உள்ளத்தை நிரப்பினாரே. தேவபிள்ளைகளே, ‘தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காய் அவருக்கு ஸ்தோத்திரம்’ என்று சொல்லுங்கள்.

தாவீது, கர்த்தர் செய்த நன்மைகளையெல்லாம் நினைவுகூர்ந்து, தன் ஆத்துமாவோடுகூட பேசி, ‘தேவன் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே’ என்று சொல்லுகிறார். வேதம் சொல்லுகிறது, “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது” (சங். 103:3-5).

இந்த 2020-ம் ஆண்டு முடியும்போதும் கர்த்தர் கிருபையாய் உங்களை ஜீவனுள்ளோர் தேசத்திலே வைத்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா!” (சங். 115:17,18).

காலம் மாற மாற, நண்பர்கள் மாறலாம். இனத்தவர்கள் வேறு பக்கமாக சென்று விடலாம். ஆனால் உங்கள் ஆத்தும நேசரோ மாறாதவராய் கிருபையுள்ளவராய் என்றென்றும் உங்களோடுகூட வழிநடந்து வருகிறார். ‘உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ என்று அவர் வாக்குத்தத்தம் சேகிறார்.

தேவபிள்ளைகளே, தேவன் உயிருள்ளவராய் இருக்கிறபடியால் உங்களை முற்று முடிய இரட்சிக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார். இந்த ஆண்டு முழுவதிலும் உங்களை நடத்தின கர்த்தர் வரும் காலத்திலும் நடத்துவார். இதுவரை சுமந்தவர் இனிமேலும் சுமப்பார், தப்புவிப்பார், ஆதரிப்பார், ஆசீர்வதிப்பார். இப்பொழுதே அவருடைய நித்தியமான கரங்கள் உங்களை அரவணைத்துக் கொள்ளுகின்றன. நித்தியமானவரின் கரங்களைப் பிடித்து நன்றியோடு ஸ்தோத்தரிப்பீர்களாக.

நினைவிற்கு:- “இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” (சங். 48:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.